5731
தனித்தலைவர் வருகின்ற தருணம்இது தோழி 

தனிக்கஎனை விடுநீயும் தனித்தொருபால் இருத்தி 
இனித்தசுவைத் திரள்கலந்த திருவார்த்தை நீயும் 

இன்புறக்கேட் டுளங்களிப்பாய் இதுசாலும் நினக்கே 
மனித்தர்களோ வானவரோ மலர்அயனோ மாலோ 

மற்றையரோ என்புகல்வேன் மகேசுரர்ஆ தியரும் 
தனித்தஒரு திருவார்த்தை கேட்பதற்கே கோடித் 

தவஞ்செய்து நிற்கின்றார் நவஞ்செய்த நிலத்தே   
5732
மணவாளர் வருகின்ற தருணம்இது மடவாய் 

மாளிகையின் வாயல்எலாம் வளம்பெறநீ புனைக 
குணவாளர் அணையும்மலர் அணைஅகத்தை நானே 

குலவுமணி விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் 
தணவாத சுகந்தரும்என் தனிக்கணவர் வரிலோ 

சற்றுமயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா 
அனவாத மனத்தவரைப் புறப்பணிக்கே விடுக 

அன்புடையார் களுக்கிடுக அகப்பணிசெய் திடவே   
5733
அரும்பொன்அனை யார்எனது கணவர்வரு தருணம் 

ஆயிழைஈ தாதலினால் வாயல்முகப் பெல்லாம் 
விரும்புறுதோ ரணம்கொடிகள் பழுத்தகுலை வாழை 

விரைக்கமுகு தெங்கிளநீர் எனைப்பலவும் புனைக 
கரும்புநெல்லின் முளைநிறைநீர்க் குடம்இணைந்த கயலும் 

கண்ணாடி கவரிமுதல் உண்ணாடி இடுக 
இரும்பொடுகல் ஒத்தமனங் களும்கனிய உருக்கும் 

இறைவர்திரு வரவெதிர்கொண் டேத்துவதற் கினிதே   
5734
பதிவரும்ஓர் தருணம்இது தருணம்இது தோழி() 

பராக்கடையேல் மணிமாடப் பக்கமெலாம் புனைக 
அதிகநலம் பெறுபளிக்கு மணிமேடை நடுவே 

அணையைஅலங் கரித்திடநான் புகுகின்றேன் விரைந்தே 
கதிதருவார் நல்வரவு சத்தியம்சத் தியம்நீ 

களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே 
புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக 

புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே   
 () இப்பதிகத்தில் சிற்சில இடங்களில் "தோழீ" 
என்பதுபோல் காண்கிறது - ஆ பா   
5735
மன்றாடும் கணவர்திரு வரவைநினைக் கின்றேன் 

மகிழ்ந்துநினைத் திடுந்தோறும் மனங்கனிவுற் றுருகி 
நன்றாவின் பால்திரளின் நறுநெய்யும் தேனும் 

நற்கருப்பஞ் சாறெடுத்த சர்க்கரையும் கூட்டி 
இன்றார உண்டதென இனித்தினித்துப் பொங்கி 

எழுந்தெனையும் விழுங்குகின்ற தென்றால்என் தோழி 
இன்றாவி அன்னவரைக் கண்டுகொளும் தருணம் 

என்சரிதம் எப்படியோ என்புகல்வேன் அந்தோ