5591
நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை 

நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை 
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை 

என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை 
சிந்தையிலே தனித்தினிக்கும் தௌ;ளமுதை அனைத்தும் 

செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் 
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண 

முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே   
5592
முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் 

முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே 
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும் 

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் 
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் 

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் 
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் 

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே   
5593
சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர் 

சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே 
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ 

தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ 
அகமறிந்தீர்() அனகமறிந் தழியாத ஞான 

அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே 
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ 

முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே   
 () அகமறியீர் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க   
5594
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை 

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே 
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் 

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே 
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் 

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் 
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் 

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே   
5595
குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் 

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் 
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது 

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் 
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் 

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் 
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் 

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே