5696
சிவமயமே வேறிலைஎல் லாம்எனநீ தானே 

தேமொழியாய் பற்பலகால் செப்பியிடக் கேட்டேன் 
தவமயத்தார் பலசமயத் தலைவர்மதத் தலைவர் 

தத்துவர்தத் துவத்தலைவர் அவர்தலைவர் தலைவர் 
இவர்அவர்என் றயல்வேறு பிரித்தவர்பால் வார்த்தை 

இயம்புவதென் என்றாய்ஈ தென்கொல்என்றாய் தோழி 
நவமயம்நீ உணர்ந்தறியாய் ஆதலில்இவ் வண்ணம் 

நவின்றனைநின் ஐயமற நான்புகல்வேன் கேளே   
5697
ஒளிஒன்றே அண்டபகிர் அண்டம்எலாம் விளங்கி 

ஓங்குகின்ற தன்றிஅண்ட பகிர்அண்டங் களிலும் 
வெளிநின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் 

விளம்பும்அகப் புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே 
உளிநின்ற இருள்நீக்கி இலங்குகின்ற தன்மை 

உலகறியும் நீஅறியா தன்றுகண்டாய் தோழி 
தளிநின்ற ஒளிமயமே வேறிலைஎல் லாமும் 

தான்எனவே தாகமங்கள் சாற்றுதல்சத் தியமே   
5698
ஏற்றிடுவே தாகமங்கள் ஒளிமயமே எல்லாம் 

என்றமொழி தனைநினைத்தே இரவில்இருட் டறையில் 
சாற்றிடுமண் பாத்திரத்தை மரவட்டில் களைக்கல் 

சட்டிகளை வேறுபல சார்ந்தகரு விகளைத் 
தேற்றமிகு தண்ணீரைச் சீவர்கள்பற் பலரைச் 

செப்பியஅவ் விருட்டறையில் தனித்தனிசேர்த் தாலும் 
ஊற்றம்உறும் இருள்நீங்கி ஒளிகாண்ப துளதோ 

உளதேல்நீ உரைத்தமொழி உளதாகும் தோழி   
5699
பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் 

பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே 
பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே 

பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் 
உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் 

உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே 
தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் 

தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே   
5700
பிரமம்என்றும் சிவம்என்றும் பேசுகின்ற நிலைதான் 

பெருநிலையே இந்நிலையில் பேதமுண்டோ எனவே 
தரம்அறிய வினவுகின்றாய் தோழிஇது கேள்நீ 

சமரசசன் மார்க்கநிலை சார்திஎனில் அறிவாய் 
திரமுறவா யினும்எல்லாம் ஆகிஅல்லா தாகும் 

திருவருளாம் வெளிவிளங்க விளங்குதனிப் பொருளாம் 
சிரமுறும்ஓர் பொதுஉண்மைச் சிவம்பிரம முடியே 

திகழ்மறைஆ கமம்புகலும் திறன்இதுகண் டறியே