5786
இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் 

இயல்அறியார் உயல்அறியார் மயல்ஒன்றே அறிவார் 
கரவகத்தே கள்உண்டு மயங்கிநிற்கும் தருணம் 

கனிகொடுத்தால் உண்டுசுவை கண்டுகளிப் பாரோ 
துரவகத்தே விழுந்தார்போன் றிவர்கூடும் கலப்பில் 

சுகம்ஒன்றும் இல்லையடி துன்பம்அதே கண்டார் 
உரவகத்தே என்கணவர் காலையில்என் னுடனே 

உறுகலப்பால் உறுசுகந்தான் உரைப்பரிதாம் தோழி   
5787
என்னுடைய தனித்தோழி இதுகேள்நீ மயங்கேல் 

எல்லாஞ்செய் வல்லவர்என் இன்னுயிர்நா யகனார் 
தன்னுடைய திருத்தோளை நான்தழுவும் தருணம் 

தனித்தசிவ சாக்கிரம்என் றினித்தநிலை கண்டாய் 
பன்னும்இந்த நிலைபரசாக் கிரமாக உணரேல் 

பகர்பரசாக் கிரம்அடங்கும் பதியாகும் புணர்ந்து 
மன்னுநிலை மற்றிரண்டும் கடந்தகுரு துரிய 

மாநிலைஎன் றுணர்கஒளிர் மேனிலையில் இருந்தே   
5788
நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி 

நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம் 
வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர் 

வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த் 
தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த் 

திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே 
தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த 

சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே   
5789
இவ்வுலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை 

எங்ஙனம்நான் இசைப்பதுவோ என்னினும்மற் றிதுகேள் 
எவ்வமுறும் இருட்பொழுதில் இருட்டறையில் அறிவோர் 

எள்ளளவும் காணாதே கள்ளளவின் றருந்திக் 
கவ்வைபெறக் கண்களையும் கட்டிமறைத் தம்மா 

கலக்கின்றார் கணச்சுகமும் கண்டறியார் கண்டாய் 
செவ்வையுறக் காலையில்என் கணவரொடு நான்தான் 

சேர்தருணச் சுகம்புகல யார்தருணத் தவரே   
5790
பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் 

பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் 
அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம் 

ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி 
இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய் 

இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் 
துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும் 

தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே