5706
முன்பாட்டுக் காலையிலே வருகுவர்என் கணவர் 

மோசம்இலை மோசம்என மொழிகின்றார் மொழிக 
பின்பாட்டுக் காலையிலே நினைத்தஎலாம் முடியும் 

பிசகிலைஇம் மொழிசிறிதும் பிசகிலைஇவ் வுலகில் 
துன்பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழிகேட் டுள்ளம் 

துளங்கேல்நம் மாளிகையைச் சூழஅலங் கரிப்பாய் 
தன்பாட்டுத் திருப்பொதுவில் நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே   
5707
உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை 

உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக் 
கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது 

கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய் 
நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப 

நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத் 
தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே   
5708
என்னுடைய தனிக்கணவர் அருட்ஸோதி உண்மை 

யான்அறிவேன் உலகவர்கள் எங்ஙனம்கண் டறிவார் 
உன்னல்அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் 

உலம்புதல்கேட் டையமுறேல் ஓங்கியமா ளிகையைத் 
துன்னுறும்மங் கலம்விளங்க அலங்கரிப்பாய் இங்கே 

தூங்குதலால் என்னபலன் சோர்வடையேல் பொதுவில் 
தன்னுடைய நடம்புரியும் தலைவர்திரு ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே   
5709
என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார் 

எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை 
இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே 

இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம் 
மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து 

மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல் 
தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே  
5710
கிளைஅனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் 

கிளர்ஒளியார் என்அளவில் கிடைத்ததனித் தலைவர் 
அளையஎனக் குணர்த்தியதை யான்அறிவேன் உலகர் 

அறிவாரோ அவர்உரைகொண் டையம்உறேல் இங்கே 
இளைவடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப 

இனிதுபுனைந் தலங்கரிப்பாய் காலைஇது கண்டாய் 
தளர்வறச்சிற் றம்பலத்தே நடம்புரிவார் ஆணை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே