5776
உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி 

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி 
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் 

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித் 
திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று 

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ 
வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி 

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே   
5777
பார்உலகா திபர்புவனா திபர்அண்டா திபர்கள் 

பகிரண்டா திபர்வியோமா திபர்முதலாம் அதிபர் 
ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்றுவிழித் திருக்க 

எனைமேலே ஏற்றினர்நான் போற்றிஅங்கு நின்றேன் 
சீர்உலவா யோகாந்த நடம்திருக்க லாந்தத் 

திருநடம்நா தாந்தத்தே செயும்நடம்போ தாந்தப் 
பேர்உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும் 

பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே   
5778
என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி 

இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் 
அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும் 

ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன் 
இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும் 

இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித் 
தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத் 

தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே   
5779
தூங்குகநீ என்கின்றாய் தூங்குவனோ எனது 

துரைவரும்ஓர் தருணம்இதில் தூக்கமுந்தான் வருமோ 
ஈங்கினிநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 

என்னுடைய தூக்கம்எலாம் நின்னுடைய தாக்கி 
ஏங்கலறப் புறத்தேபோய்த் தூங்குகநீ தோழி 

என்னிருகண் மணிஅனையார் எனைஅணைந்த உடனே 
ஓங்குறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை எழுப்புகின்றேன் உவந்தே   
5780
ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம் 

ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய் 
வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு 

விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம் 
தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால் 

சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே 
உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே