5726
காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ 

கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை 
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல் 

இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ 
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் 

பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப் 
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப் 

பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்ததிலை அம்மா   
5727
கண்ணாறு() படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால் 

கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் 
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா 

தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ 
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும் 

பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே 
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல் 

உறுகின்றேன் தோழிநின்னால் பெறுகின்ற படியே 
5728
கற்பூரம் கொணர்ந்திடுக தனித்தோழி எனது 

கணவர்வரு தருணம்இது கண்ணாறு கழிப்பாம் 
எற்பூத நிலைஅவர்தம் திருவடித்தா மரைக்கீழ் 

இருப்பதடி கீழிருப்ப தென்றுநினை யேல்காண் 
பற்பூத நிலைகடந்து நாதநிலைக் கப்பால் 

பரநாத நிலைஅதன்மேல் விளங்குகின்ற தறிநீ 
இற்பூவை அவ்வடிக்குக் கண்ணாறு கழித்தால் 

எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும் இனிதுநலந் தருமே   
5729
மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது 

மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும் 
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான் 

சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே 
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே 

திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ 
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ 

துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே   
5730
தாழ்குழலாய் எனைச்சற்றே தனிக்கவிட்டால் ஞான 

சபைத்தலைவர் வருகின்ற தருணம்இது நான்தான் 
வாழ்வடைபொன் மண்டபத்தே பளிக்கறையி னூடே 

மலரணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் 
சூழுறநான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி 

துரைக்குமனம் இல்லைஅது துணிந்தறிந்தேன் பலகால் 
ஏழ்கடலில் பெரிதன்றோ நான்அடைந்த சுகம்இங் 

கிதைவிடநான் செய்பணிவே றெப்பணிநீ இயம்பே