அருட்பெருஞ்ஜோதி அகவல்

ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி ( 4615-5063 )

81. அருட்பெருஞ்ஜோதி அகவல்

நிலைமண்டில ஆசிரியப்பா

4615. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி

ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
10
உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

எல்லையில் பிறப்பெனும் எழுகடல்318 கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

இருங்கடல் ஖ வடலூரில் சத்திய தருமச்சாலையில்
வழிபாட்டில் உள்ள அடிகள் எழுதியருளிய கையெழுத்துப்படி.

ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி

ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
20
ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி

ஓதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

ஔவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளிஎனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
30
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளிஎனும்
அத்து விதச்சபை அருட்பெருஞ் ஜோதி

தூயக லாந்த சுகந்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

பெரியநா தாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
40
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி

தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும்
அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
50
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி

காரண காரியம் காட்டிடு வெளிஎனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி

என்றா தியசுடர்க் கியனிலை ஆய்அது(319)
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
60
(319). ஆய்அவை - ச.மு.க. பதிப்பு.
சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்(320)
அமையும் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி

(320). தனிப்பெரு வெளியாய் - ச.மு.க. பதிப்பு.
முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி

துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
70
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேற் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாம்சபை அருட்பெருஞ் ஜோதி
80
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்(321)
அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

(321). வெளியாய் ச.மு.க. பதிப்பு br>
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

வாரமும் அழியா வரமும் தரும்திரு
ஆரமு தாம்சபை அருட்பெருஞ் ஜோதி

இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
90
எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி

பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொன் னம்பலத் தருட்பெருஞ் ஜோதி

எம்பலம் எனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி

தம்பர ஞான சிதம்பரம் எனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி

எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி
100
வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி

நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஜோதி

கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர்
அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தய
வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

இன்புறு நான்உளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை அருட்பெருஞ் ஜோதி
110
எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா
தம்மைஅப் பனுமாம் அருட்பெருஞ் ஜோதி

பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஜோதி

தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீத அருட்பெருஞ் ஜோதி
120
பொதுவுணர் வுணரும் போதலால் பிரித்தே
அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி

உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி

என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையில் உவந்த அருட்பெருஞ் ஜோதி

ஓதிஓ தாமல் உறவெனக் களித்த
ஆதிஈ றில்லா அருட்பெருஞ் ஜோதி

படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஜோதி
130
பவனத் தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும்
அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி

திவள்உற்ற அண்டத் திரளின்எங் கெங்கும்
அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி

மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும்
அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி

எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் சோதி
140
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோ ர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்
தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

சத்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
150
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி

காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்
றன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய
அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஜோதி

நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி
160
எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை
அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீஅது
ஆயினை என்றருள் அருட்பெருஞ் ஜோதி

எண்ணிற் செழுந்தேன் இனியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ் ஜோதி

சிந்தையில் துன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

எங்கெங் கிருந்துயிர் ஏதெது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ் ஜோதி
170
சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ் ஜோதி

சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி

மந்தணம் இதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி

எம்புயக் கனியென எண்ணுவார் இதய
அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஜோதி
180
செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி

துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி

பொதுஅது சிறப்பது புதியது பழயதென்
றதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஜோதி

சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை
ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி

ஓமயத் திருவுரு(322) உவப்புடன் அளித்தெனக்
காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி
190
(322). ஓமயத் திருவுரு ஖ பிரணவ உடம்பு.
(ஓமயம் - ஓங்காரமயம்.)
எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி அருளிய அருட்பெருஞ் ஜோதி

எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக்
கத்தகை அருளிய அருட்பெருஞ் ஜோதி

இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக்
கங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஜோதி

பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளிஎன்
ஆருயிர்க் குள்ஒளிர் அருட்பெருஞ் ஜோதி

தேவியுற் றொளிர்தரு திருவுரு உடன்என
தாவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
200
எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறி வளித்த அருட்பெருஞ் ஜோதி

சாமா றனைத்தும் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய அருட்பெருஞ் ஜோதி

சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக்
கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஜோதி

சாவா நிலையிது தந்தனம் உனக்கே
ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஜோதி
210
சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஜோதி

காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஜோதி

எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றா
றங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
220
எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஜோதி

எண்தர முடியா திலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி

சாருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை
ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஜோதி

வாழிநீ டூழி வாழிஎன் றோங்குபேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ் ஜோதி
230
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ் ஜோதி

எச்சம் நினக்கிலை எல்லாம் பெருகஎன்
றச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஜோதி

நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின்
றாடுக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி

முத்திறல் வடிவமும்(323) முன்னியாங் கெய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

(323). முத்திறல் வடிவம் ஖ மூன்று வகை உடம்புகள்.
சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்.
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
240
கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

யோகசித் திகள்வகை உறுபல கோடியும்
ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஜோதி

முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
250
சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம்
அத்திறம் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி

ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்
ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஜோதி

இன்பசித் தியின்இயல் ஏகம்அ னேகம்
அன்பருக் கென்றஎன் அருட்பெருஞ் ஜோதி

எட்டிரண் டென்பன இயலும்முற் படிஎன
அட்டநின் றருளிய அருட்பெருஞ் ஜோதி

இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம்
அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஜோதி
260
படிமுடி கடந்தனை பார்இது பார்என
அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஜோதி

சோதியுட் சோதியின் சொருபமே அந்தம்
ஆதியென் றருளிய அருட்பெருஞ் ஜோதி

இந்தசிற் ஜோதியின் இயல்உரு ஆதி
அந்தமென் றருளிய அருட்பெருஞ் ஜோதி

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென் றருளிய அருட்பெருஞ் ஜோதி

நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
270
கற்பகம் என்னுளங் கைதனில் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே
அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஜோதி

பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே
அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

வல்லப சத்திகள் வகைஎலாம் அளித்தென
தல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
280
ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

சூரிய சந்திர ஜோதியுட் ஜோதிஎன்
றாரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஜோதி

பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்குநம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஜோதி

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஜோதி
290
பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி

வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால்
ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஜோதி

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஜோதி

நவையிலா உளத்தில் நாடிய நாடிய
அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி
300
கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண்
டாற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஜோதி

நன்றறி வறியா நாயினேன் தனையும்
அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஜோதி

எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஜோதி
310
ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண்
டாறாறு கடத்திய அருட்பெருஞ் ஜோதி

தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா
ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஜோதி

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஜோதி

இருள்அறுத் தென்உளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த அருட்பெருஞ் ஜோதி
320
தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந்
தருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஜோதி

பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஜோதி

உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஜோதி

வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஜோதி

சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே
அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஜோதி
330
விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பே றளித்த அருட்பெருஞ் ஜோதி

அருட்பேர் தரித்துல கனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஜோதி

உலகெலாம் பரவஎன் உள்ளத் திருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
340
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும்(324) அருட்பெருஞ் ஜோதி

(324). ஓங்கிய - ச.மு.க. பதிப்பு.

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்
அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி

புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
350
புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய்
அனைஎனப் பெருகும் அருட்பெஞ் ஜோதி

புவியினுள் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி

புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி

விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி
அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஜோதி

வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
360
நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி
அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
370
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினில் நாற்றம் வகுத்ததில்(325) பல்வகை
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

(325). வகுத்தது - சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படி.

மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல்
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
380
மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணியல் சத்திகள் மண்செயல் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி
390
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
றண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்(326)
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

(326). ஆ. பா. பதிப்பைத் தவிர ஏனைய பதிப்புகள் அனைத்திலும்,
சாலையிலுள்ள அடிகள் கையெழுத்துப் படியிலும் 399, 400 ஆம் அடிகள்
401, 402 ஆக உள்ளன. ஆ.பா. பதிப்பில் மட்டும் இப்பதிப்பில்
உள்ளவாறு காணப்படுகிறது.
400
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரினிற் பசுமையை நிறுத்தி அதிற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரினில் சுவைநிலை நிரைத்ததில் பல்வகை
ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
410
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடை அடிநடு நிலைஉற வகுத்தனல்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
420
நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
430

தீயினில் சூட்டியல் சேர்தரச்(327) செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

(327). சேர்பரச் - ஆ.சபாபதி சிவாசாரியார் அகவல் பதிப்பு., பி. இரா. பதிப்பு.
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பூஎலாம் திகழுறு திறம்எலாம்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
440
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
450
தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயினிற் பக்குவஞ் சேர்குணம் இயற்குணம்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயியல் பலபல செறித்ததில் பலவும்
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
460
காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
470
காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
480
காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
490
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
500
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி

வெளியினில் சத்திகள் வியப்புறு(328) சத்தர்கள்
அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

(328). வியப்புற - சாலையிலுள்ள அடிகள் கையெழுத்துப் படி.

வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல
அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடை பலவே விரித்ததில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
510
வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி
530
கருதக நடுவொடு கடைஅணைந் தகமுதல்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தணிஅக நடுவொடு தலைஅணைந் தகக்கடை
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகநடு புறக்கடை அணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகநடு புறத்தலை அணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகநடு அதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
530
அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி

புறநடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புகலரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
540
அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்(329)
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

(329). அகக்கணம் - ச.மு.க. பதிப்பு.

அகக்கடை முதல்புணர்ப் பதனால் அகக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
550
புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
560
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பரவெளி அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
570
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
580
ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

சிருட்டித் தலைவரைச் சிருட்டிஅண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காவல்செய் தலைவரைக் காவல்அண் டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
590
தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை
ஆங்காக வமைத்த(330) அருட்பெருஞ் ஜோதி

(330). ஆங்காங் கமைத்த - முதற் பதிப்பு., பொ.சு., பி. இரா., ச.மு.க.

சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களை
ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
6000
பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களும்
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அளவில்பல் சத்தரை அளவில் அண்டங்களை
அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில
அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
610
களவில கடல்வகை கங்கில கரைஇல
அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி

கடலவை அனைத்தும் கரைஇன்றி நிலையுற
அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

கடலிடைப் பல்வளம் கணித்ததில் பல்உயிர்
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மலையிடைப் பல்வளம் வகுத்ததில் பல்லுயிர்
அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
620
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்றற வகுத்த அருட்பெஞ் ஜோதி

பத்திடை ஆயிரம் பகரதில் கோடி
அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்
ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

கோடியில் அனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய்
அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
630
விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி

வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
640
முளையதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

பதமதிற் பதமும் பதத்தினுள் பதமும்
அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
650
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்
ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உருவதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
660
அருவினுள் அருவும் அருவதில் அருவும்
அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர்
அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உருவதில் அருவும் அருவதில் உருவும்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி(331)

(331). ச.மு.க. பதிப்பில் இவ்விரண்டடிகள் முன்னும்,
மேல் இரண்டடிகள் பின்னுமாக உள்ளன.


வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
670
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையற் றமைத்த அருட்பெருஞ் ஜோதி

அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
680
முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை
அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புறப்பூ புறத்தில் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்புறப் பூஅகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற
அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
690
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல
அசலற(332 )வகுத்த அருட்பெருஞ் ஜோதி

(332). அசைவற ஖ முதற் பதிப்பு., பொ.சு., பி. இரா., ச.மு.க.

அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெவ்வே றியலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வா றமைத்த அருட்பெருஞ் ஜோதி
700
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
710
பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உனற்கரும் உயிருள உடலுள உலகுள
அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
720
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
730
உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை
அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

முச்சுட ராதியால் எச்சக உயிரையும்
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
740
வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்
தன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்
அண்ணுயிர் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

தேவரை எல்லாம் திகழ்புற(333) அமுதளித்
தாவகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
750
(333). திகழ்வுற ஖ முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா., ஆ.பா.
அகப்புற அமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

தரும்அக அமுதால் சத்திசத் தர்களை
அருளினில் காக்கும் அருட்பெருஞ் ஜோதி

காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும்
ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
760
கலையறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம்
அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

விடய நிகழ்ச்சியால் மிகுமுயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந்(334) தளித்தருள் அருட்பெருஞ் ஜோதி

(334). அரணேந்து - ச.மு.க. பதிப்பு.

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
770
எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி

ஏங்கா துயிர்த்திரள் எங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தருள் அருட்பெருஞ் ஜோதி

சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

வாய்ந்திடும் சுத்த வகைஉயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
780
எவைஎலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

உயிருறு மாயையின் உறுவிரி வனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும்
அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
790
காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை
ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்
கதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பற(335) அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

(335). அடர்வற ஖ முதற்பதிப்பு., பொ.சு., ச.மு.க.

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
800
நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்(336)
ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஜோதி

(336). தொழில்களில் - முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா.

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்(337)
ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

(337). தொழில்களில் - முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா.

தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
810
சுத்தமா நிலையில் சூழுறு விரிவை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

கரைவின்மா(338) மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது(338) மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

(338). கரவின்மா, அரசது - முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா.

பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
820
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
830
திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே
அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி

எனைத்தா ணவமுதல் எல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி அருட்பெருஞ் ஜோதி

விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
840
சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை
அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

மறைப்பின் மறந்தன(339) வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

(339). மறைப்பின் மறைந்தன ஖ முதற்பதிப்பு., பொ.சு.
மறப்பின் மறந்தன - ச.மு.க. பதிப்பு.


எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
850
சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கும் அருட்பெருஞ் ஜோதி

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
860
தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி

இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி

செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி

இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
870
செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே
அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஜோதி

ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே

ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே

ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே
880
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே

எழுநிலை மிசையே இன்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே
890
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே
எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே

மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒருதனிப் பொருளே
900
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே

அருவினுள் அருவாய் அருஅரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே

அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்
உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே

பொருளினுள் பொருளாய்ப் பொருளது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே
910
ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே

அறிவுறு சித்திகள் அனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே

பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் ஒருதனிப் பொருளே
920
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே

வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே
930
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே அருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே
940
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தரும் சிவமே

அவனோ டவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

எம்பொரு ளாகி எமக்கருள் புரியும்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே

ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு
திருநிலை மேவிய சிவமே சிவமே
950
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே

சத்தெலா மாகியும் தானொரு தானாம்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
960
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே

பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனையருள்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
970
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்தமெய்ச் சிவமே

உயிருள்யாம் எம்முள் உயிரிவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்
உயிர்ஒளி காண்கஎன் றுரைத்தமெய்ச் சிவமே

அருளலா தணுவும் அசைந்திடா ததனால்
அருள்நலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை
அருளுற முயல்கஎன் றருளிய சிவமே
980
அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
இருள்நெறி எனஎனக் கியம்பிய சிவமே

அருள்பெறில் துரும்புஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்இது எனவே செப்பிய சிவமே

அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே

அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்கும்என் றியம்பிய சிவமே
990
அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

அருளறி யார்தமை அறியார் எம்மையும்
பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்வடி வதுவே அழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம்வடி வாம்என்ற சிவமே
1000
அருளே நம்அடி அருளே நம்முடி
அருளே நம்நடு வாம்என்ற சிவமே

அருளே நம்அறி வருளே நம்மனம்
அருளே நம்குண மாம்என்ற சிவமே

அருளே நம்பதி அருளே நம்பதம்
அருளே நம்இட மாம்என்ற சிவமே

அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நம்விருப் பாம்என்ற சிவமே

அருளே நம்பொருள் அருளே நம்ஒளி
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
1010
அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே

அருளே நம்சுகம் அருளே நம்பெயர்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே

அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை
அருண்மதி வாழ்கஎன் றருளிய சிவமே

அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே

உள்ளகத் தமர்ந்தென துயிரில் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
1020
நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே

சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச்
சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புரிந்த கதிசிவ பதியே

துன்பம் தொலைத்தருட் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே
1030
கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே

பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை
மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே

பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத்
திறமுற(340) அருளிய திருவருட் குருவே
1040
(340). திரமுற - சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படி.,
சிவாசாரியார் பதிப்பு., பி.இரா பதிப்பு.


மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்தசற் குருவே

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலைஎலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே
தரமுற விளங்கும் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
1050
சிவரக சியம்எலாம் தெரிவித்(341)தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

(341). தெளிவித் தெனக்கே - ச.மு.க. பதிப்பு.

சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்
அத்தகை தெரித்த அருட்சிவ குருவே

அறிபவை எல்லாம் அறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

கேட்பவை எல்லாம் கேட்பித் தென்உளே342
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

342. கேட்பித் தெனுள்ளே - சாலைப் படி., சிவாசாரியார்., பி.இரா., ச.மு.க.

காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே
மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே
1060
செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே
உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே

உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்
தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே

சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்
வல்லான் எனஎனை வைத்தசற் குருவே
1070
சீருற அருளாம் தேசுற அழியாப்
பேருற என்னைப் பெற்றநற் றாயே

பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்
பெருந்தய வால்எனைப் பெற்றநற் றாயே

ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான்
ஈன்றமு தளித்த இனியநற் றாயே

பசித்திடு தோறும்என் பால்அணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே

தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஒருமைநற் றாயே
1080
அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்
தெருளுற எனக்கருள் செல்வநற் றாயே

இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்
உயலுற எனக்கருள் உரியநற் றாயே

நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்
பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே

மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே
உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே

கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே
1090
துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே

சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவுடைத் தாயே

சத்தினி பாதந் தனைஅளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

சத்திசத் தர்கள்எலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை அளித்த தெய்வநற் றாயே

தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே
1100
வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே
அளித்தளித் தின்புசெய் அன்புடைத் தாயே

எண்ணகத் தொடுபுறத் தென்னைஎஞ் ஞான்றும்
கண்எனக் காக்கும் கருணைநற் றாயே

இன்னருள் அமுதளித் திறவாத் திறல்புரிந்
தென்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே

என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம்
தன்னஎன் றாக்கிய தயவுடைத் தாயே

தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே
1110
சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே

தூக்கமும் சோம்பும்என் துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே

துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப
இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே

எல்லா நன்மையும் என்தனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே
1120
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே

புன்னிகர் இல்லேன் பொருட்டிவண் அடைந்த
தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே

அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஜோதி
சகத்தினில் எனக்கே தந்தமெய்த் தந்தையே

இணைஇலாக் களிப்புற் றிருந்திட எனக்கே
துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே

ஆதியீ றறியா அருளர சாட்சியில்
சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே
1130
எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப்
பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே

தங்கோல் அளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

தன்பொருள் அனைத்தையும் தன்அர சாட்சியில்
என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே

தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில்
என்வடி வாக்கிய என்தனித் தந்தையே

தன்சித் தனைத்தையும் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்தனித் தந்தையே
1140
தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும்
என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே

தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதியை
என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே

தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே

தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்
என்ன இயற்றிய என்தனித் தந்தையே

தன்உரு என்உரு தன்உரை என்உரை
என்ன இயற்றிய என்தனித் தந்தையே
1150
சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என்
றெதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே

மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே
இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே

உணர்ந்துணர்ந் துணரினும் உணராப் பெருநிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே

துரியவாழ் வுடனே சுகபூ ரணம்எனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
1160
எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம்
அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே

இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றும்அஞ் சேல்எனத் தாங்கிய துணையே

தளர்ந்தஅத் தருணம்என் தளர்வெலாம் தவிர்த்துட்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே

துறைஇது வழிஇது துணிவிது நீசெயும்
முறைஇது எனவே மொழிந்தமெய்த் துணையே
1170
எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை
கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே

வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே
ஈண்டிருந் தருள்புரி என்னுயிர்த் துணையே

இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே

அயர்வற எனக்கே அருட்டுணை ஆகிஎன்
உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே

அன்பினில் கலந்தென தறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே
1180
நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநல் நட்பே

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த
குற்றமும் குணமாக் கொண்டஎன் நட்பே

குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே
1190
சவலைநெஞ் சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநல் நட்பே

களைப்பறிந் தெடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய என்உயிர் உறவே

தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
என்னைத் தழுவிய என்உயிர் உறவே

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்உயிர் உறவே

துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்உற வாகிய என்உயிர் உறவே
1200
என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய்
என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே

அனைத்துல கவைகளும் ஆங்காங் குணரினும்
இனைத்தென அறியா என்தனிச் சத்தே

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுஎனற் கரிதாம் என்தனிச் சத்தே

ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதாம் என்தனிச் சத்தே

சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே
1210
துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என
உரைசெய் வேதங்கள் உன்னும்மெய்ச் சத்தே

அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த என்தனிச் சத்தே

என்றும்உள் ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே

சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
1220
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே

உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே

அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே

நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே
1230
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்
எண்தர விளக்கும் என்தனிச் சித்தே

எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே

ஒன்றதில் ஒன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றும்ஓர் படித்தாம் என்தனி இன்பே
1240
இதுஅது என்னா இயலுடை அதுவாய்
எதிர்அற நிறைந்த என்தனி இன்பே

ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த என்தனி இன்பே

அறிவுக் கறிவினில் அதுவது அதுவாய்
எறிவற் றோங்கிய என்தனி இன்பே

விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே

இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே
1250
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே

எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும்
எல்லா இன்புமாம் என்தனி இன்பே

கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்
விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்

குணங்கொள்கோற் றேனும் கூட்டிஒன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற இயற்றிய

உணவெனப் பலகால்(343) உரைக்கினும் நிகரா
வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்
1260
(343). பல்கால் - சாலைப் படி.,சிவாசாரியார்., ச.மு.க.
கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலந்தரு விளக்கமும் நவில்அருந் தண்மையும்

உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன்

எல்லாம் இனிப்ப இயலுறு சுவைஅளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

சாகா வரமும் தனித்தபேர் அறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
1270
பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்

கடந்தென தறிவாம் கனமேல் சபைநடு
நடந்திகழ் கின்றமெஞ் ஞானஆ ரமுதே

சத்திய அமுதே தனித்திரு அமுதே
நித்திய அமுதே நிறைசிவ அமுதே

சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே

ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தானந்த மில்லாத் தத்துவ அமுதே
1280
நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே

அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுத லாய சிதம்பர அமுதே

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே
1290
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே

பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே

விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே

பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே
1300
அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே

சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே

தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே

நவமணி முதலிய நலமெலாம் தரும்ஒரு
சிவமணி எனும்அருட் செல்வமா மணியே
1310
வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து
நான்பெற அளித்த நாதமந் திரமே

கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்புற அளித்த புனிதமந் திரமே

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே

ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
1320
உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே

சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம்
தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்
சிறந்தவல் லபம்உறு திருவருள் மருந்தே

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே
1330
என்றே என்னினும் இளமையோ டிருக்க
நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே

இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்
தடையொன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்

மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்
1340
காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்

கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்

உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
1350
எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை
அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே

நீகேள் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே

எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே
1360
விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே

நால்வகை நெறியினும் நாட்டுக எனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

எழுவகை நெறியினும் இயற்றுக எனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப்
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே

ஊழிதோ றூழி உலப்புறா தோங்கி
வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே
1370
இதமுற(344) ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினும் உலவா தோங்குநல் நிதியே

(344). இதமுறு - ஆ.பா.

இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்
திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே

எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே

அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே

நற்குண நிதியே சற்குண நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே
1380
பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கும் மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
துரியமேல் வெளியில் சோதிமா மலையே

புற்புதந் திரைநுரை புரைமுதல் இலதோர்
அற்புதக் கடலே அமுதத்தண் கடலே(345)

(345). தெண் கடலே ஖ முதற்பதிப்பு., பொ.சு., பி.இரா., ச.மு.க.

இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே
1390
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே

என்றுயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்
நன்றுற விளங்கிய நந்தனக் காவே

சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்
ஊற்றுநீர் நிரம்ப உடையபூந் தடமே

கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே
1400
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்தில்(346) திருகுதீம் பாலே

(346). பலத்தின் - ச.மு.க. பதிப்பு.

நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே

புனிதவான் தருவில் புதுமையாம் பலமே
கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே

இதந்தரு(347) கரும்பில் எடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
1410
(347). ஓர் அன்பர் படியில் மட்டும் ஓ இதம் பெறு ஓ என்றிருக்கிறது - ஆ.பா.

சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே

உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே
கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே

நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே
சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே

உலர்ந்திடா தென்றும் ஒருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
1420
இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்தநல் மணமே

யாழுறும் இசையே இனியஇன் னிசையே
ஏழுறும் இசையே இயல்அருள் இசையே

திவள்ஒளிப் பருவம் சேர்ந்தநல் லவளே
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே

நாதநல் வரைப்பின் நண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
1430
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே

என்மனக் கண்ணே என்அருட் கண்ணே
என்னிரு கண்ணே என்கணுள் மணியே

என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே
என்பெருந் திறலே என்பெருஞ் செயலே

என்பெருந் தவமே என்தவப் பலனே
என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே

என்பெரு வாழ்வே என்றன்வாழ் முதலே
என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே
1440
என்பெரு நலமே என்பெருங் குலமே
என்பெரு வலமே என்பெரும் புலமே

என்பெரு வரமே என்பெருந் தரமே
என்பெரு நெறியே என்பெரு நிலையே

என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே என்பெருங் கதியே

என்பெரும் பதியே என்னுயிர் இயலே
என்பெரு நிறைவே என்தனி அறிவே

தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாம் கட்டவை விட்டுவிட் டியங்கிட
1450
என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

மடல்எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில்நீர் பெருகிக் கால்வழிந் தோடிட
1460
வாய்துடித் தலறிட வளர்செவித் துளைகளில்(348)
கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட

(348). துணைகளில் - சாலைப் படி.,முதற்பதிப்பு., பொ.சு., ச.மு.க.

மெய்எலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப்
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்
1470
தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட

உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட

என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்தனி அன்பே

பொன்னடி கண்டருள் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே

தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னைவே தித்த என்தனி அன்பே
1480
என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை
இன்புறு வாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த என்தனி அன்பே
1490
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை அன்பே

தன்னுளே பொங்கிய தண்அமு துணவே
என்னுளே பொங்கிய என்தனி அன்பே

அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்
இருளற என்னுளத் தேற்றிய விளக்கே

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுளத் தேற்றிய விளக்கே

மயலற அழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற என்னுளத் தேற்றிய விளக்கே
1500
இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிதரு(349) விளக்கே

(349). ஒளிர்தரு - சாலைப் படி., சிவாசாரியார் பதிப்பு.

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான இயல்ஒளி விளக்கே

ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே

ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி
காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே
1510
தண்ணிய அமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே

உய்தர அமுதம் உதவிஎன் உளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

பதிஎலாம் தழைக்கப் பரம்பெறும்(350) அமுத
நிதிஎலாம் அளித்த நிறைதிரு மதியே

(350). பதம்பெறும் - சாலைப் படி., பொ.சு., பி.இரா., ச.மு.க.

பால்எனத் தண்கதிர் பரப்பிஎஞ் ஞான்றும்
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

உயங்கிய உள்ளமும் உயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே
1520
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே

உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

நலந்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்
வாய்மையால் கருணை மழைபொழி மழையே

வெம்மல இரவது விடிதரு ணந்தனில்
செம்மையில் உதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
1530
திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே
வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே

முன்னுறு மலஇருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே

ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என்னுளம் சூழ்ந்தமெய்ச் சுடரே

உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட
வெள்ஒளி காட்டிய மெய்அருட் கனலே
1540
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே

எண்ணிய எண்ணிய எல்லாந் தரஎனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே

இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
1550
வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபைஎன துளம்எனத் தான்அமர்ந் தெனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி

மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே
அருள்அமு தருத்திய அருட்பெருஞ் ஜோதி

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஜோதி
1560
என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே
அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து

உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை
அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச்

சிறுநெறி செல்லாத் திறன்அளித் தழியா
துறுநெறி உணர்ச்சிதந் தொளிஉறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

அன்பையும் விளைவித் தருட்பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்
1570
ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம்
சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா

அருள்அமு தளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
1580
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க
1590
சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
1596

திருச்சிற்றம்பலம்

வெண் செந்துறை

4616. அருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி
தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே.(351)

(351). இது பொ.சு. அவர்கள்1892 ஆம் ஆண்டு பதிப்பித்த ஆறு திருமுறையும் சேர்ந்த
முதற் பதிப்பில் ஆறாந் திருமுறை இறுதியில் ஓபல்வகைய தனிப்பாடல்கள்ஔ என்ற தலைப்பின்கீழ்
முதன்முதலாக. அச்சிடப்பெற்றது பி.இரா. பதிப்பில் (1896) இஃது அகவலுக்கு முன்னர் காப்புப்
போன்று வைக்கப்பெற்றுள்ளது.. ஆ.பா இதனை ஆறாம் திருமுறை முன் பகுதி
(பூர்வ ஞான சிதம்பரப் பகுதி)யின் இறுதியில் தனித்திரு அலங்கலில் சேர்த்திருக்கிறார்.
1

திருச்சிற்றம்பலம்
Back


82. அருட்பெருஞ்சோதி அட்டகம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4617. அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
அருட்பெருந் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
1
4618 குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த
கோடிகோ டிகளும்ஆங் காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்தபற் பலபொருள் திரளும்
விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும்
மெய்அறி வானந்தம் விளங்க
அலகுறா தொழியா ததுஅதில் விளங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
2
4619 கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்
கருவினால் பகுதியின் கருவால்
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்
இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்
விண்முதல் பரையால் பராபர அறிவால்
விளங்குவ தரிதென உணர்ந்தோர்
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
3
4620 நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே
நண்ணியும் கண்ணுறா தந்தோ
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்
திரும்பின எனில்அதன் இயலை
இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்
இசைத்திடு வேம்என நாவை
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
4
4621 சுத்தவே தாந்த மவுனமோ அலது
சுத்தசித் தாந்தரா சியமோ
நித்தநா தாந்த நிலைஅனு பவமோ
நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ
புத்தமு தனைய சமரசத் ததுவோ
பொருள்இயல் அறிந்திலம் எனவே
அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
5
4622 ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
6
4623 தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
7
4624 எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
இதுஅது எனஉரைப் பரிதாய்த்
தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
புத்தமு தருத்திஎன் உளத்தே
அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
8
திருச்சிற்றம்பலம்

Back


83. இறை இன்பக் குழைவு

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4625. கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணிற் கிடைத்த கண்ணேஓர்
கனியில் கனிந்தன் புருவான கருத்தில் கிடைத்த கருத்தேமெய்
அருள்நன் னிலையில்(352) அதுஅதுவாய் அறிவிற் கிடைத்த அறிவேஎன்
அகத்தும் புறத்தும் ஒளிநிறைவித் தமர்ந்த குருவே ஐம்பூத
வருண முதலா அவைகடந்த வரைப்பாய் விளங்கு மணிமன்றில்
வயங்கு சுடரே எல்லாஞ்செய் வல்ல குருவே என்னுளத்தே
தருண நடஞ்செய் அரசேஎன் தாயே என்னைத் தந்தாயே
தனித்த தலைமைப் பதியேஇத் தருணம் வாய்த்த தருணமதே.
1
(352). நிலையின் - பி. இரா. பதிப்பு.
4626. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
2
4627. தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த
தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே
ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்
உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே
வானே மதிக்கச் சாகாத வரனாய்(353) எல்லாம் வல்லசித்தே
வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்
நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்
நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.
3
(353). வானாய் - முதற்பதிப்பு., பொ. சு, பி. இரா., ச. மு. க.
4628. கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்
கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்
தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே
சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே
புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்
பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி
நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்
நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.
4
4629. கருத்தில் கருதிக் கொண்டஎலாம் கணத்தில் புரிய எனக்கேமெய்க்
காட்சி ஞானக் கண்கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல்
ஏற்றி நீயும் நானும்ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே
இருத்திக் கருத்தில் உன்தயவை எண்ணுந் தோறும் அந்தோஎன்
இதயம் உருகித் தளதளஎன் றிளகி இளகித் தண்ணீராய்
அருத்திப் பெருநீர் ஆற்றொடுசேர்ந் தன்புப் பெருக்கில் கலந்ததுநான்
அதுஎன் றொன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.
5
4630. ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே
எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே
ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில்
ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை
இந்நாட் புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான்
தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும்
தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே.
6
4631. ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி
உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே
சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க
சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை
ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன்
ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித்
தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது
சிந்தை கனிந்து கனிந்துருகித் தெள்ளா ரமுதம் ஆனதுவே.
7
4632. இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம்
பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும்
படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும்
விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம்
வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே
கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக்
கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.
8
4633. ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி
உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து
நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன்
நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப
அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப்
பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின்
பெருமை இதுவேல் இதன்இயலை யாரே துணிந்து பேசுவரே.
9
4634. புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு
புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்
வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து
வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்
பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த
பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த
அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த
அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.
10
திருச்சிற்றம்பலம்

Back


84. பெறாப் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4635. ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதெள் ளமுதே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே
தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே
ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பேர் அன்பே
உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே
நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே
நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே.
1
4636 ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே.
2
4637 ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
சத்தியனே உண்கின்றேன்(354) சத்தியத்தெள் ளமுதே.
3
(354). உணர்கின்றேன் - ச. மு. க. பதிப்பு.
4638 அச்சமெலாம் தவிர்த்தருளி இச்சைஎலாம் அளித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துச்சவுல காசாரத் துடுக்கனைத்தும் தவிர்த்தே
சுத்தநெறி வழங்குவித்த சித்தசிகா மணியே
உச்சநிலை நடுவிளங்கும் ஒருதலைமைப் பதியே
உலகமெலாம் எடுத்திடினும் உலவாத நிதியே
இச்சமயம் எழுந்தருளி இறவாத வரமும்
எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
4
4639 அன்புடைய என்னறிவே அருளுடைய பொருளே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
துன்புடைய உலகரெலாம் சுகமுடையார் ஆகத்
துன்மார்க்கம் தவிர்த்தருளிச் சன்மார்க்கம் வழங்க
இன்புடைய பேரருளிங் கெனைப்பொருள்செய் தளித்த
என்அமுதே என்உறவே எனக்கினிய துணையே
என்புடைநீ இருக்கின்றாய் உன்புடைநான் மகிழ்ந்தே
இருக்கின்றேன் இவ்வொருமை யார்பெறுவார் ஈண்டே.
5
4640 அடுக்கியபேர் அண்டம்எலாம் அணுக்கள்என விரித்த
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
நடுக்கியஎன் அச்சம்எலாம் தவிர்த்தருளி அழியா
ஞானஅமு தளித்துலகில் நாட்டியபேர் அறிவே
இடுக்கியகைப் பிள்ளைஎன இருந்தசிறி யேனுக்
கெல்லாஞ்செய் வல்லசித்தி ஈந்தபெருந் தகையே
முடுக்கியஅஞ் ஞானாந்த காரமெலாம் தவிர்த்து
முத்தருளத் தேமுளைத்த சுத்தபரஞ் சுடரே.
6
4641 ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
பாங்காக ஏற்றி(355) எந்தப் பதத்தலைவ ராலும்
படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே.
7
(355). ஏத்தி - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா, ச. மு. க.
4642 ஆடகப்பொற் சபைநடுவே நாடகஞ்செய் தருளும்
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
ஏடகத்தே எழுதாத மறைகளெலாம் களித்தே
என்உளத்தே எழுதுவித்த என்உரிமைப் பதியே
பாடகக்கால் மடந்தையரும் மைந்தரும்சன் மார்க்கப்
பயன்பெறநல் அருளளித்த பரம்பரனே மாயைக்
காடகத்தை வளஞ்செறிந்த நாடகமாப் புரிந்த
கருணையனே சிற்சபையில் கனிந்தநறுங் கனியே.
8
4643 அடியாதென் றறிந்துகொளற் கரும்பெரிய நிலையே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
முடியாதென் றறிந்திடற்கு முடியாதென் றுணர்ந்தோர்
மொழிந்திடவே முடியாது முடிந்ததனி முடிபே
கடியாத பெருங்கருணைக் கருத்தேஎன் கருத்தில்
கனிந்துகனிந் தினிக்கின்ற கனியேஎன் களிப்பே
மடியாத வடிவெனக்கு வழங்கியநல் வரமே
மணிமன்றில் நடம்புரியும் வாழ்க்கை இயற் பொருளே.
9
4644 அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே
அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
மனந்தருவா தனைதவிர்த்தோர்(356) அறிவினில்ஓர் அறிவாய்
வயங்குகின்ற குருவேஎன் வாட்டம்எலாம் தவிர்த்தே
இனந்தழுவி என்னுளத்தே இருந்துயிரில் கலந்தென்
எண்ணமெலாம் களித்தளித்த என்னுரிமைப் பதியே
சினந்தவிர்ந்தெவ் வுலகமும்ஓர் சன்மார்க்கம் அடைந்தே
சிறப்புறவைத் தருள்கின்ற சித்தசிகா மணியே.
10
(356). தவிர்ந்தோர் - பி. இரா. பதிப்பு. 9
திருச்சிற்றம்பலம்

Back


85. சிவானந்தத் தழுந்தல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4645. காரண காரியக் கல்விகள் எல்லாம்
கற்பித்தென் னுள்ளே கலந்துகொண் டென்னை
நாரணர் நான்முகர் போற்றமேல் ஏற்றி
நாதாந்த நாட்டுக்கோர் நாயகன் ஆக்கிப்
பூரண மாம்இன்பம் பொங்கித் ததும்பப்
புத்தமு தாம்அருட் போனகம் தந்தே
ஆரண வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
1
4646 தேகம்எப் போதும் சிதையாத வண்ணம்
செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே
போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப்
போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி
ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும்
இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை
ஆகம வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
2
4647 தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே
தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி
வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா
வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
3
4648 சிற்சபை இன்பத் திருநடங் காட்டித்
தெள்ளமு தூட்டிஎன் சிந்தையைத் தேற்றிப்
பொற்சபை தன்னில் பொருத்திஎல் லாம்செய்
பூரண சித்திமெய்ப் போகமும் தந்தே
தற்பர மாம்ஓர் சதானந்த நாட்டில்
சத்தியன் ஆக்கிஓர் சுத்தசித் தாந்த
அற்புத வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
4
4649 தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்
சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி
ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா
உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்
சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்
சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த
அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
5
4650 இத்தனை என்றுநின் றெண்ணிடல் ஒண்ணா
என்பிழை யாவையும் அன்பினில் கொண்டே
சத்திய மாம்சிவ சித்தியை என்பால்
தந்தெனை யாவரும் வந்தனை செயவே
நித்தியன் ஆக்கிமெய்ச் சுத்தசன் மார்க்க
நீதியை ஓதிஓர் சுத்தபோ தாந்த
அத்தனி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
6
4651 மருந்திது மணிஇது மந்திரம் இதுசெய்
வகைஇது துறைஇது வழிஇது எனவே
இருந்தெனுள் அறிவித்துத் தெள்ளமு தளித்தே
என்னையும் தன்னையும் ஏகம தாக்கிப்
பொருந்திஎ லாஞ்செய வல்லஓர் சித்திப்
புண்ணிய வாழ்க்கையில் நண்ணியோ காந்த
அருந்தவ வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
7
4652 பதிசார வைத்துமுற் பசுநிலை காட்டிப்
பாசவி மோசனப் பக்குவன் ஆக்கி
நிதிசார நான் இந்த நீள்உல கத்தே
நினைத்தன நினைத்தன நேருறப் புரிந்து
திதிசேர மன்னுயிர்க் கின்பஞ்செய் கின்ற
சித்திஎ லாந்தந்து சுத்தக லாந்த
அதிகார வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
8
4653 இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
9
4654 இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
10
திருச்சிற்றம்பலம்
Back


86. திருவருட் பெருமை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4655 அன்பனே அப்பா அம்மையே அரசே
அருட்பெருஞ் சோதியே அடியேன்
துன்பெலாம் தொலைத்த துணைவனே ஞான
சுகத்திலே தோற்றிய சுகமே
இன்பனே எல்லாம் வல்லசித் தாகி
என்னுளே இலங்கிய பொருளே
வன்பனேன் பிழைகள் பொறுத்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
1
4656 பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப்
பெருக்கமே என்பெரும் பேறே
உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும்
உண்மைவான் அமுதமே என்பால்
கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த
கருணையங் கடவுளே விரைந்து
வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
2
4657 எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே
என்னிரு கண்ணினுள் மணியே
இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே
இணையிலா என்னுடை அன்பே
சொந்தநல் உறவே அம்பலத் தரசே
சோதியே சோதியே விரைந்து
வந்தருள் என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
3
4658 கோஎன எனது குருஎன ஞான
குணம்என ஒளிர்சிவக் கொழுந்தே
பூஎன அதிலே மணம்என வணத்தின்
பொலிவென வயங்கிய பொற்பே
தேவெனத் தேவ தேவென ஒருமைச்
சிவம்என விளங்கிய பதியே
வாஎன உரைத்தேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
4
4659 உள்ளமே இடங்கொண் டென்னைஆட் கொண்ட
ஒருவனே உலகெலாம் அறியத்
தெள்ளமு தளித்திங் குன்னைவாழ் விப்பேம்
சித்தம்அஞ் சேல்என்ற சிவமே
கள்ளமே தவிர்த்த கருணைமா நிதியே
கடவுளே கனகஅம் பலத்தென்
வள்ளலே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
5
4660 நல்லவா அளித்த நல்லவா எனையும்
நயந்தவா நாயினேன் நவின்ற
சொல்லவா எனக்குத் துணையவா ஞான
சுகத்தவா சோதிஅம் பலவா
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை
ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
6
4661 திண்மையே முதலைங் குணக்கரு வாய
செல்வமே நல்வழி காட்டும்
கண்மையே கண்மை கலந்தஎன் கண்ணே
கண்ணுற இயைந்தநற் கருத்தே
உண்மையே எல்லாம் உடையஓர் தலைமை
ஒருதனித் தெய்வமே உலவா
வண்மையே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
7
4662 காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த
கற்பகத் தனிப்பெருந் தருவே
தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த
சோதியே தூய்மைஇல் லவர்க்குச்
சேய்மையே எல்லாம் செயவல்ல ஞான
சித்தியே சுத்தசன் மார்க்க
வாய்மையே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
8
4663 என்னவா அனைத்தும் ஈந்தவா என்னை
ஈன்றவா என்னவா வேதம்
சொன்னவா கருணைத் தூயவா பெரியர்
துதியவா அம்பலத் தமுதம்
அன்னவா அறிவால் அறியரி வறிவா(357)
ஆனந்த நாடகம் புரியும்
மன்னவா என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
9
(357). அறியறி வறிவா - பி. இரா., ச. மு. க.

4664 விரதமா திகளும் தவிர்த்துமெய்ஞ் ஞான
விளக்கினால் என்னுளம் விளக்கி
இரதமா தியநல் தெள்ளமு தளித்திங்
கென்கருத் தனைத்தையும் புரிந்தே
சரதமா நிலையில் சித்தெலாம் வல்ல
சத்தியைத் தயவினால் தருக
வரதனே என்றேன் வந்தருட் சோதி
வழங்கினை வாழிநின் மாண்பே.
10
திருச்சிற்றம்பலம்
Back


87. அச்சோப் பத்து

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4665. கருத்தனைஎன் கண்மணியைக் கண்ணுதலைப்
பெருங்கருணைக் கடலை வேதத்
திருத்தனைஎன் சிவபதியைத் தீங்கனியைத்
தெள்ளமுதத் தெளிவை வானில்
ஒருத்தனைஎன் உயிர்த்துணையை உயிர்க்குயிரை
உயிர்க்குணர்வை உணர்த்த னாதி
அருத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
1
4666 மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன்
இதயத்தே விளங்கு கின்ற
துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத்
தலைவனைச்சிற் சுகந்தந் தானைச்
செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை
ஒன்றான தெய்வம் தன்னை
அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
2
4667 எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும்
விளங்கவிளக் கிடுவான் தன்னைச்
செப்பரிய பெரியஒரு சிவபதியைச்
சிவகதியைச் சிவபோ கத்தைத்(358)
துப்புரவு பெறஎனக்கே அருளமுதம்
துணிந்தளித்த துணையை என்றன்
அப்பனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
3
(358). சிவபோகத்தே - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.
4668 பிறிவெனைத்துந் தோற்றாதென் உளங்கலந்த
பெருந்தகைஎம் பெருமான் தன்னைச்
செறிவனைத்தும் என்மனத்துக் களித்தெனக்குப்
பெருங்களிப்புச் செய்தான் தன்னை
முறிவெனைத்தும் இன்றிஅருள் அமுதுணவு
கொடுத்தெனக்கு முன்னின் றானை
அறிவனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
4
4669 பொன்புனைஉள் ளொளிக்கொளியைப் பூரணமாம்
பெரும்பொருளைப் புனிதம் தன்னை
என்பிழையைப் பொறுத்தெனையும் ஏன்றுகொண்ட
பெருங்கருணை இயற்கை தன்னை
இன்பினைஎன் இதயத்தே இருந்தருளும்
பெருவாழ்வை என்னுள் ஓங்கும்
அன்பினைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
5
4670 இத்தனைஎன் றிடமுடியாச் சத்திஎலாம்
உடையானை எல்லாம் வல்ல
சித்தனைஎன் சிவபதியைத் தெய்வமெலாம்
விரித்தடக்கும் தெய்வம் தன்னை
எத்தனையும் என்பிழைகள் பொறுத்ததனிப்
பெருந்தாயை என்னை ஈன்ற
அத்தனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
6
4671 எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே
இடங்கொண்ட இறைவன் தன்னை
இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம்
தந்தானை எல்லாம் வல்ல
செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத்
தெள்ளமுதத் திரளை என்றன்
அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
7
4672 என்னையும்என் பொருளையும்என் ஆவியையும்
தான்கொண்டிங் கென்பால் அன்பால்
தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும்
களித்தளித்த தலைவன் தன்னை
முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய்
இருந்தமுழு முதல்வன் தன்னை
அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
8
4673 எண்ணலைவே றிரங்கலைநின் எண்ணமெலாம்
தருகின்றோம்(359) இன்னே என்றென்
கண்நிரம்ப ஒளிகாட்டிக் கருத்தில்அமர்ந்
திருக்கின்ற கருத்தன் தன்னைப்
புண்ணியனை உளத்தூறும் புத்தமுதை
மெய்இன்பப் பொருளை என்றன்
அண்ணலைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
6
(359). தருகின்றாம் - பி. இரா. பதிப்பு.
4674 சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
10
திருச்சிற்றம்பலம்
Back


88. அனுபவ நிலை

கட்டளைக் கலித்துறை

4675. நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்
ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்
தேன்செய்த தெள்ளமு துண்டேன்கண் டேன்மெய்த் திருநிலையே.
1
4676 நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
3
4677 திருநிலை பெற்றனன் அம்பலத் தான்அருள் தெள்ளமுதுண்
டுருநிலை பெற்றனன் ஒன்றே சிவமென ஓங்குகின்ற
பெருநிலை பெற்றனன் சுத்தசன் மார்க்கம் பிடித்துநின்றேன்
இருநிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்குளவே.
3
4678 எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால்
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங்
கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே
முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே.
4
4679 இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம் முழுதையுமே.
5
4680 புத்தியஞ் சேல்சற்றும் என்நெஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
நித்தியஞ் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீஇனிநன்
முத்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.
6
4681 கூடிய நாளிது தான்தரு ணம்எனைக் கூடிஉள்ளே
வாடிய வாட்டமெல் லாந்தவிர்த் தேசுக வாழ்வளிப்பாய்
நீடிய தேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
ஆடிய பாதம் அறியச்சொன் னேன்என தாண்ட வனே.
7
4682 ஆக்கிய நாள்இது தான்தரு ணம்அருள் ஆரமுதம்
தேக்கிமெய் இன்புறச் செய்தருள் செய்தருள் செய்தருள்நீ
நீக்கினை யேல்இனிச் சற்றும்பொ றேன்உயிர் நீத்திடுவேன்
தூக்கிய பாதம் அறியச்சொன் னேன்அருட் சோதியனே.
8
திருச்சிற்றம்பலம்
Back


89. அருட்பெருஞ்சோதி அடைவு

கட்டளைக் கலித்துறை

4683. அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற
அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும்
அருட்பெருஞ் சோதித்தெள் ளார்அமு தாகிஉள் அண்ணிக்கின்ற
அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே.
1
4684 ஆர்கின்ற தெள்ளமு தின்சுவை என்என் றறைவன்அந்தோ
சார்கின்ற சிற்றம் பலப்பெருஞ் சீரினைச் சாற்றுதொறும்
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே
நேர்கின்ற தால்என் அருட்பெருஞ் சோதி நிறைந்துளத்தே.
2
4685 உளத்தே பெருங்களிப் புற்றடி யேன்மிக உண்ணுகின்றேன்
வளத்தே அருட்பெருஞ் சோதியி னால்ஒளி வாய்ந்தெனது
குளத்தே நிறைந்தணை யுங்கடந் தோங்கிக் குலவுபரி
மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனமகிழ்ந்தே.
3
4686 மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே
சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்
இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்
கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.
4
4687 கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.
5
4688 உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
6
4689 மறப்பேன் அலேன்உன்னை ஓர்கண மேனும் மறக்கில்அன்றே
இறப்பேன் இதுசத் தியம்சத் தியம்சத் தியம்இசைத்தேன்
பிறப்பே தவிர்த்தெனை ஆட்கொண் டமுதம் பெரிதளித்த
சிறப்பே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு செழுஞ்சுடரே.
7
4690 சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.
8
4691 தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.
9
4692 நிலத்தே புழுத்த புழுவும் அலேன்புன் நிலத்திழிந்த
மலத்தே புழுத்த புழுஅனை யேனைஅவ் வான்துதிக்கும்
குலத்தே தலைமை கொடுத்தென் உளத்தில் குலவுகின்றாய்
தலத்தே அருட்பெருஞ் சோதிஅப் பாஎன் தயாநிதியே.
10
4693 நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
கதியே என்கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.
11
4694 வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்
ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ
டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்
வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.
12
4695 மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான்
உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
தன்னியல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
துன்னிய நின்னருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே.
13
திருச்சிற்றம்பலம்
Back


90. அடிமைப் பேறு

நேரிசை வெண்பா

4696. அருள்அளித்தான் அன்பளித்தான் அம்பலத்தான் உண்மைப்
பொருள்அளித்தான் என்னுட் புணர்ந்தான் - தெருள்அளித்தான்
எச்சோ தனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான்
அச்சோ எனக்கவன்போல் ஆர்.
1
4697 ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குணர்த்துகின்ற
காரணமும் காரியமும் காட்டுவித்தான் - பூரணன்சிற்
றம்பலத்தான் என்னாசை அப்பன் எலாம்வல்ல
செம்பலத்தை என்உளத்தே சேர்த்து.
2
4698 சேர்த்தான் பதம்என் சிரத்தே திருவருட்கண்
பார்த்தான்என் எண்ணமெலாம் பாலித்தான் - தீர்த்தான்என்
துன்பமெலாம் தூக்கமெலாம் சூழாது நீக்கிவிட்டான்
இன்பமெலாம் தந்தான் இசைந்து.
3
4699 இசைந்தான்என் உள்ளத் திருந்தான் எனையும்
நசைந்தான்என் பாட்டை நயந்தான் - அசைந்தாடு
மாயை மனம்அடக்கி வைத்தான் அருள்எனும்என்
தாயைமகிழ் அம்பலவன் தான்.
4
4700 தானே அருள்ஆனான் தானே பொருள்ஆனான்
தானேஎல் லாம்வல்ல தான்ஆனான் - தானேதான்
நான்ஆனான் என்னுடைய நாயகன்ஆ னான்ஞான
வான்ஆனான் அம்பலத்தெம் மான்.
5
4701 மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.
6
4702 தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள்எனஉள்
ஓர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன் - சார்ந்தேன்சிற்
றம்பலத்தில் எல்லாம்வல் லானை அவன்அருளால்
எம்பலத்தெல் லாம்வலன்ஆ னேன்.
7
4703 ஆனேன் அவனா அவன்அருளால் ஆங்காங்கு
நானே களித்து நடிக்கின்றேன் - தானேஎன்
தந்தைஎன்பால் வைத்த தயவைநினைக் குந்தோறும்
சிந்தைவியக் கின்றேன் தெரிந்து.
8
4704 தெரிந்தேன் அருளால் சிவம்ஒன்றே என்று
புரிந்தேன் சிவம்பலிக்கும் பூசை - விரிந்தமனச்
சேட்டைஎலாம் தீர்த்துவிட்டேன் சித்தெல்லாம் வல்லஅருள்
நாட்டைஎலாம் கைக்கொண்டேன் நான்.
9
4705 நான்செய்த நற்றவந்தான் யாதோ நவிற்றரிது
வான்செய்த தேவரெலாம் வந்தேவல் - தான்செய்து
தம்பலம்என் றேமதிக்கத் தான்வந்தென் னுட்கலந்தான்
அம்பலவன் தன்அருளி னால்.
10
திருச்சிற்றம்பலம்
Back


91. உலப்பில் இன்பம்

கலிவிருத்தம்

4706. கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே
தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே
பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த்
தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே.
1
4707 கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே
சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்
மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்
யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.
2
4708 எந்தாய்உனைக் கண்டு களித்தனன் ஈண்டிப்போதே
சிந்தாநல மும்பல மும்பெற்றுத் தேக்குகின்றேன்
அந்தாமரை யான்நெடு மாலவன் ஆதிவானோர்
வந்தார்எனை வாழ்த்துகின் றார்இங்கு வாழ்கஎன்றே.
3
4709 வாழ்வேன்அரு ளாரமு துண்டிங்கு வாழ்கின்றேன்நான்
ஏழ்வேதனை யும்தவிர்ந் தேன்உனை யேஅடைந்தேன்
சூழ்வேன்திருச் சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித்
தாழ்வேன்அல தியார்க்கும் இனிச்சற்றும் தாழ்ந்திடேனே.
4
4710 தாழாதெனை ஆட்கொண் டருளிய தந்தையேநின்
கேழார்மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன்நான்
ஏழாநிலை மேல்நிலை ஏறி இலங்குகின்றேன்
ஊழால்வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்ததன்றே.
5
4711 கோடாமறை ஆகமம் ஆதிய கூறுகின்ற
சூடாமணி யேமணி யுள்ஒளிர் சோதியேஎன்
பாடானவை தீர்த்தருள் ஈந்துநின் பாதம்என்னும்
வாடாமலர் என்முடி சூட்டினை வாழிநீயே.
6
4712 எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின்
நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே
கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென்
பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே.
7
4713 பரமான சிதம்பர ஞான சபாபதியே
வரமான எல்லாம் எனக்கீந்தநல் வள்ளலேஎன்
தரமானது சற்றும் குறித்திலை சாமிநின்னை
உரமானஉள் அன்பர்கள் ஏசுவர் உண்மைஈதே.
8
4714 தாயேஎனைத் தந்த தயாநிதித் தந்தையேஇந்
நாயேன்பிழை யாவையும் கொண்டனை நன்மைஎன்றே
காயேகனி யாகக் கருதும் கருத்தனேநின்
சேயேஎன என்பெயர் எங்கும் சிறந்ததன்றே.
9
4715 பொய்யேஉரைக் கின்றஎன் சொல்லும் புனைந்துகொண்டாய்
மெய்யேதிரு அம்பலத் தாடல்செய் வித்தகனே
எய்யேன்இனி வெம்மலக் கூட்டில் இருந்தென்உள்ளம்
நையேன்சுத்த நல்லுடம் பெய்தினன் நானிலத்தே.
10
திருச்சிற்றம்பலம்
Back


92. மெய் இன்பப் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4716. சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் சோதித்
தந்தைய ரேஎனைத் தாங்குகின் றீரே
உத்தமம் ஆகும்நுந் திருச்சமு கத்தென்
உடல்பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும்என் தனக்கும்
ஏதுஞ் சுதந்தரம் இல்லைஇங் கினிநீர்
எத்தகை ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
1
4717 ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
2
4718 அகத்தொன்று புறத்தொன்று நினைத்ததிங் கில்லை
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேநீர்
சகத்தென்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர்
தனிப்பெருந் தேவரீர் திருச்சமு கத்தே
உகத்தென(360) துடல்பொருள் ஆவியை நுமக்கே
ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன்
இகத்தன்றிப் பரத்தினும் எனக்கோர்பற் றிலைகாண்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
3
(360). உகத்து - உகந்து என்பதன் வலித்தல் விகாரம் - முதற்பதிப்பு.
4719 தப்படி எடுத்துக்கொண் டுலகவர் போலே
சாற்றிட மாட்டேன்நான் சத்தியம் சொன்னேன்
செப்படி வித்தைசெய் சித்தர்என் றோதும்
தேவரீர் வல்லபத் திருச்சமு கத்தே
இப்படி வான்முதல் எங்கணும் அறிய
என்னுடல் ஆதியை ஈந்தனன் உமக்கே
எப்படி ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
4
4720 தருணத்துக் கேற்றவா சொல்லிப்பின் மாற்றும்
தப்புரை ஈதன்று சத்தியம் சொன்னேன்
கருணைப் பெருக்கினில் கலந்தென துள்ளே
கனவினும் நனவினும் களிப்பருள் கின்றீர்
வருணப் பொதுவிலும் மாசமு கத்தென்
வண்பொரு ளாதியை நண்பொடு கொடுத்தேன்
இருள்நச் சறுத்தமு தந்தர வல்லீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
5
4721 வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தைஅன் றிதுஎன்
மனம்ஒத்துச் சொல்லிய வாய்மைமுக் காலும்
தாய்மட்டில் அன்றிஎன் தந்தையும் குருவும்
சாமியும் ஆகிய தனிப்பெருந் தகையீர்
ஆய்மட்டில் என்னுடல் ஆதியை நுமக்கே
அன்புடன் கொடுத்தனன் ஆண்டவ ரேநீர்
ஏய்மட்டில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
6
4722 தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும்
திருட்டுப்பேச் சன்றுநும் திருவுளம் அறியும்
எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி
என்பவை மூன்றும்உள் அன்பொடு கொடுத்தேன்
சித்திக்கும் மூலத்தைத் தெளிவித்தென் உள்ளே
திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே
இத்திக்கில் எப்படி யேனுஞ்செய் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
7
4723 புன்மார்க்கத் துள்ளும் புறத்தும் வேறாகிப்
புகன்றசொல் அன்றுநும் பொன்னடி கண்ட
சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச்
சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன்
தன்மார்க்கத் தென்னுடல் ஆதியை நுமக்கே
தந்தனன் திருவருட் சந்நிதி முன்னே
என்மார்க்கத் தெப்படி யேனுஞ்செய் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
8
4724 இச்சைவே றில்லைஇங் கென்கருத் தெல்லாம்
என்னுள் அமர்ந்தறிந் தேஇருக் கின்றீர்
விச்சை எலாம்வல்ல நுந்திருச் சமுக361
விண்ணப்பம் என்னுடல் ஆதியை நுமக்கே
நிச்சலும் தந்தனன் என்வசம் இன்றி
நின்றனன் என்றனை நீர்செய்வ தெல்லாம்
எச்செயல் ஆயினும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
9
361. சமுகம் - ச. மு. க. பதிப்பு.
4725 மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
மூவகை யாம்உடல் ஆதியை நுமது
பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
10
4726 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
11
திருச்சிற்றம்பலம்
Back


93. சிவபுண்ணியப் பேறு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4727. மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
வாழ்விலே வரவிலே மலஞ்சார்
தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
காலிலே ஆசை வைத்தனன் நீயும்
கனவினும் நனவினும் எனைநின்
பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
1
4728 மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
பரிந்தெனை அழிவிலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
3
4729 குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
நிற்கின்றார் நிற்கநான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
3
4730 கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
கொழுநரும் மகளிரும் நாண
நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
நீங்கிடா திருந்துநீ என்னோ
டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
றறிவுரு வாகிநான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
4
4731 உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
நாட்டமும் கற்பகோ டியினும்
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
வழங்கிடப் பெற்றனன் மரண
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
5
4732 நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
6
4733 துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
விழித்திருந் திடவும்நோ வாமே
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
மன்றிலே வயங்கிய தலைமைப்
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
7
4734 புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
துலங்கவும் திருவருட் சோதிப்
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
8
4735 வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க
வையமே உய்யஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
நன்மணி மன்றிலே நடிக்கும்
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
9
4736 கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
10
திருச்சிற்றம்பலம்
Back


94. சிவானந்தப் பற்று

கட்டளைக் கலித்துறை

4737. வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கியநின்
பாதமும் மாமுடி யும்கண்டு கொள்ளும் படிஎனக்கே
போதமும் போதத் தருள்அமு தும்தந்த புண்ணியனே
நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.
1
4738 வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே
சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே
எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென்
விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே.
2
4739 சிற்சபை அப்பனைக் கண்டுகொண் டேன்அருள் தெள்ளமுதம்
சற்சபை உள்ளம் தழைக்கஉண் டேன்உண்மை தான்அறிந்த
நற்சபைச் சித்திகள் எல்லாம்என் கைவசம் நண்ணப்பெற்றேன்
பொற்சபை ஓங்கப் புரிந்தாடு தற்குப் புகுந்தனனே.
3
4740 வரையற்ற சீர்ப்பெரு வாழ்வுதந் தென்மனம் மன்னிஎன்றும்
புரையற்ற மெய்ந்நிலை ஏற்றிமெய்ஞ் ஞானப் பொதுவினிடைத்
திரையற்ற காட்சி அளித்தின் னமுதத் தெளிவருளி
நரையற்று மூப்பற் றிறப்பற் றிருக்கவும் நல்கியதே(362).
4
(362). நண்ணினனே - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
4741 தாயாகி என்உயிர்த் தந்தையும் ஆகிஎன் சற்குருவாய்த்
தேயாப் பெரும்பதம் ஆகிஎன் சத்தியத் தெய்வமுமாய்
வாயாரப் பாடும்நல் வாக்களித் தென்உளம் மன்னுகின்ற
தூயா திருநட ராயாசிற் றம்பலச் சோதியனே.
5
4742 ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
6
4743 தன்னே ரிலாத தலைவாசிற் றம்பலம் தன்னில்என்னை
இன்னே அடைகுவித் தின்பருள் வாய்இது வேதருணம்
அன்னே எனைப்பெற்ற அப்பாஎன் றுன்னை அடிக்கடிக்கே
சொன்னேன்முன் சொல்லுகின் றேன்பிற ஏதுந் துணிந்திலனே.
7
4744 தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே
மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்
நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்
சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.
8
4745 கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.
9
4746 தீமைகள் யாவும் தொலைத்துவிட் டேன்இத் தினந்தொடங்கிச்
சேமநல் இன்பச் செயலே விளங்கமெய்ச் சித்திஎலாம்
காமமுற் றென்னைக் கலந்துகொண் டாடக் கருணைநடத்
தாமன்என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.
10
திருச்சிற்றம்பலம்
Back


95. இறை எளிமையை வியத்தல்


எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்
4747. படமாட்டேன் துயர்சிறிதும் படமாட்டேன் இனிநான்
பயப்படவும் மாட்டேன்நும் பதத்துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
மெய்ம்மைஇது நும்மாணை விளம்பினன்நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர்மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளர்ஒளிஅம் பலத்தாடல் வளர்ஒளிநும் அல்லால்
நடமாட்டேன் என்உளத்தே நான்சாக மாட்டேன்
நல்லதிரு வருளாலே நான்தான்ஆ னேனே.
1
4748 சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்
தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்
மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா
வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்
போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்
புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்
நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
2
4749 வேதாந்த நிலையும்அதன் அந்தத்தே விளங்கும்
மெய்ந்நிலையும் காட்டுவித்தீர் விளங்கியசித் தாந்தப்
போதாந்த நிலையும்அப்பால் புகல்அரிதாம் பெரிய
பொருள்நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்தவடி வுடனே
பகர்பிரண வாகாரப் பரிசும்எனக் களித்தீர்
நாதாந்தத் தனிச்செங்கோல் நான்செலுத்தக் கொடுத்தீர்
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
3
4750 ஆர்நீஎன் றெதிர்வினவில் விடைகொடுக்கத் தெரியா
அறிவிலியேன் பொருட்டாக அன்றுவந்தென் தனக்கே
ஏர்நீடும் பெரும்பொருள்ஒன் றீந்துமகிழ்ந் தாண்டீர்
இன்றும்வலிந் தெளியேன்பால் எய்திஒளி ஓங்கப்
பார்நீடத் திருவருளாம் பெருஞ்சோதி அளித்தீர்
பகரும்எலாம் வல்லசித்திப் பண்புறவும் செய்தீர்
நார்நீட நான்தானாய் நடம்புரிகின் றீரே
நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.
4
4751 பாயிரமா மறைகளெலாம் பாடுகின்ற பாட்டுன்
பாட்டேஎன் றறிந்துகொண்டேன் பரம்பொருள்உன் பெருமை
ஆயிரம்ஆ யிரங்கோடி நாஉடையோர் எனினும்
அணுத்துணையும் புகல்அரிதேல் அந்தோஇச் சிறியேன்
வாய்இரங்கா வகைபுகலத் துணிந்தேன்என் னுடைய
மனத்தாசை ஒருகடலோ எழுகடலில் பெரிதே
சேய்இரங்கா முனம்எடுத்தே அணைத்திடுந்தாய் அனையாய்
திருச்சிற்றம் பலம்விளங்கும் சிவஞான குருவே.
5
4752 ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன்
உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய்
வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும்
வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ
கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல்
கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை
நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன்
நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.
6
4753 கண்ணுடையீர் பெருங்கருணைக் கடலுடையீர் எனது
கணக்கறிந்தீர் வழக்கறிந்தீர் களித்துவந்தன் றுரைத்தீர்
எண்ணுடையார் எழுத்துடையார் எல்லாரும் போற்ற
என்னிதய மலர்மிசைநின் றெழுந்தருளி வாமப்
பெண்ணுடைய மனங்களிக்கப் பேருலகம் களிக்கப்
பெத்தருமுத் தருமகிழப் பத்தரெலாம் பரவ
விண்ணுடைய அருட்ஜோதி விளையாடல் புரிய
வேண்டும்என்றேன் என்பதன்முன் விரைந்திசைந்தீர் அதற்கே.
7
4754 பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்
புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்
சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய
தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்
எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்
இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே
இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்
என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.
8
4755 கரும்பின்மிக இனிக்கின்ற கருணைஅமு தளித்தீர்
கண்ணனையீர் கனகசபை கருதியசிற் சபைமுன்
துரும்பின்மிகச் சிறியேன்நான் அன்றுநின்று துயர்ந்தேன்
துயரேல்என் றெல்லையிட்டீர் துரையேஅவ் வெல்லை
விரும்புறஆ யிற்றிதுதான் தருணம்இந்தத் தருணம்
விரைந்தருள வேண்டுமென விளம்பிநின்றேன் அடியேன்
பெரும்பிழைகள் அனைத்தினையும் பொறுத்தருளி இந்நாள்
பெரிதளித்தீர் அருட்பெருமை பெற்றவளில் பெரிதே.
9
4756 அந்நாளில் அடிச்சிறியேன் அம்பலவா யிலிலே
அருளைநினைந் தொருபுறத்தே அயர்ந்தழுது நின்றேன்
முந்நாளில் யான்புரிந்த பெருந்தவத்தால் எனக்கு
முகமலர்ந்து மொழிந்தஅருண் மொழியைநினைந் தந்தச்
செந்நாளை எதிர்பார்த்தே பன்னாளும் களித்தேன்
சிந்தைமலர்ந் திருந்தேன்அச் செல்வமிகு திருநாள்
இந்நாளே ஆதலினால் எனக்கருள்வீர் என்றேன்
என்பதன்முன் அளித்தீர்நும் அன்புலகில் பெரிதே.
10
திருச்சிற்றம்பலம்
Back

96. திருநடப் புகழ்ச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4757. பதியேஎம் பரனேஎம் பரம்பரனே எமது
பராபரனே ஆனந்தப் பதந்தருமெய்ஞ் ஞான
நிதியேமெய்ந் நிறைவேமெய்ந் நிலையேமெய் இன்ப
நிருத்தமிடும் தனித்தலைமை நிபுணமணி விளக்கே
கதியேஎன் கண்ணேஎன் கண்மணியே எனது
கருத்தேஎன் கருத்தில்உற்ற கனிவேசெங் கனியே
துதியேஎன் துரையேஎன் தோழாஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
1
4758 ஆரணமே ஆகமமே ஆரணஆ கமத்தின்
அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவே
காரணமே காரியமே காரணகா ரியங்கள்
கடந்தபெரும் பதியேஎன் கருத்தமர்ந்த நிதியே
பூரணமே புண்ணியமே பொதுவிளங்கும் அரசே
புத்தமுதே சத்தியமே பொன்னேசெம் பொருளே
தோரணமே விளங்குசித்தி புரத்தினும்என் உளத்தும்
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
2
4759 இணைஏதும் இன்றிநின்ற இறையவனே மறைசொல்
ஏகமுமாய் அனேகமுமாய் இலங்குபரம் பரனே
அணையேதும் இன்றிநிறை பெரும்புனலே அதன்மேல்
அனலேஎன் அப்பாஎன் அவத்தைஎலாம் கடத்தும்
புணையேமெய்ப் பொருளேமெய்ப் புகழேமெய்ப் புகலே
பொதுவேஉள் ளதுவேதற் போதமிலார்க் குதவும்
துணையேசத் துவமேதத் துவமேஎன் னுளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
3
4760 எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன்
இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும்
ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே
உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே
வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே
மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே
சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
4
4761 அகவடிவை ஒருகணத்தே அனகவடி வாக்கி
அருளமுதம் உவந்தளித்தே அடிக்கடிஎன் உளத்தே
முகவடிவந் தனைக்காட்டி களித்துவியந் திடவே
முடிபனைத்தும் உணர்த்திஓரு முன்னிலைஇல் லாதே
சகவடிவில் தானாகி நானாகி நானும்
தானும்ஒரு வடிவாகித் தனித்தோங்கப் புரிந்தே
சுகவடிவந் தனைஅளித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
5
4762 உடுத்ததுகில் அவிழ்த்துவிரித் தொருதரையில் தனித்தே
உன்னாதும் உன்னிஉளத் துறுகலக்கத் தோடே
படுத்தயர்ந்த சிறியேன்றன் அருகணைந்து மகனே
பயமுனக்கென் என்றென்னைப் பரிந்துதிருக் கரத்தால்
அடுத்தணைத்துக் கொண்டெடுத்துப் போய்ப்பிறிதோர் இடத்தே
அமர்த்திநகைத் தருளியஎன் ஆண்டவனே அரசே
தொடுத்தணிஎன் மொழிமாலை அணிந்துகொண்டென் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
6
4763 ஆற்றாத அடிச்சிறியேற் காற்றல்மிகக் கொடுத்தே
அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்தன் புடனே
போற்றாத குற்றமெலாம் பொறுத்தருளி எனைஇப்
பூதலத்தார் வானகத்தார் போற்றிமதித் திடவே
ஏற்றாத உயர்நிலைமேல் ஏற்றிஎல்லாம் வல்ல
இறைமையும்தந் தருளியஎன் இறையவனே எனக்கே
தோற்றாத தோற்றுவித்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
7
4764 படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
பார்த்திடலும் அடக்கிஉறும் பரிசம்எலாம் அடக்கித்
தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தம்எலாம் அடக்கிச்
சாதிமதம் சமயம்எனும் சழக்கையும்விட் டடக்கி
மடிப்படக்கி நின்றாலும் நில்லேன்நான் எனவே
வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்கு குதித்த
துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
8
4765 பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன்
படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக
அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும்
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும்
தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன்
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
9
4766 தாங்காதே பசிபெருக்கிக் கடைநாய்போல் உலம்பித்
தவம்விடுத்தே அவந்தொடுத்தே தனித்துண்டும் வயிறு(363)
வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கிவெடித் திடல்போல்
விம்மும்எனில் எழுந்துடனே வெறுந்தடிபோல் விழுந்தே
வாங்காது தூங்கியதோர் வழக்கம்உடை யேனை
வலிந்தடிமை கொண்டருளி மறப்பொழித்தெந் நாளும்
தூங்காதே விழிக்கவைத்த துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே.
10
(363). தனித்துண்டு வயிறும் - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா., ச. மு. க.
திருச்சிற்றம்பலம்
Back


97. திருவருட்பேறு

நேரிசை வெண்பா

4767. சீர்விளங்கு சுத்தத் திருமேனி தான்தரித்துப்
பார்விளங்க நான்படுத்த பாயலிலே - தார்விளங்க
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தனையே
எந்தாய்நின் உள்ளமறி யேன்.
1
4768 பயத்தோ டொருபால் படுத்திருந்தேன் என்பால்
நயத்தோ டணைந்தே நகைத்து - வயத்தாலே
தூக்கி எடுத்தெனைமேல் சூழலிலே வைத்தனைநான்
பாக்கியவான் ஆனேன் பதிந்து.
2
4769 என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில்
முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே
படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை
எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே.
3
4770 சிந்தா குலத்தொடுநான் தெய்வமே என்றுநினைந்
தந்தோ படுத்துள் அயர்வுற்றேன் - எந்தாய்
எடுத்தாள் எனநினையா தேகிடந்தேன் என்னை
எடுத்தாய் தயவைவிய வேன்.
4
4771 உன்னுகின்ற தோறுமென துள்ளம் உருகுகின்ற
தென்னுரைப்பேன் என்னுரைப்பேன் எந்தாயே - துன்னிநின்று
தூக்கம் தவிர்த்தென்னைத் தூக்கிஎடுத் தன்பொடுமேல்
ஆக்கமுற வைத்தாய் அது.
5
4772 நான்படுத்த பாய்அருகில் நண்ணி எனைத்தூக்கி
ஊன்படுத்த தேகம் ஒளிவிளங்கத் - தான்பதித்த
மேலிடத்தே வைத்தனைநான் வெம்மைஎலாம் தீர்ந்தேன்நின்
காலிடத்தே வாழ்கின்றேன் காண்.
6
4773 புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நானறியேன்
பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
7
4774 அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சிஅங்கு
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
தந்தாய்என் நான்செய் தவம்.
8
4775 நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
9
4776 வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
வாழி அருட்சோதி வாழிநட ராயன்
வாழி சிவஞான வழி.
10
திருச்சிற்றம்பலம்
Back


98. அருட்கொடைப் புகழ்ச்சி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
4777. கடையேன் புரிந்த குற்றமெலாம்
கருதா தென்னுட் கலந்துகொண்டு
தடையே முழுதும் தவிர்த்தருளித்
தனித்த ஞான அமுதளித்துப்
புடையே இருத்தி அருட்சித்திப்
பூவை தனையும் புணர்த்திஅருட்
கொடையே கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
1
4778. கடுத்த மனத்தை அடக்கிஒரு
கணமும் இருக்க மாட்டாதே
படுத்த சிறியேன் குற்றமெலாம்
பொறுத்தென் அறிவைப் பலநாளும்
தடுத்த தடையைத் தவிர்த்தென்றும்
சாகா நலஞ்செய் தனிஅமுதம்
கொடுத்த குருவே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
2
4779. மருவும் உலகம் மதித்திடவே
மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த
உணர்வும் என்றும் உலவாத
திருவும் பரம சித்திஎனும்
சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
3
4780. சேட்டித் துலகச் சிறுநடையில்
பல்கால் புகுந்து திரிந்துமயல்
நீட்டித் தலைந்த மனத்தைஒரு
நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
கோட்டிக் கியன்ற குணங்களெலாம்
கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
4
4781. தோலைக் கருதித் தினந்தோறும்
சுழன்று சுழன்று மயங்கும்அந்த
வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும்
அடக்கி ஞான மெய்ந்நெறியில்
கோலைத் தொலைத்துக் கண்விளக்கம்
கொடுத்து மேலும் வேகாத
காலைக் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
5
4782. பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து
பணமே நிலமே பாவையரே
தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச்
செயலே என்று திரிந்துலகில்
ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட்
டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
கட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
6
4783. மதியைக் கெடுத்து மரணம்எனும்
வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
விதியைக் குறித்த சமயநெறி
மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப்
பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
7
4784. தருண நிதியே என்னொருமைத்
தாயே என்னைத் தடுத்தாண்டு
வருண நிறைவில் சன்மார்க்கம்
மருவப் புரிந்த வாழ்வேநல்
அருண ஒளியே எனச்சிறிதே
அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
கருணை கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
8
4785. பொற்பங் கயத்தின் புதுநறவும்
சுத்த சலமும் புகல்கின்ற
வெற்பந் தரமா மதிமதுவும்
விளங்கு(364) பசுவின் தீம்பாலும்
நற்பஞ் சகமும் ஒன்றாகக்
கலந்து மரண நவைதீர்க்கும்
கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
9
364. விளங்கும் - முதற்பதிப்பு., பொ, சு., பி. இரா., ச. மு. க.
4786. புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம்
பொறுத்து ஞான பூரணமா
நிலையைத் தெரித்துச் சன்மார்க்க
நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
மலையைக் காட்டி அதனடியில்
வயங்க இருத்திச் சாகாத
கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
10
4787. அருணா டறியா மனக்குரங்கை
அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
திருணா டனைத்தும் சுழன்றுசுழன்
றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
தெருணா டுலகில் மரணம்உறாத்
திறந்தந் தழியாத் திருஅளித்த
கருணா நிதியே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
11
4788. மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு
மனத்தை அடக்கத் தெரியாதே
பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல்
பெருக்கித் திரிந்தேன் பேயேனை
விண்ணுள் மணிபோன் றருட்சோதி
விளைவித் தாண்ட என்னுடைய
கண்ணுள் மணியே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
12
4789. புலந்த மனத்தை அடக்கிஒரு
போது நினைக்க மாட்டாதே
அலந்த சிறியேன் பிழைபொறுத்தே
அருளா ரமுதம் அளித்திங்கே
உலந்த உடம்பை அழியாத
உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
கலந்த பதியே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
13
4790. தனியே கிடந்து மனங்கலங்கித்
தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
இனியே துறுமோ என்செய்வேன்
எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு
முன்னே கருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
14
4791. பெண்ணே பொருளே எனச்சுழன்ற
பேதை மனத்தால் பெரிதுழன்று
புண்ணே எனும்இப் புலைஉடம்பில்
புகுந்து திரிந்த புலையேற்குத்
தண்ணேர் மதியின் அமுதளித்துச்
சாகா வரந்தந் தாட்கொண்ட
கண்ணே மணியே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
15
4792. பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில்
புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
எருத்தில் திரிந்தேன் செய்பிழையை
எண்ணா தந்தோ எனைமுற்றும்
திருத்திப் புனித அமுதளித்துச்
சித்தி நிலைமேல் சேர்வித்தென்
கருத்தில் கலந்தோய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
16
4793. பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில்
பேய்போல் சுழன்ற பேதைமனத்
தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந்
திருந்தேன் தன்னை எடுத்தருளி
விண்ணுக் கிசைந்த கதிர்போல்என்
விவேகத் திசைந்து மேலும்என்தன்
கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
17
4794. மாட்சி அளிக்கும் சன்மார்க்க
மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
சூழ்ச்சி அறியா துழன்றேனைச்
சூழ்ச்சி அறிவித் தருளரசின்
ஆட்சி அடைவித் தருட்சோதி
அமுதம் அளித்தே ஆனந்தக்
காட்சி கொடுத்தாய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
18
4795. பொய்யிற் கிடைத்த மனம்போன
போக்கில் சுழன்றே பொய்உலகில்
வெய்யிற் கிடைத்த புழுப்போல
வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம்
விளைவித் திடுமா மணியாய்என்
கையிற் கிடைத்தோய் நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
19
4796. போதல் ஒழியா மனக்குரங்கின்
போக்கை அடக்கத் தெரியாது
நோதல் புரிந்த சிறியேனுக்
கிரங்கிக் கருணை நோக்களித்துச்
சாதல் எனும்ஓர் சங்கடத்தைத்
தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
காதல் அரசே நின்தனக்குக்
கைம்மா றேது கொடுப்பேனே.
20
திருச்சிற்றம்பலம்
Back

