சிவவாக்கியமும் அருள்வாக்கியமும்


Author :Pazhanivel Arumugam


சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 4
அன்பர்களுக்கு வணக்கம்!
நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ (சிவவாக்கியம்)
சிவவாக்கியாரின் இப்பாடலை அறியாத தமிழர்களே கிடையாது எனச் சொல்லும் அளவிற்கு மிகப்பிரபலமானது இப்பாடல். ஆனால் இப்பாடலுக்கு தமிழர்களாகிய நாம் மதிப்பளித்தோமா? எனக்கேட்டால் இல்லை. மதிப்பளித்திருந்தால் உருவ வழிபாடு 14ம் நூற்றாண்டிலேயே முடிவுக்கு வந்திருக்கும்.
இப்பாடலின் பொருளை சற்று நோக்குவோம். கருங்கல்லை நட்டு வைத்து, அக்கல்லையே தெய்வம் என போற்றி அதற்கு பூக்களை சாற்றி பூஜை செய்து மந்திரம் என்று எதனையோ முணுமுணுத்துக்கொண்டு அக்கல்லை சுற்றி வருகிறீர்களே! நீங்கள் சொல்லும் மந்திரத்தால் நட்டுவைத்த கருங்கல் பேசுமோ? பேசாது. பிணத்தை ஒத்த கல்லால் பேசமுடியுமா? பிணம் பேசும், ஆம் பிணமாகிய நாம் பேசுகிறோம். எப்போது? பிணத்தினுள் நாதன் இருக்கையில் பேசுகிறோம். எனவே பேசும் நீங்கள் தெய்வமா? பேசாத கருங்கல் தெய்வமா? நாதன் எதனுள் இருக்கிறது? என்பதனை அறியவேண்டும். சமையல் செய்ய பயன்படுத்தும் சட்டியும் சட்டுவமும் அந்த சமையல் ருசியினை அறியுமா? அறியாது. நாதனை உள்ளுக்குள் கொண்டிருக்கும் நம்மால்தான் அதன் சுவையினை அறியமுடியும்.
நாதன் இல்லா ஒரு பிணத்தின் நாக்கில் வெள்ளக்கட்டியினை வைத்தால் வெள்ளம் கரையாமல் இருக்கும். அதுபோல் மயக்கத்தில் இருக்கும் ஒருவரின் நாவில் வைக்கப்பட்ட வெள்ளம் கூட கரையாமல் அப்படியே இருக்கும். காரணம் இருநிலையிலும் நாதன் செயல்படவில்லை. எப்போது நாதன் செயல்படுகிறதோ அப்போதுதான் நா சுவையறியும்.
சிவவாக்கியார் இப்பாடல் மூலம் உருவ வழிபாட்டினையும், அதற்கு பூஜை செய்வதையும், பூஜையின்போது அதற்கு மந்திரம் சொல்வதையும் கடுமையாக சாடியுள்ளார். இறைவன் என்னும் நாதன் நாம் வணங்கும் உருவங்களிலோ, கல்லிலோ, படங்களிலோ இல்லை. இறைவன் என்னும் நாதன், நம் ஒவ்வொருவர் உடலிலும் இருப்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறார். இதன்மூலம் அவர் அகவழிபாட்டுக்கு நம்மை அழைக்கிறார்.
சிவவாக்கியார் முன்னொரு பாடலில் 'என்னகத்துள் என்னை அன்றியாதும் ஒன்றுமில்லையே! என பாடியிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே அவர் துவைத தத்துவத்தை நிலைநாட்டியிருப்பார். இங்கும் நாதன் என்பதை இறைவன் என்ற பொருளில் பாடினாரா? இல்லை 'நானாகிய ஆத்மா' என்ற பொருளில் பாடினாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. துவைத தத்துவத்தின்படி ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. எனவே நாதன் என்பது அவரவர்களுடைய ஆத்மாவினையே குறிப்பதாக சிவவாக்கியார் பாடியிருப்பார் என்பது எமது நோக்கு. ஒருவேளை 'நாதன்' என்பதை 'இறைவன்' என நாம் எடுத்துக்கொண்டால், சிவவாக்கியார் துவைத தத்துவத்திலிருந்து முன்னேறி அத்வைத தத்துவத்திற்கு வந்துவிட்டார் எனலாம்.
இனி சிவவாக்கியம் எவ்வகையில் அருள்வாக்கியத்தோடு இங்கே உரசுகிறது என்பதனை பார்போம்.
