5636
சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும் 

திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும் 
பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில் 

படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ 
இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர் 

இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால் 
நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர் 

நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி   
5637
சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல் 

துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம் 
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் 

இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில் 
நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய் 

நிருத்தமிடும் எம்பெருமான் நிபுணநட ராயர் 
சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து 

செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி   
5638
காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார் 

காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால் 
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால் 

விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார் 
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும் 

துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி 
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான் 

வடிவுரைக்க வல்லவர்ஆர் வழுத்தாய்என் தோழி   
5639
நாதமட்டும் சென்றனம்மேல் செல்லவழி அறியேம் 

நவின்றபர விந்துமட்டும் நாடினம்மேல் அறியேம் 
ஏதமிலாப் பரநாத எல்லைமட்டும் சென்றேம் 

இனிச்செல்ல வழிகாணேம் இலங்குபெருவெளிக்கே 
ஆதரவில் சென்றனம்மேல் செல்லவழி தெரியேம் 

அம்மம்ம என்றுமறை ஆகமங்கள் எல்லாம் 
ஓதநின்ற திருநடனப் பெருமானார் வடிவின் 

உண்மைசொல வல்லவர்ஆர் உரையாய்என் தோழி   
5640
தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத் 

தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா 
சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி 

தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி 
ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி 

இத்தனைக்கும் அதிகாரி என்கணவர் என்றால் 
ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும் 

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி