5616
சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால் 
நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர் 
போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக 
நாற்றிசையும் வாழ்க நயந்து   
5617
அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற 
விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம் 
ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக 
நீதிக் கொடிவிளங்க நீண்டு   
5618
கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக 
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த 
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத் 
தெல்லோரும் வாழ்க இசைந்து   
5619
புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக 
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில் 
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம் 
ஒத்தாராய் வாழ்க உவந்து   
5620
செத்தார் எழுக சிவமே பொருள்என்றே 
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ 
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத் 
துன்மார்க்கம் போக தொலைந்து