5741
வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் 

மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ 
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில் 

நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் 
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட 

கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் 
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன் 

தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே   
5742
என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே 

எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி 
பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர் 

புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ 
புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல் 

புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா 
உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான் 

உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே   
5743
ஈங்குசிலர் உண்ணுகஎன் றென்னைஅழைக் கின்றார் 

என்தோழி நான்இவர்கட் கென்புகல்வேன் அம்மா 
ஓங்குநிலா மண்டபத்தே என்கணவ ருடனே 

உவட்டாத தௌ;ளமுதம் உண்டுபசி தீர்ந்தேன் 
தேங்குழல்இங் கினிஎனக்குப் பசிவரில்அப் போது 

செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா 
ஏங்கல்அற நீஅவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை 

இருந்தவரும் விருந்தவரும் இனிதுபுசித் திடற்கே   
5744
ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் 

அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் 
மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய 

வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் 
கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் 

கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ 
வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு 

மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே   
5745
தன்வடிவம் தானாகும் திருச்சிற்றம் பலத்தே 

தனிநடஞ்செய் பெருந்தலைவர் பொற்சபைஎங் கணவர் 
பொன்வடிவம் இருந்தவண்ணம் நினைத்திடும்போ தெல்லாம் 

புகலரும்பே ரானந்த போகவெள்ளம் ததும்பி 
என்வடிவில் பொங்குகின்ற தம்மாஎன் உள்ளம் 

இருந்தபடி என்புகல்வேன் என்அளவன் றதுதான் 
முன்வடிவம் கரைந்தினிய சர்க்கரையும் தேனும் 

முக்கனியும் கூட்டிஉண்ட பக்கமும்சா லாதே