5676
வெம்மத நெஞ்சிடை மேவுற உன்னார் 

வெம்பல மாற்றும்என் அம்பல வாணர் 
சம்மத மாமட வார்களும் நானும் 

தத்துவம் பேசிக்கொண் டொத்துறும் போது 
இம்மதம் பேசி இறங்காதே பெண்ணே 

ஏகசி வோகத்தை எய்தினை நீதான் 
எம்மதம் என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5677
பாரொடு விண்ணும் படைத்தபண் பாளர் 

பற்றம் பலத்தார்சொல் சிற்றம் பலத்தார் 
வாரிடு கொங்கையர் மங்கைய ரோடே 

மன்றகம் பாடி மகிழ்கின்ற போது 
ஏருடம் பொன்றென எண்ணேல்நீ பெண்னே 

எம்முடம் புன்னை() இணைந்திங் கெமக்கே 
ஈருடம் பென்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
 () எம்முடம் பும்மை - ஆ பா பதிப்பு,   
5678
மறப்பற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் 

மலப்பற் றறுத்தவர் வாழ்த்து மணாளர் 
சிறப்புற்ற மங்கையர் தம்மொடு நான்தான் 

சிற்றம் பலம்பாடிச் செல்கின்ற போது 
புறப்பற் றகற்றத் தொடங்காதே பெண்ணே 

புலைஅகப் பற்றை அறுத்தாய் நினக்கே 
இறப்பற்ற தென்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   
5679
ஆறெனும் அந்தங்கள் ஆகிஅன் றாகும் 

அம்பலத் தாடல்செய் ஆனந்த சித்தர் 
தேறறி வாகிச் சிவானு பவத்தே 

சின்மய மாய்நான் திளைக்கின்ற போது 
மாறகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே 

வல்லவள் நீயேஇம் மாநிலை மேலே 
ஏறினை என்கின்றார் என்னடி அம்மா 

என்கை பிடிக்கின்றார் என்னடி அம்மா   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 நற்றாய் செவிலிக்குக் கூறல் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5680
உணர்ந்தவர் தமக்கும் உணர்வரி யான்என் 

உள்ளகத் தமர்ந்தனன் என்றாள் 
அணிந்தனன் எனக்கே அருண்மண மாலை 

அதிசயம் அதிசயம் என்றாள் 
துணிந்துநான் தனித்த போதுவந் தென்கை 

தொட்டனன் பிடித்தனன் என்றாள் 
புணர்ந்தனன் கலந்தான் என்றுளே களித்துப் 

பொங்கினாள் நான்பெற்ற பொன்னே