5691
நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர் 
வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே 

மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும் 

மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே   
5692
நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும் 
வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி 

வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத 

வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே   
5693
கடுங்குணத்தோர் பெறற்கரிய நடத்தரசே நினக்குக் 

கணவர்எனி னும்பிறரைக் கண்டபொழு தெனினும் 
நடுங்குணத்தால் நின்றுசில நல்வார்த்தை பகராய் 

நங்காய்ஈ தென்எனநீ நவில்கின்றாய் தோழி 
ஒடுங்குபல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் 

உபயநிலைத் தலைவருக்கும் அவர்தலைவர் களுக்கும் 
நடுங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

நடஞ்செய்அடிப் பணிக்கென்றே நாட்டியநற் குடியே   
5694
மடங்கலந்தார் பெறற்கரிய நடத்தரசே நினக்கு 

மணவாளர் எனினும்உன்பால் வார்த்தைமகிழ்ந் துரைக்க 
இடங்கலந்த மூர்த்திகள்தாம் வந்தால்அங் கவர்பால் 

எண்ணம்இலா திருக்கின்றாய் என்கொல்என்றாய் தோழி 
மடங்குசம யத்தலைவர் மதத்தலைவர் இவர்க்கும் 

வயங்கும்இவர்க் குபகரிக்கும் மாத்தலைவர் களுக்கும் 
அடங்குகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

ஆடல்அடிப் பணிக்கென்றே அமைத்தகுடி அறியே   
5695
அறங்குலவு தோழிஇங்கே நீஉரைத்த வார்த்தை 

அறிவறியார் வார்த்தைஎத னால்எனில்இம் மொழிகேள் 
உறங்குவதும் விழிப்பதும்பின் உண்ணுவதும் இறத்தல் 

உறுவதுடன் பிறத்தல்பல பெறுவதுமாய் உழலும் 
மறங்குலவும் அணுக்கள்பலர் செய்தவிர தத்தால் 

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால் 
இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய் 

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே