5806
சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும் 

தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் 
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால் 

ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் 
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம் 

ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் 
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் 

பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி   
5807
நான்பசித்த போதெல்லாம் தான்பசித்தார் ஆகி 

நல்லதிரு அமுதளித்தே அல்லல்பசி தவிர்த்தே 
ஊன்பதித்த என்னுடைய உளத்தேதம் முடைய 

உபயபதம் பதித்தருளி அபயம்எனக் களித்தார் 
வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் 

மணவாளர் எனைப்புணர்ந்த புறப்புணர்ச்சித் தருணம் 
தான்பதித்த பொன்வடிவம் தனைஅடைந்து களித்தேன் 

சாற்றும்அகப் புணர்ச்சியின்ஆம் ஏற்றம் உரைப் பதுவே   
 () புணர்ச்சியினோ வேற்றம் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க 
புணர்ச்சியினோ ரேற்றம் - பி இரா பதிப்பு   
5808
துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம 

சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன் 
குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம் 

குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன் 
குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் 

கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர் 
மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து 

வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி   
5809
தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில் 

தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன் 
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் 

கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச் 
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த 

சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன் 
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால் 

இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி   
5810
அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர் 

அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம் 
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால் 

எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம் 
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம் 

மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன் 
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத் 

திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே