SATHYA GNANA SABAI CASE-THE COMMISSIONER's ORDER cont....II.


Author :apj.arul


. இப்பாடல்களில் "சிவன்" என்றும் "சிற்சபை" என்றும் சொற்றொடர்கள் ஆங்காங்கே வருவது சிவாலயத்தையும், சைவ சமயத்தையுந்தான் குறிக்கிறது என்பது சீராய்வு மனுதாரரின் கருத்தாக இருக்கலாம். இவ்விரு சொற்றொடர்களைக் கொண்டே வள்ளலார் சைவாகமப்படியான சிவன் வழிபாட்டை, தான் சமரச சன்மார்க்க சங்கம் நிறுவிய பின்பும் ஏற்றுக் கொண்டார் என வாதிடுவது பொருத்தமற்றது. வள்ளலார் பெருமான் "சிவன்" என்று தமது ஆறாம் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடுவதெல்லாம் பொதுவான இறைவனைத்தான்; சிற்சபை என்று குறிப்பிடுவது இறைவன் ஒளி நடம்புரியும் சபையைத் தான். இதைத் தன் ஞானத்தால் அறிந்து, அதை வெளிப்படுத்தும் இடமாக சத்திய ஞானசபையை பெருமான் நிறுவியுள்ளார். "கடவுள் பற்றி இதுவரை நாம் கண்டதும், கொண்டதும் எல்லாம் அனைத்தும் நிலையற்றவை; உண்மைக்குப் புறம்பானவை" என்று கூறி, தான் கண்ட உண்மையை இப்பாடல்களில் வள்ளலார் எடுத்துக் கூறுகிறார். இவ்வகையில், ஞானசரியை என்ற தலைப்பில் உள்ள பாடல்களில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சீராய்வு மனுதாரரின் வாதத்துக்கு எதிராகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, பின்வரும் இரு பாடல்களில் உள்ளவற்றைக் கூறலாம்.
"கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே நீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேயுட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரை உண்மையறிந் திலீரே!" - பாடல் 4
"முயன்றுலகில் பயனடையா மூடமத மனைத்தும்
முடுகியழிந் திடவும்ஒரு மோசமில்லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும்
எம் இறைவன் எழுந்தருள இது தருணம் கண்டீர்" - பாடல் 17
21) சீராய்வு மனுதாரர் சொல்வது போல, வள்ளலார் அவர்கள் அருளிச் செய்த திருவருட்பா ஆறாவது திருமுறையில் சிவ வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மாறாக, உருவ வழிபாட்டை விலக்கி, சன்மார்க்க நெறியையே வலியுறுத்தியுள்ளார். ஆறாம் திருமுறையில் உள்ள அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் முதலிய பாடல்களும், அவர் எழுதி வெளியிட்ட பல கடிதங்களும், கட்டளைகளும், அவர் உபதேசம் செய்ததைக் கேட்டு அக்கால அன்பர் எழுதி வைத்த குறிப்புகளும் இதற்கு சான்றாக பெருமளவில் காணக் கிடைக்கின்றன. இவற்றை நாம் ஒதுக்கிவிட முடியாது. உருவ வழிபாட்டிலிருந்து விலகி, ஜோதி வழிபாட்டை வலியுறுத்தியது ஆறாம் திருமுறையில் உள்ள கீழ்க்கண்ட பகுதிகளின் மூலம் தெளிவாய் தெரிய வருகிறது. (1932 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா ஆறாவது திருமுறை - சமரச சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு)
அ) வள்ளலார் வெளியிட்ட "அற்புதப் பத்திரிக்கையில்" (பக்கம் 555-557) வள்ளலார் அவர்கள் "எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருஞ்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள், தாமே திருவுள்ளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய இலட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தாலியற்றுவித்து, இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளை எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் எனும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ்சோதியராய் வீற்றிருக்கின்றார்" என்றும், "சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்றும், பூரணம் பொது வெளியில், அறிவாரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆ) வள்ளலார் அவர்களால் வெளியிடப்பட்ட உண்மைப் பத்திரிக்கையில், (பக்கம் 558) "இப்போது வருகிற நமது கடவுள் இதற்குமுன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டு கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார். இதே உண்மைப் பத்திரிகை 1932ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாலகிருஷ்ணப்பிள்ளை அவர்களின் பதிப்பிலும் 'சன்மார்க்கப் பெரும்பதி வருகை' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இ) வள்ளலார் அவர்களால் வழங்கப்பட்ட உபதேசத்தில் (பக்கம் 572 - 573)இதற்கு மேற்பட நாம் நாமும், பார்த்தும், கேட்டும் இலட்சியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் இலட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்என்றும், “இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும இலட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்.தெய்வத்தைப் பற்றி குழுஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர வள்ளலாரின் உபதேசப் பகுதிகளிலும் அவர் சைவ, வைணவ நெறிகளிலிருந்து விலகி அன்பை முன்னிலைப் படுத்திய சமரச சன்மார்க்கம் கண்டதை தெளிவுபடுத்தியுள்ளார்.
22. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியது 1865 ஆம் ஆண்டிலாகும். அதன் பின்பும் அதன் நடைமுறைகளிலும், பெயரிலும், அமைப்பிலும் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வந்திருக்கிறார். சமரச வேத சன்மார்க்க சங்கம் என்று 1865ல் துவக்கியதை பின்னர் 1872ல் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் எனப் பெயர் மாற்றி அறிவித்துள்ளார். இதே ஆண்டில் தான் அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவியுள்ளார். சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய 1865க்கும், 1872க்கும் இடையில் வள்ளலாரின் பாடற் கருத்துக்களில் அவரது முந்தைய கொள்கை அடிப்படையில் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. இம்மாற்றங்கள் அனைத்தும் இறைவன் உருவமற்ற ஜோதிமயமானவர் என்ற நிலையை நோக்கிய படித்தளங்களாகவே அமைந்துள்ளன. தன் வழியைப் பின்பற்றும் சன்மார்க்க நெறி அன்பர்களை, மெதுவாக, கவனமாக அவர் சத்திய ஞான சபை வழிபாட்டு நெறிமுறைகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். சரியான ஒரு கட்டத்தில் சத்திய ஞான சபையினை நிறுவி அங்கு முற்றிலும் உருவ வழிபாடு இல்லாத, ஜோதி வழிபாட்டைத் துவக்கியிருக்கிறார். உண்மை நிலை இவ்வாறிருக்க, முற்காலப் பாடல்களில் உள்ள ‘ சிவ’, ‘ சிற்சபை’ என்ற பொதுவான வார்த்தைகளை மட்டும் வைத்து வள்ளலார் சைவாகம ரீதியான உருவ வழிபாட்டில் தன் இறுதிக் காலத்திலும் நிலைத்திருந்தார் எனக் கூறுவது வியப்புக்குரியது.
23. மனுதாரர் சபாநாத ஒளி சிவாச்சாரியாரின் முன்னோடியான ஆடுர் சபாபதி சிவாச்சாரியாரை வள்ளலார் அவர்கள் சைவ முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தம்மிடம் அமர்த்தியிருந்தார் என்று சீராய்வு மனுதாரரால் குறிப்பிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை. சபாபதி சிவாச்சாரியார் 1869ல் தான் வள்ளல் பெருமானிடம் வந்து சேர்ந்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பு சபாபதி சிவாச்சரியார் வள்ளலாருக்குப் பழக்கமானவர் என்றாலும், வள்ளலாரிடம் வந்து நிரந்தரமாகத் தங்கியது 1869 முதல்தான். வள்ளலார் ஒரு மகான். தம் எழுத்துக்கள் அனைத்திலும் ஓர் அதீதப் பணிவை, எளிமையை அவர் காட்டியுள்ளார். அதே பணிவைத்தான் அவர், தான் சபாபதி சிவாச்சாரியாருக்கு 1868ல் எழுதிய கடிதத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். இக்கடித வாசகங்களைக் கொண்டு, சபாபதி சிவாச்சாரியார் வள்ளலாருக்கும் மேலான மகான் என்றும, அவர் சொன்னபடியெல்லாம் தான் வள்ளலார் நடந்தார் என்றும், அவரை வைத்து சத்திய ஞான சபையில் வள்ளலார் சிவகாமி பூஜையை செய்து வந்தார் என்றும் சொல்ல முயல்வது முற்றிலும் உண்மைக்கு மாறானவை. விசாரணையின்போது சமர்ப்பித்த அறங்காவலர் பட்டியலைப் பார்க்கும் போது, முதலியார், ஐயர், சிவாச்சாரியார், ரெட்டியார், செட்டியார் மற்றும் பல்வேறு வகுப்பினைச் சேர்ந்தவர்கள் சத்திய ஞான சபையின் அறங்காவலர்களாக, பல்வேறு காலங்களில் பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அந்த அடிப்படையிலேயே, சீராய்வு மனுதாரரின் முன்னோர்கள் அறங்காவலர் குழுவில் பங்கேற்றிருக்கலாம். இதனால் மட்டுமே சத்ய ஞான சபையில் சிவ வழிபாடு நடைபெற்று வந்தது என்று கூற இயலாது. மனுதாரர் அளித்துள்ள ஆவணங்களில், அவர் சத்திய ஞான சபையில் அர்ச்சகராக முறைப்படி நியமிக்கப்பட்டதற்கோ, பணியாற்றியதற்கோ ஆதாரம் இல்லை.
24. சத்திய ஞான சபை கட்டடம் கட்டும் பணி 1871ல் துவங்கப்பட்டு, 1872ல் முடிவடைந்து, சத்திய ஞான சபையின் முதல் தைப்பூச விழா 25.1.1872 அன்று நடைபெற்றிருக்கிறது. அதே நாளன்று தான் சபையைப் பற்றிய விளம்பரம் ஒன்றை பெருமான் வெளியிட்டிருக்கிறார். பின்னர் 18.4.1872 அன்று அருட்பெருஞ்ஜோதி அகவலை அடிகளார் அருளினார் “ அருட்பெருஞ்ஜோதி அகவற் பாவானது வள்ளல் பெருமானுக்கு அருட்தரிசனம் உண்டாகும் காலையில் அருளிச் செய்த தென உணரப்பட்டேன்” என்று பெருமானோடு பழகியவர்களுள் ஒருவரான ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். இத்தகு சிறப்பு மிக்க அருட்பெருஞ் ஜோதி அகவலில் “திரை விளக்கம்” என்ற தலைப்பில் அடிகள் தெரிவித்துள்ளவாறுதான் சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் செய்யும் முறையை பெருமான் வகுத்துள்ளார் என்பது தெளிவு.
25. சத்திய ஞான சபையில் நாள்தோறும் வழிபாடு நடைபெற்று வந்தாலும், பெருமானது கெள்கையின்படி நடைபெறவில்லை எனத் தெரிகிறது. எனவே சபைக்குரிய வழிபாட்டு விதிகளை பெருமான் 18.7.1872 அன்று வகுத்தருளினார் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்ற அந்த அறிவிக்கையில்தான் பெருமான் சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிக்கைப் பத்திரிக்கை வள்ளலாரால் வெளியிடப்பட்டதன்று என்பது சீராய்வு மனுதாரரின் வாதம். இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் எதையும் அவர் அளிக்கவில்லை. இந்த விளம்பரம் ‘ஞானசபை விளக்க விபவ பத்திரிக்கை’ என்று பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பிலும் (1932),சமரச சுத்த சன்மார்க்க சங்கப் பதிப்பிலும் (1932) வந்துள்ளது. இந்தப் பத்திரிகை பற்றி பாலகிருஷ்ணப்பிள்ளை ‘ஞானசபைக் கதவை நேர்ந்த காலத்தில் திறந்து, நேர்ந்தவர்களுக்குக் காட்டி மரியாதையில்லாது இருந்ததைப் பற்றி ஸ்ரீ சங்க பிரபுக்களில் ஒருவராகிய உத்தரவாதமுடைய ஆறுமுக முதலியார் சன்னிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டதற்கு வெளியான பத்திரிகை என்பது ஒர் பிரததியில் கண்ட இத் தெய்வத் திருமுக வரலாறாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களின் கூற்றுக்கள், அறுவகைச் சமய நெறிகளினின்று விலகி, சாதி பேதமற்ற சமரச சத்திய சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவியதன் நோக்கம், முதலிய அனைத்தையும் நோக்கினால் 18.7.1872 நாளிட்ட, அவர் கைப்பட எழுதிய சபை நடைமுறை விதிகள் அறிவிக்கை உண்மையானதே என்பது புலனாகும். வள்ளல் பெருமானாரின் முதல் ஐந்து திருமுறைகளும் சமயத்துக்குட்பட்ட சொருப தோத்திரமாயும், ஆறாவது திருமுறை சமயாதீத பரவஸ்துவின் இலக்கணத்தை உள்ளடக்கி நிற்கும் தோத்திரப் பாக்களாயும் அமைந்த நிலையில், அதிலும் ஆகம சாஸ்திர முறைப்படி சத்ய ஞான சபை அமைக்கப்படாத நிலையில், அங்கு ஆகம சாஸ்திரப்படி பூஜைகள் நடைபெற்று வந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
26. சீராய்வு மனுதாரர் தன் மனுவில், திரு. சபாபதி சிவாச்சாரியாரிடம், வள்ளல் பெருமான் ஒரு நிலைக் கண்ணாடியையும், தீபத்தையும் கொடுத்து,தற்போது நடைபெற்று வருவது போன்ற பூஜையைத் தொடங்கி வைத்தார் எனக் குறிப்பிட்டு, அதற்கு சான்றாக வள்ளல் பெருமான் தம் கைப்பட எழுதிக் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இதையே விழுப்புரம் இணை ஆணையர் முன்பு விசாரணையின் போதும் ஒரு சான்றாவணமாக தாக்கல் செய்துள்ளார். இந்த சான்றாவணத்தில் வருடம், தேதி, நாள் , கிழமை முதலிய எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இதில் உள்ள திரு. சபாபதி விசாச்சாரியாரின் கையொப்பமும், வள்ளலாரின் கையொப்பமும், அவர்களுடையது தான் என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் ஆவணத்தின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை என்றும் விழுப்புரம் இணை ஆணையர் தன் ஆணையில் குறிப்பிட்டுள்ளார். விழுப்புரம் இணை ஆணையரது உத்தரவில் இந்த ஆவணம் குறித்து குறிப்பிட்டுள்ள கருத்துக்களை மறுப்பதற்கு ஆதாரம் எதையும் சீராய்வு மனுதாரர் தற்போதும் தாக்கல் செய்யவில்லை. மேலும், அவர் தாக்கல் செய்துள்ள சான்றாவணத்தில் ஸ்படிக லிங்கமும் இடம் பெறவில்லை அதில் உள்ள இராமலிங்க அடிகளாரின் கையொப்பமும் மற்ற ஆவணங்களோடு ஒப்பிடும்போது மாறுபாடுகிறது.
27. சீராய்வு மனுதாரர் குறிப்பிடும் உ. “ சிவமயம்” சொற்கள் சிவ வழிபாட்டை வலியுறுத்தும் என்பதை எதிர் மனுதாரர்கள் மறுத்துள்ளனர். மேலும் மேற்கண்ட வார்த்தைகளை வள்ளலார் சித்தி பெற்ற பின்பு பயன்படுத்தவில்லை என்றும் எதிர் மனுதாரர்கள் வாதிக்கின்றனர். மேலும், மேற்கண்ட சொற்களைப் பயன்படுத்துவதனாலேயே சத்ய ஞான சபையில் சிவ வழிபாட்டு முறை உள்ளதாகக் கூற இயலாது. ஏற்கனவே தெரிவித்தபடி சை ஆகமப்படி உருவாக்கப்பட்ட கோயில் வேறு சத்திய ஞான சபை முற்றிலும் வேறுபாடான அமைப்புள்ளது.
28. மேலும், விழுப்புரம் இணை ஆணையாளர் தமது உத்தரவின் மூலம், வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலைய சட்டத்தின் ஆளுகையிலிருந்து எடுத்துவிட்டதாகவும் சீராய்வு மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதனை எந்த அடிப்படையில் மனுதாரர் குறிப்பிடுகின்றார் எனத் தெரியவில்லை. மனுதாரர் உருவ வழிபாடு உள்ள நிறுவனங்களே இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வரும் என்று அவர் கருதி அதன் அடிப்படையில் மேற்கண்டவாறு கூறியிருக்கலாமெனத் தெரிகிறது. சட்டப்பிரிவு 6 (20) ல் திருக்கோயில் என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதில், திருக்கோயில் என்பது “பொது மத வழிபாடு’’ நடைபெறும் இடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உருவ வழிபாடு கட்டாயமாக்கப்படவில்லை. உருவ வழிபாடு இல்லாவிட்டாலும், பொது வழிபாடு இருக்குமேயாயின், அந்த வழிபாட்டுத்தலம் இந்து சமய அறநிலைய சட்டத்தின் கீழ் வருமென உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவாக்கியுள்ளது. இதனடிப்படையில் தான் வள்ளலார் தெய்வ நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை சட்டத்துக்குட்படுத்தி இந்து சமய அறநிலைய வாரியம் தன் 12.2.1935 நாளிட்ட ஆணையில் அறிவித்துள்ளதும், இதன் நிர்வாகத்துக்கு 28.9.1953 அன்று திருத்தப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, சீராய்வு மனுதாரரின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
29. வள்ளலார் பெருமானுடன் நெருங்கிப் பழகி அவரது முதல் சீடனாக விளங்கிய தொழுதாவூர் வேலாயுத முதலியார் அவர்கள் 1882 ஆம் ஆண்டு பட்ங்ர்ள்ர்ல்ட்ண்ஸ்ரீஹப் நர்ஸ்ரீண்ங்ற்ஹ் யாருக்கு அளித்த வாக்குமூலத்தில் வள்ளலாரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் சாதி வேற்றுமையை கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டிற்கு உரியவராக இல்லை. ஆயினும், எல்லா சாதியாரும் பெருந்திரளாக அவரை சூழ்ந்திருந்தனர்.
“ இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவிப்பதில்லை. தனது மார்க்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்று இடையறாது வற்புறுத்தியுள்ளார்.” அவர் போதித்தவற்றுள் சில பின்வருமாறு ................
5, மக்களால் ‘ கடவுள்’ என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே, இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒளியாக இயங்கச் செய்கிறது.
6. மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெறக் கூடும்.
30. இராமலிங்க அடிகளார் 19 ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஒரு மிகப் பெரிய ஞானி ஆவார். அவர் புத்தருக்கு அடுத்தபடியாக சமயத்துக்கென்றே ஒரு சங்கத்தை நிறுவிய தகைமையாளர். சாதி, பேதமின்றி, ஏற்றத்தாழ்வு, இல்லாத எல்லா உயிர்களிடத்தும் அன்பை முன்னிலைப்படுத்திய ஒரு கொள்கையை அடிப்படையாக வைத்து அதையே தனது அமைப்பாக அறிவித்தார். வள்ளல் பெருமான் கடந்து வந்த ஞானத் தேடல் எனும் பாதை மிக நீண்டதாகும். இப்பாதையின் ஒவ்வொரு கட்டமும் இறைவனை அடைய விரும்பும் மனிதனின் குறிப்பிட்ட நிலையைப் பிரதிபலிப்பதாகும். சத்ய ஞான சபையை நிறுவும் காலம் வரை வள்ளலார் சைவ சமயத்தின் இயல்பான கொள்கையை மக்களுக்கு எடுத்தோதி வந்தார். உருவ வழிபாட்டைக் கடைப்பிடிப்பதால் சாதி, இன பேதத்தை அகற்ற முடியவில்லை என்ற காரணத்தால். பரிபக்குவம் பெற்ற சமரச சன்மார்க்கியர்க்கென ஜோதி வழிபாட்டை எடுத்துக் காட்டி அதற்கென சத்திய ஞான சபையை வள்ளல் பெருமான் நிறுவினார். அருட்பெருஞ்ஜோதி அகவல் வள்ளலாராலேயே எழுதப்பட்டது. இதில் வரும்
“ சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி ”
“ சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாய் அருட்பெருஞ்ஜோதி ”
“ முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ”
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ”
சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த
அமயன் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி”
வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே ”
- எனும் பாக்களும்.
