5796
வான்கொடுத்த மணிமன்றில் திருநடனம் புரியும் 

வள்ளல்எலாம் வல்லவர்நன் மலர்எடுத்தென் உளத்தே 
தான்கொடுக்க நான்வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத் 

தலைவர்பிறர் அணிகுவரோ அணிதரந்தாம் உளரோ 
தேன்கொடுத்த சுவைபோலே தித்தித்தென் உளத்தே 

திருக்கூத்துக் காட்டுகின்ற திருவடிக்கே உரித்தாம் 
யான்கொடுக்கும் பரிசிந்த மாலைமட்டோ தோழி 

என்ஆவி உடல்பொருளும் கொடுத்தனன்உள் இசைந்தே   
5797
என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும் 

இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம் 
நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே 

நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன் 
புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா 

பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே 
வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ 

மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே   
5798
உரியபெருந் தனித்தலைவர் ஓங்குசடாந் தத்தின் 

உட்புறத்தும் அப்புறத்தும் ஒருசெங்கோல் செலுத்தும் 
துரியர்துரி யங்கடந்த சுகசொருபர் பொதுவில் 

சுத்தநடம் புரிகின்ற சித்தர்அடிக் கழலே 
பெரியபதத் தலைவர்எலாம் நிற்குநிலை இதுஓர் 

பெண்உரைஎன் றெள்ளுதியோ கொள்ளுதியோ தோழி 
அரியபெரும் பொருள்மறைகள் ஆகமங்கள் உரைக்கும் 

ஆணையும்இங் கீதிதற்கோர் ஐயம்இலை அறியே   
5799
மதம்எனும்பேய் பிடித்தாட்ட ஆடுகின்றோர் எல்லாம் 

மன்றிடத்தே வள்ளல்செயும் மாநடம்காண் குவரோ 
சதம்எனவே இருக்கின்றார் படுவதறிந் திலரே 

சாகாத கல்விகற்கும் தரம்இவர்க்கும் உளதோ 
பதம்அறியா இந்தமதவாதிகளோ சிற்றம் 

பலநடங்கண் டுய்ந்தேனைச் சிலபுகன்றார் என்றாய் 
சுதைமொழிநீ அன்றுசொன்ன வார்த்தைஅன்றோ இன்று 

தோத்திரஞ்செய் தாங்காங்கே தொழுகின்றார் காணே   
5800
எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே 

இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் 
கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே 

கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் 
நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய் 

ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் 
செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே 

சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே