5721
கண்கலந்த கணவர்எனைக் கைகலந்த தருணம் 

கண்டறியேன் என்னையும்என் கரணங்கள் தனையும் 
எண்கலந்த போகம்எலாம் சிவபோகம் தனில்ஓர் 

இறைஅளவென் றுரைக்கின்ற மறைஅளவின் றறிந்தேன் 
விண்கலந்த திருவாளர் உயிர்கலந்த தருணம் 

வினைத்துயர்தீர்ந் தடைந்தசுகம் நினைத்திடுந்தோ றெல்லாம் 
உண்கலந்த ஆனந்தப் பெரும்போகம் அப்போ 

துற்றதென எனைவிழுங்கக் கற்றதுகாண் தோழி   
5722
மாடமிசை ஓங்குநிலா மண்டபத்தே எனது 

மணவாளர் கொடுத்ததிரு அருளமுதம் மகிழ்ந்தே 
ஏடவிழ்பூங் குழலாய்நான் உண்டதொரு தருணம் 

என்னைஅறிந் திலன்உலகம் தன்னையும்நான் அறியேன் 
தேடறிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும் 

தேனும்ஒக்கக் கலந்ததெனச் செப்பினும்சா லாதே 
ஈடறியாச் சுவைபுகல என்னாலே முடியா 

தென்னடியோ அவ்வமுதம் பொன்னடிதான் நிகரே   
5723
கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும் 

கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான் 
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய் 

இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே 
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர் 

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே 
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி 

நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே   
5724
மன்னுதிருச் சபைநடுவே வயங்குநடம் புரியும் 

மணவாளர் திருமேனி வண்ணங்கண் டுவந்தேன் 
என்னடிஇத் திருமேனி இருந்தவண்ணம் தோழி 

என்புகல்வேன் மதிஇரவி இலங்கும்அங்கி உடனே 
மின்னும்ஒன்றாய்க் கூடியவை எண்கடந்த கோடி 

விளங்கும்வண்ணம் என்றுரைக்கோ உரைக்கினும்சா லாதே 
அன்னவண்ணம் மறைமுடிவும் அறைவரிதே அந்த 

அரும்பெருஞ்சோ தியின்வண்ணம் யார்உரைப்பர் அந்தோ   
5725
கள்ளுண்டாள் எனப்புகன்றார் கனகசபை நடுவே 

கண்டதுண்டு சிற்சபையில் உண்டதும்உண் டடிநான் 
எள்ளுண்ட பலவிடயத் திறங்குங்கள் அன்றே 

என்றும்இற வாநிலையில் இருத்துங்கள் உலகர் 
உள்ளுண்ட போதுமயக் குற்றிடுங்கள் அலவே 

உள்ளமயக் கனைத்தினையும் ஒழித்திடுங்கள் மடவாய் 
அள்ளுண்ட பிறரும்எனை அடுத்தடுத்துக் கண்டால் 

அறிவுதரும் அவர்க்கும்இங்கே யான்உண்ட கள்ளே