5626
அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய் 

ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன் 
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த 

சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார் 
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம் 

மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ 
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன் 

என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி   
5627
செம்பவளத் திருமலையோ மாணிக்க விளக்கோ 

செழுஞ்சோதித் தனிப்பிழம்போ செவ்வண்ணத் திரளோ 
அம்பதுமத் திருவிளங்கும் அகலத்தான் பிரமன் 

அரன்முதலோர் ஐவர்களும் அப்பால்நின் றோரும் 
எம்பரம்என் றெம்பெருமான் புறவண்ணம் எதுவோ 

என்பாரேல் அகவண்ணம் யார்உரைக்க வல்லார் 
தம்பரம்என் றென்னைஅன்று மணம்புரிந்தார் கனக 

சபைநாதர் அவர்பெருமை சாற்றுவதென் தோழி   
5628
தேவர்களோ சித்தர்களோ சீவன்முத்தர் தாமோ 

சிறந்தமுனித் தலைவர்களோ செம்பொருள்கண் டோ ரோ 
மூவர்களோ அறுவர்களோ முதற்சத்தி அவளோ 

முன்னியநம் பெருங்கணவர் தம்இயலை உணர்ந்தோர் 
யாவர்களும் அல்லஎன்றால் யான்உணர்ந்து சொல்ல 

அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் 
ஆவலொடும் அன்பர்தொழக் கனகசபை நடிப்பார் 

அவர்பெருமை எவ்விதத்தும் அவர்அறிவார் தோழி   
5629
பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார் 

பணம்பரித்த வரையர்என்னை மணம்புரிந்த கணவர் 
விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான 

விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த 
மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார் 

மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல் 
நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால் 

நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி   
 () பணம்புரிந்த - பி இரா பதிப்பு   
5630
வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே 

விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து 
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத் 

தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் 
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை 

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் 
பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம் 

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி