5646
மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில் 

வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி 
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம் 

எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான் 
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை 

விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம் 
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால் 

அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி   
5647
மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று 

வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க் 
கண்ணென்னும் உணர்ச்சிசொலாக் காட்சியவாய்க் நிற்பக் 

கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில் 
நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய் 

நவமாகி மூலத்தின் நவின்றசத்திக் கெல்லாம் 
அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும் 

அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி   
5648
மண்பூத முதற்சத்தி வால்அணுவில் அணுவாய் 

மதித்தஅதன் உள்ஒளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய் 
எண்பூதத் தவ்வொளிக்குள் இலங்குவெளி யாய்அவ் 

வியல்வெளிக்குள் ஒருவெளியாய் இருந்தவெளி() நடுவே 
பண்பூத நடம்புரியும் பதப்பெருமை எவரும் 

பகுத்துணர முடியாதேல் பதமலர்என் தலைமேல் 
நண்பூற வைத்தருளும் நடராஜப் பெருமான் 

நல்லசெயல் வல்லபம்ஆர் சொல்லுவர்காண் தோழி   
 () இந்தவெளி - பி இரா பதிப்பு   
5649
வண்கலப்பில் சந்திசெயும் சத்தியுளே ஒருமை 

வயங்கொளிமா சத்திஅத னுள்ஒருகா ரணமாம் 
விண்கரண சத்திஅத னுள்தலைமை யாக 

விளங்குகுருச் சத்திஅதின் மெய்ம்மைவடி வான 
எண்குணமா சத்தி இந்தச் சத்திதனக் குள்ளே 

இறையாகி அதுஅதுவாய் இலங்கிநடம் புரியும் 
தண்கருணைத் திருவடியின் பெருமைஅறி வரிதேல் 

சாமிதிரு மேனியின்சீர் சாற்றுவதென் தோழி   
5650
பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம் 

பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை 
உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை 

உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில் 
துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில் 

தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் 
அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் 

அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி