5781
மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் 

வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி 
துன்றியபேர் இருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத் 

துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் 
இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால் 

இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே 
ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே   
5782
வைகறைஈ தருளுதயம் தோன்றுகின்ற தெனது 

வள்ளல்வரு தருணம்இனி வார்த்தைஒன்றா னாலும் 
சைகரையேல் இங்ஙனம்நான் தனித்திருத்தல் வேண்டும் 

தாழ்குழல்நீ ஆங்கேபோய்த் தத்துவப்பெண் குழுவில் 
பொய்கரையா துள்ளபடி புகழ்பேசி இருநீ 

புத்தமுதம் அளித்தஅருட் சித்தர்வந்த உடனே 
உய்கரைவாய் நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே   
5783
காலையிலே வருகுவர்என் கணவர்என்றே நினக்குக் 

கழறினன்நான் என்னல்அது காதில்உற்ற திலையோ 
வேலைஇலா தவள்போலே வம்பளக்கின் றாய்நீ 

விடிந்ததுநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 
சோலையிலே மலர்கொய்து தொடுத்துவந்தே புறத்தில் 

சூழ்ந்திருப்பாய் தோழிஎன்றன் துணைவர்வந்த உடனே 
ஓலைஉறா தியானவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே   
5784
விடிந்ததுபேர் ஆணவமாம் கார்இருள்நீங் கியது 

வெய்யவினைத் திரள்எல்லாம் வெந்ததுகாண் மாயை 
ஒடிந்ததுமா மாயைஒழிந் ததுதிரைதீர்ந் ததுபேர் 

ஒளிஉதயம் செய்ததினித் தலைவர்வரு தருணம் 
திடம்பெறநான் தனித்திருக்க வேண்டுவதா தலினால் 

தேமொழிநீ புறத்திருமா தேவர்வந்த உடனே 
உடம்புறவே நான்அவரைக் கலந்தவரும் நானும் 

ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே   
5785
மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் 

வழக்கம்அது கண்டனம்நீ மணவாள ருடனே 
காலையிலே கலப்பதற்கிங் கெனைப்புறம்போ என்றாய் 

கண்டிலன்ஈ ததிசயம்என் றுரையேல்என் தோழி 
ஓலையிலே பொறித்ததைநீ உன்னுளத்தே கருதி 

உழல்கின்றாய் ஆதலில்இவ் வுளவறியாய் தருமச் 
சாலையிலே சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 

சற்றிருந்தாய் எனில்இதனை உற்றுணர்வாய் காணே