- அனுபவ மாலையில் வரும்
சாதி சமயங்களிலே வீதிபல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்றெனவே
ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்தபடியே
அன்பால் இன்றுண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்”
என்பதும் இங்கு நோக்கத்தக்கவை.
31. அருட்பெருஞ் ஜோதி தரிசனம் கிடைத்த பின்பு அருட்பெருட் ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்திய கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் வண்ணம் சத்ய ஞான சபையை நிறுவினார். சத்திய ஞான சபை எந்த சைவ ஆகமத்திலும் உட்படாத, முற்றிலும் தனித்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு மையமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்பி அதை அவ்வாறே படைத்தார். அதற்கென சிறப்பு வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொடுத்தார். ஆறாம் திருமுறையில உள்ள கருத்துக்கள் அனைத்தும் உருவ வழிபாட்டை வலியுறுத்துபவனவாகும். ஆறாம் திருமுறையானது வள்ளலார் வாக்கின்படி சமரச சுத்த சன்மார்க்கம் பெற வேண்டிய சாதகர்களுக்கே உரித்தனவாகும். இந்த ஆறாவது திருமுறையைக் கையாள்பவர்கள் வள்ளற் பொருமான் காட்டியுள்ளபடி புனிதமுறும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பட்டு உரிமையைப் பெற்று, ஜீவ காருண்யத்தையே தெய்வ வழிபாடாகக் கொண்ட சமரச நன்னிலை எய்திய பக்குவ நிலை உடையவர்களேயாவார். இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள், இவ்வரலாற்று உண்மைகளை சீராய்வு மனுதாரர் மறைக்க முயல்வது வள்ளலார் பெருமானுக்கு அவர் செய்யும் நன்றியாகாது.
32. எனவே, வள்ளலார் பெருமான் அருளிச் ùன்ற 18.7.1872 ல் ஏற்படுத்தப்பட்ட சபை வழிபாட்டு விதியில் சொல்லியபடி அதாவது ஜோதி தீபம் தகரக் கண்ணாடியில்தான் காட்ட வேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும் என்றும், ஜோதி தீபம் காட்டும் போது, மக்கள் அமைதியாக நின்று சத்தம் செய்யாமல், அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஒதவேண்டும் என்றும், உபதேசங்களில் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். என்றும் வள்ளலார் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இணை ஆணையர், பிறப்பித்துள்ள 18.9.2006 நாளிட்ட உத்தரவு சட்டப்படியும், உண்மையின் அடிப்படையிலும் சரியானதே என்றும்., அதை ரத்து ùச்யய வேண்டிய அவசியம் இல்லை என்றும் உத்தரவிடப்படுகிறது. சத்திய ஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது. அவர் வகுத்த சட்டதிட்ட நெறிமுறைகளின்படிதான் இந்த சபை நடத்தப்படவேண்டும். சத்திய ஞான சபை உள்ளிட்ட வள்ளலார் தெய்வநிலையங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனமாகும். இதன் நிர்வாகத்தையும், பூசை முறைகளையும் செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இதன் அறங்காவலர்களையும், செயல் அலுவலரையுமே சேரும். சத்திய ஞான சபையில் மேலே தெரிவித்தபடி வள்ளலார் வகுத்து 18.7.1872 அன்று அறிவித்த வழிபாட்டு முறைகள் படிதான் இங்கு இனி வழிபாடுகள் நடைபெறவேண்டும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டியது அறங்காவலர் குழு மற்றும் செயல் அலுவலரின் தலையாய கடமையாகும். இந்நிலையில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்து ஆணையிடப்படுகின்றன.
என்னால் சுருக்கெழுத்தருக்கு பகரப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

ஓம் த. பிச்சாண்டி,
சிறப்பு ஆணையர் மற்றும் ஆணையர் .
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை
சென்னைKindly click here to ask your clarification/comments about this article