5596
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் 

திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் 
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் 

உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே 
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ 

மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா 
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் 

தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே   
5597
செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் 

திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை 
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் 

மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் 
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் 

மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் 
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே 

புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே   
5598
பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான் 

புகலுவதென் நாடொறுநும் புந்தியிற்கண் டதுவே 
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே 

மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே 
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில் 

பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே 
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை 

அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே   
5599
மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் 

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ 
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே 

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை 
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் 

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் 
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம் 

பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே   
5600
இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் 

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர் 
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு 

மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர் 
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம் 

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே 
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு 

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே