5656
மண்முதலாம் தத்துவத்தின் தன்மைபல கோடி 

வயங்குசத்திக் கூட்டத்தால் வந்தனஓர் அனந்தம் 
பண்ணுறும்அத் தன்மையுளே திண்மை() ஒருகோடி 

பலித்தசத்திக் கூட்டத்தால் பணித்தனஓர் அனந்தம் 
எண்ணுறும்இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம் 

எல்லாமும் தனித்தனிநின் றிலங்கநிலை புரிந்தே 
விண்ணென்னும் படிஅவற்றில் கலந்துகல வாது 

விளையாடும் அடிப்பெருமை விளம்புவதார் தோழி   
 () திண்மையுளே திண்மை - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு 
தண்மையுளே திண்மை - பி இரா பதிப்பு 
திண்மையுளே தண்மை - ச மு க பதிப்பு   
5657
விண்ணிடத்தே முதன்முப்பூ விரியஅதில் ஒருபூ 

விரியஅதின் மற்றொருபூ விரிந்திடஇவ் வைம்பூக் 
கண்ணிடத்தே பிறிதொருபூ கண்மலர அதிலே 

கட்டவிழ வேறொருபூ விட்டஎழு பூவும் 
பெண்ணிடத்தே நான்காகி ஆணிடத்தே மூன்றாய்ப் 

பிரிவிலவாய்ப் பிரிவுளவாய்ப் பிறங்கியுடல் கரணம் 
நண்ணிடத்தேர்ந் தியற்றிஅதின் நடுநின்று விளங்கும் 

நல்லதிரு வடிப்பெருமை சொல்லுவதார் தோழி   
5658
வண்பூவில் வடிவுபல வண்ணங்கள் பலமேல் 

மதிக்கும்இயல் பலஒளியின் வாய்மைபல ஒளிக்குள் 
நண்பூறும் சத்திபல சத்திகளுள் வயங்கும் 

நாதங்கள் பலநாத நடுவணைஓர் கலையில் 
பண்பாய நடங்கள்பல பலபெயர்ப்பும் காட்டும் 

பதிகள்பல இவைக்கெல்லாம் பதியாகிப் பொதுவில் 
கண்பாய இவற்றினொடு கலந்துகல வாமல் 

காணுகின்ற திருவடிச்சீர் கழறுவதார் தோழி   
5659
ஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை 

உற்றனமற் றதுஅதுவும் பற்றுவன பற்றத் 
தாங்கியமா சத்திகளின் பெருங்கூட்டம் கலையாத் 

தன்மைபுரிந் தாங்காங்குத் தனித்தனிநின் றிலங்கித் 
தேங்கியபோ தவைகலையச் செய்கைபல புரிந்து 

திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி() வெளியில் 
பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை 

பகுத்துரைக்க வல்லவர்ஆர் பகராய்என் தோழி   
 () திருவில்ஒளி - பி இரா திருவிலொளி என்றும் 
பாடம் - ச மு க அடிக்குறிப்பு   
5660
விரிந்திடும்ஐங் கருவினிலே விடயசத்தி அனந்த 

விதமுகங்கொண் டிலகஅவை விகிதவிகற் பாகிப் 
பிரிந்திடுமான் இலக்கணங்கள் பலகோடி பிரியாப் 

பெருஞ்சத்தி இலக்கணங்கள் பற்பலகோ டிகளாய்த் 
தெரிந்திடுநா னிலைக்குள்ளே இருந்துவெளிப் படவும் 

செய்கைபல புரிகின்ற திறல்உடைத்தா ரகமேல் 
எரிந்திடுதீ நடுவெளிக்கண் இருந்ததிரு வடியின் 

எல்லையையார் சொல்லவல்லார் இயம்பாய்என் தோழி