5766
துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென் 

சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர் 
பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின் 

பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே 
இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான் 

எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின் 
படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம் 

பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே   
5767
ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ 

என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான் 
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம் 

கண்டபரி சென்புகல்வேன் அண்டபகிர் அண்டம் 
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே 

தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான் 
மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும் 

வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே   
5768
நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் 

நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் 
இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர் 

எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் 
திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே 

திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே 
கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு 

கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ   
5769
பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் 

பொதுநடங்கண் டுளங்களிக்கும் போதுமண வாளர் 
மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம் 

விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது 
கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன் 

களித்திடுக இனியுனைநாம் கைவிடோ ம் என்றும் 
மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண 

மாலையிட்டோ ம் என்றெனக்கு மாலையணிந் தாரே   
5770
பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப் 

பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர் 
திருத்தம்உற அருகணைந்து கைபிடித்தார் நானும் 

தெய்வமலர் அடிபிடித்துக் கொண்டேன்சிக் கெனவே 
வருத்தம்உறேல் இனிச்சிறிதும் மயங்கேல்காண் அழியா 

வாழ்வுவந்த துன்தனக்கே ஏழுலகும் மதிக்கக் 
கருத்தலர்ந்து வாழியஎன் றாழிஅளித் தெனது 

கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி