5661
தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத் 

துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள் 
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி 

அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம் 
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய் 

இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில் 
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே 

உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி   
5662
உறைந்திடும்ஐங் கருவினிலே உருவசத்தி விகற்பம் 

உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணாஎண் ணிலவே 
நிறைந்தஅவை தனித்தனியே நிகழ்ந்திலங்க அவைக்குள் 

நேர்மைஒண்மை உறுவித்தந் நேர்மைஒண்மை அகத்தே 
குறைந்திலவாம் பலவேறு குணங்கள்உறப் புரிந்து 

குணங்களுளே குறிகள்பல கூட்டுவித்தாங் கமர்ந்தே 
மறைந்தமணம் வெளிப்படுத்தும் மலரடியின் பெருமை 

வகுத்துரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி   
5663
சூழ்ந்திடும்ஐங் கருவினிலே சொருபசத்தி பேதம் 

சொல்லினொடு மனங்கடந்த எல்லையிலா தனவே 
தாழ்ந்திலவாய் அவைஅவையும் தனித்தனிநின் றிலங்கத் 

தகும்அவைக்குள் நவவிளக்கம் தரித்தந்த விளக்கம் 
வாழ்ந்திடஓர் சத்திநிலை வயங்கியுறப் புரிந்து 

மதிக்கும்அந்தச் சத்திதனில் மன்னுசத்தர் ஆகி 
ஆழ்ந்திடும்ஓர் பரம்பரத்தை அசைத்துநின்று நடிக்கும் 

அடிப்பெருமை உரைப்பவரார் அறியாய்என் தோழி   
5664
பசுநிறத்த ஐங்கருவில் பகர்ந்தசுவைத் தன்மை 

பற்பலகோ டிகளாம்அவ் வுற்பவசத் திகளில் 
வசுநிறத்த விவிதநவ சத்திபல கோடி 

வயங்கும்அவைக் குள்ஆதி வயங்குவள்அவ் வாதி 
தசநிறத்த வாகஅதில் தனித்தனிஓங் காரி 

சார்ந்திடுவள் அவள்அகத்தே தனிப்பரைசார்ந் திடுவள் 
திசைநிறத்தப் பரைநடுவில் திருநடனம் புரியும் 

திருவடியின் பெருவடியைச் செப்புவதார் தோழி   
5665
பூத்தசுடர்ப் பூஅகத்தே புறத்தேசூழ் இடத்தே 

பூத்துமிகக் காய்த்துமதி அமுதொழுகப் பழுத்து 
மாத்தகைய பெருஞ்ஸோதி மணிமன்றுள் விளங்கும் 

வண்ணம்ஒரு சிறிதறிய மாட்டாமல் மறைகள் 
ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி 

இருக்கின்ற என்றுணர்ந்தோர் இயம்பிடில்இச் சிறியேன் 
தோத்திரஞ்செய் தம்மைகண்டு மகிழ்ந்திடஅம் மன்றில் 

துலங்கும்அடிப் பெருமையைஎன் சொல்லுவது தோழி