5651
பொன்வண்ணப் பூதமுதல் தன்மைஉண்மை அகத்தே 

பொற்புறமாக் கருவிளக்கம் பொருந்தவெண்மை செம்மை 
தன்வண்ணப் பசுமையொடு கருமைகலப் பாகும் 

தன்மையினில் தன்மையதாய்த் தனித்ததற்கோர் முதலாய் 
மன்வண்ணத் தொளிஉருவம் உயிர்ப்பினொடு தோன்ற 

வால்அணுக்கூட் டங்களைஅவ் வகைநிறுவி நடத்தும் 
மின்வண்ணத் திருச்சபையில் ஆடுகின்ற பதத்தின் 

மெய்வண்ணம் புகலுவதார் விளம்பாய்என் தோழி   
5652
பொற்புடைய ஐங்கருவுக் காதார கரணம் 

புகன்றஅறு கோடிஅவைக் காறிலக்கம் அவற்றுக் 
கற்புறும்ஓர் அறுபதினா யிரம்அவற்றுக் கடையா 

றாயிரமாங் கவற்றுக்கோர் அறுநூறிங் கிவைக்கே 
விற்பொலியும் அறுபதுமற் றிவைக்காறிங் கிந்த 

வியன்கரண சத்திகளை விரித்துவிளக் குவதாய்ச் 
சிற்பரமாய் மணிமன்றில் திருநடனம் புரியும் 

திருவடியின் பெருமைஎவர் செப்புவர்காண் தோழி   
5653
ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம் 

எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே 
தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை 

துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான் 
ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம் 

அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச் 
சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும் 

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி   
5654
விளங்கியஐங் கருச்சத்தி ஓர்அனந்தங் கருவில் 

விளைகின்ற சத்திகள்ஓர் அனந்தம்விளை வெல்லாம் 
வளம்பெறவே தருகின்ற சத்திகள்ஓர் அனந்தம் 

மாண்படையத் தருவிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் 
உளங்கொளநின் றதிட்டிக்கும் சத்திகள்ஓர் அனந்தம் 

ஓங்கியஇச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் 
தளங்கொளஈண் டவ்வவற்றிற் குட்புறம்நின் றொளிரும் 

சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி   
5655
காணுகின்ற ஐங்கருவின் வித்தின்இயல் பலவும் 

கருதுறும்அங் குரத்தின்இயல் பற்பலவும் அடியின் 
மாணுகின்ற இயல்கள்பல பலப்பலவும் நடுவில் 

மன்னும்இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் 
பூணும்இயல் அனந்தவகை புரிந்தபல பலவும் 

பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையுந்தான் ஆகி 
ஏணுகின்ற அவைகளுக்குட் பற்றாமல் நடிக்கும் 

எழிற்கருணைப் பதப்பெருமை இயம்புவதார் தோழி