5671
அதுபா வகமுகத் தானந்த நாட்டில் 

அம்பலம் செய்துநின் றாடும் அழகர் 
விதுபா வகமுகத் தோழியும் நானும் 

மெய்ப்பா வனைசெய்யும் வேளையில் வந்து 
பொதுபா வனைசெய்யப் போகாதோ பெண்ணே 

பொய்ப்பா வனைசெய்து கைப்பானேன் ஐயோ 
இதுபாவம் என்கின்றார் என்னடிஅம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5672
அறங்காதல் செய்தேனை ஆண்டுகொண் டிங்கே 

அருட்பெருஞ் சோதியாய் ஆடும் அழகர் 
உறங்காத வண்ணஞ்சிற் றம்பலம பாடி 

உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது 
புறங்காதல் செய்வார்போல் செய்யாதே பெண்ணே 

பொற்கம்பம் ஏறினை சொர்க்கம்அங் கப்பால் 
இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5673
அந்நாள்வந் தென்றனை ஆண்டருள் செய்த 

அய்யர் அமுதர்என் அன்பர் அழகர் 
நன்னாள் கழிக்கின்ற நங்கைய ரோடு 

நான்அம் பலம்பாடி நண்ணுறும் போது 
பின்னாள்என் றெண்ணிப் பிதற்றாதே பெண்ணே 

பேரருட் சோதிப் பெருமணம் செய்நாள் 
இந்நாளே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5674
தப்போது வார்உளம் சார்ந்திட உன்னார் 

சத்தியர் உத்தமர் நித்தம ணாளர் 
ஒப்போத ஒண்ணாத மெய்ப்போத மன்றின் 

உண்மையைப் பாடிநான் அண்மையில் நின்றேன் 
அப்போதென் றெண்ணி அயர்ந்திடேல் பெண்ணே 

அன்புடை நின்னையாம் இன்புறக் கூடல் 
இப்போதே என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5675
மெய்க்குலம் போற்ற விளங்கு மணாளர் 

வித்தகர் அம்பலம் மேவும் அழகர் 
இக்குல மாதரும் யானும்என் நாதர் 

இன்னருள் ஆடல்கள் பன்னுறும் போது 
பொய்க்குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே 

பூரண நோக்கம் பொருந்தினை நீதான் 
எக்குலம் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா