5771
தமைஅறியார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ச் 

சபைநடங்கண் டுளங்களிக்கும் தருணத்தே தலைவர் 
இமைஅறியா விழிஉடையார் எல்லாரும் காண 

இளநகைமங் களமுகத்தே தளதளஎன் றொளிர 
எமைஅறிந்தாய் என்றெனது கைபிடித்தார் நானும் 

என்னைமறந் தென்இறைவர் கால்பிடித்துக் கொண்டேன் 
சுமைஅறியாப் பேரறிவே வடிவாகி அழியாச் 

சுகம்பெற்று வாழ்கஎன்றார் கண்டாய்என் தோழி   
5772
ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய் 

அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது 
மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென் 

மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன் 
மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ 

விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது 
கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் 

கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி   
5773
காமாலைக் கண்ணர்பலர் பூமாலை விழைந்தார் 

கணங்கொண்ட கண்ணர்பலர் மணங்கொள்ளத் திரிந்தார் 
கோமாலை மனச்செருக்கால் மயங்கிஉடம் பெல்லாம் 

குறிகொண்ட கண்ணர்பலர் வெறிகொண்டிங் கலைந்தார் 
ஆமாலை அவர்எல்லாம் கண்டுளம்நாண் உறவே 

அரும்பெருஞ்சோ தியர்என்னை விரும்பிமணம் புரிந்தார் 
தேமாலை அணிகுழலாய் நான்செய்த தவந்தான் 

தேவர்களோ மூவர்களும் செய்திலர்கண் டறியே   
5774
காமாலைக் கண்ணர்என்றும் கணக்கண்ணர் என்றும் 

கருதுபல குறிகொண்ட கண்ணர்என்றும் புகன்றேன் 
ஆமாலும் அவ்வயனும் இந்திரனும் இவர்கள் 

அன்றிமற்றைத் தேவர்களும் அசைஅணுக்கள் ஆன 
தாமாலைச் சிறுமாயா சத்திகளாம் இவர்கள் 

தாமோமா மாயைவரு சத்திகள்ஓங் காரத் 
தேமாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே 

திருமாலை அணிந்தார்சிற் சபையுடையார் தோழி   
5775
மாதேகேள் அம்பலத்தே திருநடஞ்செய் பாத 

மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள் 
மாதேவர் உருத்திரர்கள் ஒருகோடி கோடி 

வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி 
போதேயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி 

புரந்தரர்கள் பலகோடி ஆகஉருப் புனைந்தே 
ஆதேயர் ஆகிஇங்கே தொழில்புரிவார் என்றால் 

ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி