5751
திருச்சிற்றம் பலத்தின்பத் திருவுருக்கொண் டின்பத் 

திருநடஞ்செய் தருள்கின்ற திருவடிக்கே தொழும்பாய் 
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய் 

அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமு தாகிப் 
பரிச்சிக்கும் அவ்வமுதின் நிறைந்தசுவை ஆகிப் 

பயனாகிப் பயத்தின்அனு பவமாகி நிறைந்தே 
உருச்சிக்கும் எனமறைகள் ஆகமங்கள் எல்லாம் 

ஓதுகின்ற எனில்அவர்தம் ஒளிஉரைப்ப தெவரே   
 () பரிச்சிக்கும் - பரிசிக்கும் என்பதன் விகாரம்   
5752
வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே 

விரும்புறஉட் பிழிந்தெடுத்த கரும்பிரதம் கலந்தே 
தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத் 

தனித்தபர அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல் 
இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை 

இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான் 
பொடித்திருமே னியர்அவரைப் புணரவல்லேன் அவர்தம் 

புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழீ   
5753
கன்னிஎனை மணந்தபதி கனிதருசிற் சபைக்கே 

கலந்ததனிப் பதிவயங்கு கனகசபா பதிவான் 
பன்னியருக் கருள்புரிந்த பதிஉலக மெல்லாம் 

படைத்தபதி காத்தருளும் பசுபதிஎவ் வுயிர்க்கும் 
அன்னியம்அல் லாதகத்தும் புறத்தும்அகப் புறத்தும் 

அருட்செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் 
என்னியல்போல் பிறர்இயலை எண்ணியிடேல் பிறரோ 

என்பதிபால் அன்பதிலார் அன்புளரேல் எண்ணே   
5754
என்னியல்போல் பிறர்இயலை எண்ணேல்என் றுரைத்தேன் 

இறுமாப்பால் உரைத்தனன்என் றெண்ணியிடேல் மடவாய் 
பன்னியநான் என்பதியின் பற்றலது வேறோர் 

பற்றறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் 
உன்னியஎன் உயிரும்என துடலும்என துணர்வும் 

உயிர்உணர்வால் அடைசுகமும் திருச்சிற்றம் பலத்தே 
மன்னியதா தலில்நான்பெண் மகளும்அலேன் வரும்ஆண் 

மகனும்அலேன் அலியும்அலேன் இதுகுறித்தென் றறியே   
5755
பார்முதலாப் பரநாதப் பதிகடந்தப் பாலும் 

பாங்குடைய தனிச்செங்கோல் ஓங்கநடக் கின்ற 
சீர்தெரிந்தார் ஏத்துதொறும் ஏத்துதற்கோ எனது 

திருவாளர் அருள்கின்ற தன்றுமனங் கனிந்தே 
ஆர்தருபே ரன்பொன்றே குறித்தருளு கின்றார் 

ஆதலினால் அவரிடத்தே அன்புடையார் எல்லாம் 
ஓர்தரும்என் உறவினராம் ஆணைஇது நீயும் 

உறவான தவர்அன்பு மறவாமை குறித்தே