5701
இலங்குகின்ற பொதுஉண்மை இருந்தநிலை புகல்என் 

றியம்புகின்றாய் மடவாய்கேள் யான்அறியுந் தரமோ 
துலங்கும்அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ 

சொல்அளவோ பொருள்அளவோ துன்னும்அறி வளவோ 
விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த 

மேனிலைஎன் றந்தமெலாம் விளம்புகின்ற தன்றி 
வலங்கொளும்அம் மேனிலையின் உண்மைஎது என்றால் 

மவுனஞ்சா திப்பதன்றி வாய்திறப்ப திலையே   
5702
வாய்திறவா மவுனமதே ஆகும்எனில் தோழி 

மவுனசத்தி வெளிஏழும் பரத்தபரத் தொழியும் 
தூயபரா பரம்அதுவே என்றால்அங் கதுதான் 

துலங்குநடு வெளிதனிலே கலந்துகரை வதுகாண் 
மேயநடு வெளிஎன்றால் தற்பரமாம் வெளியில் 

விரவியிடும் தற்பரமாம் வெளிஎன்றால் அதுவும் 
ஆயபெரு வெளிதனிலே அடங்கும்இது மட்டே 

அளப்பதொரு வாறதன்மேல் அளப்பதரி தரிதே   
5703
கிளக்கின்ற மறைஅளவை ஆகமப்பே ரளவை 

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை 
விளக்கும்இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம் 

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே 
அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே 

அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே 
துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன் 

சொன்னவெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 தலைவி கூறல் 

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
5704
தந்தேகம் எனக்களித்தார் தம்அருளும் பொருளும் 

தம்மையும்இங் கெனக்களித்தார் எம்மையினும் பிரியார் 
எந்தேகம் அதிற்புகுந்தார் என்உளத்தே இருந்தார் 

என்உயிரில் கலந்தநடத் திறையவர்கா லையிலே 
வந்தேஇங் கமர்ந்தருள்வர் ஆதலினால் விரைந்தே 

மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் 
சந்தேகம் இல்லைஎன்றன் தனித்தலைவர் வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே   
5705
நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார் 

நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி 
என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே 

இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர் 
முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை 

முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ 
தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே