5681
தனிப்பெரும் பதியே என்பதி ஆகத் 

தவம்எது புரிந்ததோ என்றாள் 
அனித்தநீத் தெனைத்தான் அன்பினால் அணைத்தான் 

அதிசயம் அதிசயம் என்றாள் 
இனித்துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் 

எனக்கிணை யார்கொலோ என்றாள் 
சனிப்பிறப் பறுத்தேன் என்றுளே களிப்புத் 

ததும்பினாள் நான்பெற்ற தனியே   
5682
புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான்செய் 

புண்ணியம் புகல்அரி தென்றாள் 
தண்ணிய மதியின் அமுதெனக் களித்த 

தயவைநான் மறப்பனோ என்றாள் 
எண்ணிய அனைத்தும் ஈந்தருள் கின்றான் 

என்னையோ என்னையோ என்றாள் 
அண்ணிய பேரா னந்தமே வடிவம் 

ஆயினாள் நான்பெற்ற அணங்கே   
5683
சத்திய ஞான சபாபதி எனக்கே 

தனிப்பதி ஆயினான் என்றாள் 
நித்திய வாழ்வு பெற்றுநான் இன்ப 

நிலைதனில் நிறைந்தனன் என்றாள் 
பித்தியல் உலகீர் காண்மினோ சித்திப் 

பேறெலாம் என்வசத் தென்றாள் 
எத்திசை யீரும் ஒத்திவண் வருக 

என்றனள் எனதுமெல் லியலே   
5684
திருமணிப் பொதுவில் ஒருபெரும் பதிஎன் 

சிந்தையில் கலந்தனன் என்றாள் 
பெருமையில் சிறந்தேன் என்பெருந் தவத்தைப் 

பேசுதல் அரிதரி தென்றாள் 
இருமையும் என்போல் ஒருமையில் பெற்றார் 

யாண்டுளர் யாண்டுளர் என்றாள் 
மருமலர் முகத்தே இளநகை துளும்ப 

வயங்கினாள் நான்பெற்ற மகளே   
5685
வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இதுதான் 

மாலையோ காலையோ என்றாள் 
எள்ளலைத் தவிர்ந்தேன் உலகெலாம் எனக்கே 

ஏவல்செய் கின்றன என்றாள் 
தௌ;ளமு தருந்தி அழிவிலா உடம்பும் 

சித்தியும் பெற்றனன் என்றாள் 
துள்ளிய மடவீர் காண்மினோ என்றாள் 

சோர்விலாள் நான்பெற்ற சுதையே