5801
பெருகியபே ரருளுடையார் அம்பலத்தே நடிக்கும் 

பெருந்தகைஎன் கணவர்திருப் பேர்புகல்என் கின்றாய் 
அருகர்புத்த ராதிஎன்பேன் அயன்என்பேன் நாரா 

யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன் என்பேன் 
பருகுசதா சிவம்என்பேன் சத்திசிவம் என்பேன் 

பரமம்என்பேன் பிரமம்என்பேன் பரப்பிரமம் என்பேன் 
துருவுசுத்தப் பிரமம்என்பேன் துரியநிறை வென்பேன் 

சுத்தசிவம் என்பன்இவை சித்துவிளை யாட்டே   
5802
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் 

சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் 

பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ 
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் 

அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே 
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் 

திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி   
5803
எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் 

இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் 
மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் 

விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும் 
இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் 

இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ 
பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் 

பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே   
  கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க   
5804
காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் 

கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் 
கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில் 

குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் 
நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி 

நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே 
மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன் 

வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி   
5805
சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த 

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே 
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே 

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் 
ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம் 

உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் 
சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் 

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே