5756
நாதாந்த வரையும்எங்கள் நாயகனார் செங்கோல் 

நடக்கின்ற தென்கின்றார் நாதாந்த மட்டோ 
போதாந்த நிலையும்உயர் யோகாந்த நிலையும் 

புனிதகலாந் தப்பதியும் புகல்கின்றார் புகலும் 
வேதாந்த வெளியும்மிகு சித்தாந்த வெளியும் 

விளங்கும்இவற் றப்பாலும் அதன்மேல்அப் பாலும் 
வாதாந்தத் ததன்மேலும் அதன்மேல்அப் பாலும் 

மன்றாடி அருட்செங்கோல் சென்றாடல் அறியே   
5757
புண்ணியனார் என்உளத்தே புகுந்தமர்ந்த தலைவர் 

பொதுவிளங்க நடிக்கின்ற திருக்கூத்தின் திறத்தை 
எண்ணியநான் எண்ணுதொறும் உண்டுபசி தீர்ந்தே 

இருக்கின்றேன் அடிக்கடிநீ என்னைஅழைக் கின்றாய் 
பண்ணுறும்என் தனிக்கணவர் கூத்தாடுஞ் சபையைப் 

பார்த்தாலும் பசிபோமே பார்த்திடல்அன் றியுமே 
அண்ணுறும்அத் திருச்சபையை நினைக்கினும்வே சாறல் 
ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே   
5758
கூசுகின்ற தென்னடிநான் அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே 
ஏசுகின்றார் ஆரடியோ அண்டபகிர் அண்டத் 

திருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் 
பேசுகின்ற வார்த்தைஎலாம் வள்ளல்அருட் கூத்தின் 

பெருமையலால் வேறொன்றும் பேசுகின்ற திலையே 
வீசுகின்ற பெருஞ்சோதித் திருக்கூத்தின் திறமே 

வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்ற தன்றே   
5759
குலமறியார் புலமறியார் அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே 
புலமறியார் போல்நீயும் புகலுதியோ தோழி 

புலபுலஎன் றளப்பதெலாம் போகவிட்டிங் கிதுகேள் 
அலகறியாத் திருக்கூத்தென் கணவர்புரி யாரேல் 

அயன்அரியோ டரன்முதலாம் ஐவர்களும் பிறரும் 
விலகறியா உயிர்பலவும் நீயும்இங்கே நின்று 

மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே   
5760
கொடிஇடைப்பெண் பேதாய்நீ அம்பலத்தே நடிக்கும் 

கூத்தாடி என்றெனது கொழுநர்தமைக் குறித்தாய் 
படிஇடத்தே வான்இடத்தே பாதலத்தே அண்ட 

பகிர்அண்ட கோடியிலே பதிவிளக்கம் எல்லாம் 
அடிமலர்கொண் டையர்செய்யும் திருக்கூத்தின் விளக்கம் 

ஆகும்இது சத்தியம்என் றருமறைஆ கமங்கள் 
கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக் 

கேட்டறிந்து கொள்வாய்நின் வாட்டமெலாம் தவிர்ந்தே