வள்ளற்பெருமான், ஏதேனும் ஒரு உருவத்தைக்கொண்டுதான் தியானிக்க வேண்டும் என்கிறார். அதாவது அவ்வுருவத்தை வழிபாடு செய்தல் கூடாது, மாறாக அவ்வுருவத்தை மனதின்கண் நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்கிறார். ஆகவே தியானம் செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு உருவம் தேவை என்பதை இங்கே கீழ்காணுமாறு தமது உரைநடைப்பகுதியில் கூறுவதை பார்க்கலாம்,
"தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமாயிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்." (உரைநடைப்பகுதி பக்கம் 398)
ஆகவே தியானிப்பதற்கு ஓர் உருவம் தேவை, அவ்வுருவமும் இறுதிநிலையில் அருவமாகும் என்பதால் நாம் தியானிப்பதற்கு மட்டும்தான் உருவத்தை பயன்படுத்த வேண்டுமே அல்லாது வழிபாட்டுக்கு அல்ல. எனவே இங்கே சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் இணைகிறது.
"தங்களைப் பார்க்க வேண்டுமானால், என்னைப் பாருங்கள், என்னைப் பார்க்க வேண்டுமானால் தங்களைப் பாருங்கள், தங்களைப் பார்த்தால், என்னைப் பார்ப்பீர்கள், என்னைப் பார்த்தால், தங்களைப் பார்ப்பீர்கள்" (உரைநடைப்பகுதி பக்கம் 402)
வள்ளற்பெருமான், இறைவனை பார்க்க வேண்டுமானால், நம்மை நாம் பார்க்கவேண்டும் என்கிறார். எனவே இங்கேயும் சிவவாக்கியரோடு வள்ளற்பெருமான் சமரசம் ஆகிறார். உருவத்தை பார்த்து வழிபட்டால் இறைவன் காட்சிகொடுப்பார் என்று இருவரும் சொல்லவில்லை.
நம்மை நாம் பார்க்கவேண்டுமானால், நாம் இறைவனைப் பார்க்கவேண்டும். இறைவனை எப்படி பார்ப்பது?
இறைவனை பார்க்கவேண்டுமானால், நம்மை நாம் பார்க்கவேண்டும், நம்மை நாம் எப்படி பார்ப்பது?
அகவழிபாட்டின்மூலம் நமக்கு ஆன்ம தரிசனம் கிடைத்தால், அங்கே இறைவனைக் காணலாம். ஆன்மதரிசனம்தான் நம்மை நாம் பார்ப்பது. தங்களைப் பார்த்தால் என்னைப் பார்ப்பீர்கள், என்னைப் பார்த்தால் தங்களைப் பார்ப்பீர்கள் என்ற இருவேறு பேதமற்ற அபேத நிலையில் அத்வைத நிலையில் நம்மிடம் இறைவன் இருப்பதை பார்க்கலாம் என்கிறார் வள்ளற்பெருமான்.
நலிதரு சிறிய தெய்வமென்று அய்யோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதரு ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் (திருஅருட்பா - 3472)
'முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா' என சிவவாக்கியம் நம்மைப்பார்த்து கேள்வி எழுப்புகிறது?
இங்கே சிவவாக்கியார் வேதாந்திகளை சாடுகிறார். அவர்கள் தன்முன்னே உள்ள நட்ட கல்லிற்கு பூஜை செய்கையில் சமஸ்கிருத மொழியில் கூறப்படும் ஓசையானது தமிழராகிய சிவவாக்கியருக்கும் நமக்கும் எப்படி கேட்கும்? அது 'முணமுண' என்றுதானே கேட்கும்! அப்படிப்பட்ட விளங்காத மந்திரம் நமக்கு தேவையா? என்பதாக இதனை நாம் புரிந்துக்கொள்ளலாம். சரி, புரியும்படி தமிழில் கூறினால் அதனை மந்திரமாக ஏற்கலாமா? சிவவாக்கியார் அதனையும் சாடுகிறார். நட்டக்கல்லிற்கு முன்பு நாம் எதனை கூறினாலும், அது - பிணத்திற்கு மாலையிட்டு அதன் முன்பு அழுவதற்கு சமம், என்றே கருதுகிறார். நட்டக்கல் எப்படி பேசாதோ, அதுபோல் நாம் பேசுவதும் அது அறியாது என்கிறார். எனவே மந்திரம் என்பது இல்லை என்பது சிவவாக்கியார் கருத்து.
வள்ளற்பெருமானும் மந்திரம் என்பது 'பரிபாஷை' என்கிறார். பரிபாஷை என்றால் குறியீடு என்று பொருள். தண்ணீர் என்பதை H2O என்ற குறியீட்டில் நாம் குறிப்பது போன்று சில மூர்த்திகளை குறிக்க பயன்படுத்துவதே மந்திரம் ஆகும். இம்மந்திரம் அம்மூர்த்திகளின் தரத்திற்கேற்ப வேலைசெய்யும். சிவனைக்குறித்து 'சிவாயநம' என்று சிந்தித்தால் அதற்குண்டான பலன் கிடைக்கும் என்பது வள்ளற்பெருமானின் தத்துவம்.
'சிவாயநமவெனச் செம்பு பொன்னாயிடும் (ஏமசித்தி), சிவாயநமவெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாயமொருநாளுமில்லை (தேகசித்தி - நல்வழி-ஒளவையார்) (உரைநடைப்பகுதி பக்கம் 387)
எனவே ஏமசித்தி, தேகசித்தி பெறுவதற்காக மகான்கள் கூறிய குறியீடே இம்மந்திரங்கள் ஆகும். இங்கு தேகசித்தி என்பது சிவனின் ஆயுள் வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குமேல் இராது என்பது வள்ளற்பெருமான் வாக்கு. இதுபோல் மற்ற மந்திரங்களும் அதற்குத்தக்க பலனை கொடுக்கும். அவையெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்டவை என்பது வள்ளற்பெருமானின் முடிபு.
"பரிபாஷை - அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசகவாச்சிய வசன அசஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம்.
மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவைபோன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசையெடுப்பது வியர்த்தம்.
சுத்தசன்மார்க்கமே சிறந்தது. பாவானாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியா தீதாதீதம் லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்." (உரைநடைப்பகுதி பக்கம் 408)
வள்ளற்பெருமானும் இம்மந்திரங்கள் ஓதி அதனால் அடையும் பலனை எதிர்பார்ப்பது வீண்செயல் என்கிறார். (பிரயாசையெடுப்பது வியர்த்தம்)
பாவானாதீதாதீதம் - எண்ணங்களைக் கடந்தது
குணாதீதாதீதம் - குணங்களைக் கடந்தது.
வாச்சியாதீதாதீதம் - சொற்களைக் கடந்தது.
லட்சியாதீதாதீதம் - மதிப்பு கடந்தது.
சுத்த சன்மார்க்க பொருளானது, நமது எண்ணங்களைக் கடந்ததாகவும், குணங்களைக் கடந்ததாகவும், சொற்களைக் கடந்ததாகவும், மதிப்பு கடந்ததாகவும் உள்ளதாகவும், அதன் உண்மைகள் இனி வெளிப்படும் என்று வள்ளற்பெருமான் கூறுகிறார். இந்த சன்மார்க்க பொருள் வெளிப்பட நாம் சிந்தித்திருக்கவேண்டிய மந்திரம்தான் மகாமந்திரமான 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வெளிப்படுத்தப்பட்ட மந்திரம் ஆகும். இம்மகா மந்திரத்தை சிந்திக்க சுத்தசன்மார்க்க பொருள் நமக்கு கிட்டும். அப்பொருள் எப்படிப்பட்டதென்று நமது எண்ணங்களாலும், குணங்களாலும், சொற்கலாலும், உலகியல் மதிப்புகளாலும் கூறமுடியாததாக உள்ளது. ஆயினும் தம்மால் முடிந்தவரை இம்மந்திரத்தின் சிறப்பை அகவல் வரிகளில் வள்ளற்பெருமான் எடுத்துரைக்கவும் தவறவில்லை, மேலும் பரிபாஷைகளான மந்திரங்களுக்கு என இதுவரை யாரும் அகவலோ அல்லது தனிப்பாசுரங்களோ இயற்றினார்கள் இல்லை. ஆனால் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட இம்மகா மந்திரத்திற்கு என 1596 அடிகளில் அருட்பெருஞ்ஜோதி அகவல் என, திருவருளால் வெளிப்படுத்தப்பட்டு, இம்மகாமந்திரமானது சொற்களால் தமிழ்ச் சொற்களால் சிறப்படைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து
நான்பெற அளித்த நாதமந்திரமே
கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்புற அளித்த புனித மந்திரமே
அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே
ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியு மந்திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓதநின் றுலவா தோங்கு மந்திரமே
எனவே சிந்தித்தால் மகாமந்திரத்தை சிந்திக்கவேண்டும் என்பது அருள்வாக்கியத்தின் அருளாக உள்ளது.
இம்மகாமந்திரம் 19ஆம் நூற்றாண்டில் வெளிப்பட்டமையால், 14ஆம் நூற்றாண்டில் மந்திரம் என்றால் அது வள்ளற்பெருமான் கூறிய பரிபாஷை என்பதையே குறிக்கும். எனவே இங்கும் சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் கைக்கோர்த்து திரிவதைக் காணலாம்.

Kindly click here to ask your clarification/comments about this article

this is wonderful philately
Written By:gobal