“உண்மை சொல்ல வந்தனனே-என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை”


Author :Ramalakshmi/Apj.arul.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுள், கடவுள் நிலை குறித்து பல்வேறு சமய மத மார்க்கங்கள் உலகில் உள்ளது. மேற்படி சமய மத மார்க்கங்கள் மற்றும் அதில் உள்ள “கட்டுப்பாடு ஆசாரங்களினால்” மனிதர்கள் பிரிக்கப்பட்டு வேறுபட்டு உள்ளனர். அதன் அடிப்படையில் எற்படுகின்ற உயர்வு தாழ்வினால் கருத்து மோதல்கள், பகைமை, சண்டை சச்சரவு நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பதை எவரால் மறுக்க முடியும்? அங்ஙனம் நடைபெறுவதற்கான அடிப்படை காரணம் என்ன? எனப் பார்க்கும் போது உண்மை அன்பு, உண்மை இரக்கம், உண்மை அறிவு, நம்மிடத்தில் எற்படாது இருப்பதே அன்றி வேறு ஒன்றுமில்லை.
அன்பர்களே! விலங்கினமும் மனிதர்களும் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் ஆகும். “ஆறறிவு” மனிதர்களிடத்தில் இல்லையா? என்றால், மனித தேகம் ஒன்றுதான் ஆறறிவை பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறது என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும். இங்கு “ஆறறிவு” என்பது யாது? என்பதை நாம் அறிதல் வேண்டும்.
ஆறாவது அறிவு என்பது "கருணை" (Love) எனப்படும்.
"கருணை" என்றால் என்ன?
எல்லா பிறப்பு உடம்புகளிலும் உயர்வுடையத்தாகிய ஆறறிவுள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருட் பெருங்கருணை திறத்தை எங்ஙன மறிவேன்! என்கிறார். வள்ளலார்.
நாம் வாழ்கின்ற "பிரபஞ்சமாகிய இயற்கையுடனும்" நாம் தொடர்புடையவர்கள். மேற்படி இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பத்தைக் "கடவுள்" என இங்கு கொள்வோம்.
ஆக,
எல்லா உயிர்களிடத்தும் "தயவும்"
இயற்கையிடத்தில் (கடவுளிடத்தில்) "அன்பு"மே ஆறறிவு ஆகும்.
நிற்க !
மேற்படி "ஆறாவது அறிவு" பெறுவதற்கான தகுதி படைத்திருக்கும் ஓரே தேகம் மனித தேகம் தான்.
“கருணை” என்பதற்கு பொருள் என்னவென்று திருஅருட்பிரகாச வள்ளலார் விளக்கும் போது; “கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே என்கிறார்கள்”. என் மார்க்கம் “அறிவு மார்க்கம்” என்கிறார்கள். ஆக, கண்ட நெறி உண்மையாகவும், காட்டிய வழி பொதுவாகவும் உள்ள மார்க்கமே வள்ளலார் கண்ட “சமரச சுத்தசன்மார்க்கம்” ஆகும். தான் வைத்திருந்த சமயப் பற்றினை கைவிட்டு விட்டு உண்மை பொது நெறியை உலகிற்கு 1871ம் ஆண்டு வெளிப்படுத்தினார்கள். அக்காலத்தில் வள்ளலாரின் “தனி நெறியை” தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் எனப்பார்க்கும் போது, அதற்கு வள்ளலாரின் சத்திய வாக்கியம் இதோ:-
“உண்மை சொல்ல வந்தனனே-என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும்
தெரிந்து கொள்வாரில்லை”
அன்பர்களே!
சாதி, சமயங்களின் மீது வெறியும் பற்றும் கொண்டிருந்த அக்காலங்களில் வள்ளலாரின் உயர்வான உண்மைப் பொது நெறியைத் தெரிந்து கொள்ள முன் வந்திருக்கமாட்டார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.
இன்று அந்த உண்மையைக் குறித்து தெரிந்து கொள்ளும் தருணம் வந்துள்ளது. அந்த உண்மையை உள்ளது உள்ளபடியே இன்று நல்ல விசாரணையில் அறிவோம்.
"உண்மை பொது நெறியை'' எனக்குத் தெரியப்படுத்தி திரு அருட்பிரகாச வள்ளலாரின் தனிநெறி குறித்து ஆய்வு செய்யத் தூண்டியவரும் வள்ளலார் நெறியில் பிறழாது வாழ்ந்துவருபவருமான என் கணவருக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
வள்ளலாரின் முடிபான உண்மை பொதுநெறி (சுத்தசன்மார்க்கம்) உலகிற்கு வியம்பிடும் பணிக்கு நல் ஆதரவு அளித்து வரும் அன்பர்கள், சகோதர, சகோதரிகள், சான்றோர்கள் அனைவருக்கும் என் சார்பாகவும் மற்றும் “கருணை சபை சாலை” சார்பாகவும் நன்றியைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கட்டுரைகள் அனைத்தும் திருஅருட்பிரகாச வள்ளளாரின் ஆவணங்களின் அடிப்படையிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
வெ. இராமலெட்சுமி இளங்கோ,M.A., (Sociology)
நிறுவநர் : கருணை சபை-சாலை
பதிப்பாசிரியர் : கருணை மாத இதழ்

Kindly click here to ask your clarification/comments about this article