99. திருவருட் கொடை

கொச்சகக் கலிப்பா

4797. சிருட்டிமுதல் ஐந்தொழில்நான் செய்யஎனக் கருள்புரிந்தாய்
பொருட்டிகழ்நின் பெருங்கருணைப் புனிதஅமு துவந்தளித்தாய்
தெருட்டிகழ்நின் அடியவர்தம் திருச்சபையின் நடுஇருத்தித்
தெருட்டிஎனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
1
4798 படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
உடைத்தனிப்பேர் அருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய் நின்அடியர் குழுநடுவே
திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
2
4799 அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய்
உயர்வுறுபேர் அருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய்
மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச்
செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
3
4800 ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
4
4801 முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னிமகிழ்ந் தெனக்களித்தாய்
புத்தமுதம் உண்ணுவித்தோர் பொன்னணிஎன் கரத்தணிந்தாய்
சித்தர்எனும் நின்னடியார் திருச்சபையில் நடுஇருத்திச்
சித்துருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
5
4802 ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
6
4803 நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
7
4804 நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
8
4805 புல்வழங்கு புழுஅதனில் சிறியேனைப் புணர்ந்தருளிச்
சொல்வழங்கு தொழில்ஐந்தும் துணிந்துகொடுத் தமுதளித்தாய்
கல்விபெறு நின்னடியர் கழகநடு வைத்தென்னைச்
செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
9
4806 தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
10
திருச்சிற்றம்பலம்
Back


100. அனுபவ சித்தி

கட்டளைக் கலித்துறை

4807. அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்துலகில்
வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.
1
4808 விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.
2
4809 காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை
ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து
நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்
கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.
3
4810 கூறுகந் தாய்சிவ காமக் கொடியைக் கொடியில்வெள்ளை
ஏறுகந் தாய்என்னை ஈன்றுகந் தாய்மெய் இலங்குதிரு
நீறுகந் தாய்உல கெல்லாம் தழைக்க நிமிர்சடைமேல்
ஆறுகந் தாய்மன்றில் ஆட்டுகந் தாய்என்னை ஆண்டவனே.
4
4811 ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
5
4812 மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
6
4813 வாட்டமெல் லாந்தவிர்ந் தேன்அருட் பேரொளி வாய்க்கப்பெற்றேன்
கூட்டமெல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
தேட்டமெல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
ஆட்டமெல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
7
4814 நான்செய்த புண்ணியம் யார்செய் தனர்இந்த நானிலத்தே
வான்செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்துகண்டேன்
ஊன்செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளிமயமாக்
கோன்செய வேபெற்றுக் கொண்டேன்உண் டேன்அருட் கோன்அமுதே.
8
4815 எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
9
4816 சிற்றம் பலத்தைத் தெரிந்துகொண் டேன்எம் சிவன்அருளால்
குற்றம் பலவும் தவிர்ந்துநின் றேன்எண் குணக்குன்றிலே
வெற்றம்பல் செய்தவர் எல்லாம் விரைந்து விரைந்துவந்தே
நற்றம் பலம்தரு வாய்என்கின் றார்இந்த நானிலத்தே.
10
4817 ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற
நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல்
இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள
மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே.
11
திருச்சிற்றம்பலம்
Back


101. பொன்வடிவப் பேறு

நேரிசை வெண்பா

4818. அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
கொள்ளற் கபயங் கொடு.
1
4819 ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
தாடிக் களிக்க அருள்.
2
4820 இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
பொன்னேர் பதத்தைப் புகழ்.
3
4821 ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே
ஊனமெலாம் கைவிட் டொழிந்தனவே - ஞானமுளோர்
போற்றும்சிற் றம்பலத்தும் பொன்னம்ப லத்துநடம்
போற்றும் படிப்பெற்ற போது.
4
4822 உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
59
4823 ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதி அது.
6
4824 எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
உண்டுவியக் கின்றேன் உவந்து.
7
4825 ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
ஈசனத்தன் அம்பலவ னே.
8
4826 ஐயனெனக் கீந்த அதிசயத்தை என்புகல்வேன்
பொய்யடியேன் குற்றம் பொறுத்தருளி - வையத்
தழியாமல் ஓங்கும் அருள்வடிவம் நான்ஓர்
மொழிஆடு தற்கு முனம்.
9
4827 ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி
அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்
வந்தான் இரவி வருதற்கு முன்கருணை
தந்தானென் னுட்கலந்தான் தான்.
10
4828 ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
வெந்தொழில்போய் நீங்க விரைந்து.
11
4829 ஔவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
நிரந்தொன்றாய்(365) நின்றான் நிலத்து.
12
(365). நிறைந்தொன்றாய் - முதற்பதிப்பு., பொ. சு., ச. மு. க.
நிரைந்தொன்றாய் - பி. இரா. ' நிரந்தொன்றாய் ' -
என்பது அடிகள் எழுத்து.
4830 சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்
கடவுளே மாயைஇரு கன்மமிருள் எல்லாம்
விடவுளே நின்று விளங்கு.
13
4831 துன்பமெலாம் தீர்ந்த சுகமெல்லாம் கைதந்த
அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.
14
4832 தூக்கம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
ஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் - ஏக்கமெலாம்
நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன்வடிவம்
தாங்கினேன் சத்தியமாத் தான்.
15
4833 துன்பம் கெடுத்துச் சுகங்கொடுத்தான் என்தனக்கே
அன்பகத்தில் வாழும்சிற் றம்பலத்தான் - இன்புருவம்
தாங்கினேன் சாகாத் தனிவடிவம் பெற்றொளியால்
ஓங்கினேன் உண்மை உரை.
16
திருச்சிற்றம்பலம்
Back


102. தத்துவ வெற்றி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4834. திருவளர்பே ரருளுடையான் சிற்சபையான் எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியர்எலாம் அறிவார்
இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
ஈங்குமது துள்ளல்எலாம் ஏதும்நட வாதே.
1
4835 மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே.
2
4836 பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறி யாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
3
4837 விரிந்தமனம் எனும்சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்துவிரிந் தலையாதே மெலியாதே விடயம்
புரிந்தநெறி புரிந்தவமே போகாதே பொறிவாய்ப்
புரையாதே விரையாதே புகுந்துமயங் காதே
தெரிந்துதெளிந் தொருநிலையில் சித்திரம்போல் இருநீ
சிறிதசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்தெனைநீ யார்என்று பார்த்தாய்சிற் சபைவாழ்
பதிதனக்கே அருட்பட்டம் பலித்தபிள்ளை நானே.
4
4838 பாய்மனம்என் றுரைத்திடும்ஓர் பராய்முருட்டுப் பயலே
பல்பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச்
சேய்மையினும் அண்மையினும் திரிந்தோடி ஆடித்
தியங்காதே ஒருவார்த்தை திருவார்த்தை என்றே(366)
ஆய்வுறக்கொண் டடங்குகநீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியொடுவேர் அறுத்திடுவேன் ஆணைஅருள் ஆணை
பேய்மதியா நீஎனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன்தன் செல்வாக்குப் பெற்றபிள்ளை நானே.
5
(366). எனவே - முதற்பதிப்பு., பொ. சு., பி. இரா.
4839 மயங்குபுத்தி எனும்உலக வழக்காளிப் பயலே
வழிதுறையீ தென்றறியாய் வகைசிறிதும் அறியாய்
உயங்கிவிசா ரித்திடவே ஓடுகின்றாய் உணரும்
உளவறியாய் வீணுழைப்பிங் குழைப்பதில்என் பயனோ
வயங்குமனம் அடங்கியவா றடங்குகநீ இலையேல்
மடித்திடுவேன் கணத்தில்உனை வாய்மைஇது கண்டாய்
இயங்கஎன்னை அறியாயோ யார்எனஎண் ணினையோ
எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
6
4840 கலையறியாச் சித்தம்எனும் கனமோசப் பயலே
கால்அறியாய் தலைஅறியாய் காண்பனகண் டறியாய்
நிலையறியாய் ஒன்றைஒன்றா நிச்சயித்திவ் வுலகை
நெறிமயங்க மயக்குகின்றாய் நீயோஇங் குறுவாய்
அலையறியாக் கடல்போலே அசைவறநின் றிடுநீ
அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனைத்தான்
அலைவறிவாய் என்றனைநீ அறியாயோ நான்தான்
ஆண்டவன்தன் தாண்டவங்கண் டமர்ந்தபிள்ளை காணே.
7
4841 அகங்காரம் எனும்பொல்லா அடவாதிப் பயலே
அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்துமுடுக் கின்றாய்
செகங்காணத் தலைகாலும் தெரியாமல் அலைந்து
திரிகின்றாய் நின்செபந்தான் சிறிதும்நட வாது
இகங்காண அடங்குகநீ அடங்காயேல் கணத்தே
இருந்தஇடம் தெரியாதே எரிந்திடச்செய் திடுவேன்
சுகங்காண என்றனைநீ அறியாயோ நான்தான்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றபிள்ளை காணே.
8
4842 மான்எனும்ஓர் சகச்சாலச் சிறுக்கிஇது கேள்உன்
வஞ்சகக்கூத் தெல்லாம்ஓர் மூட்டைஎனக் கட்டி
ஈனம்உற நின்தலைமேல் ஏற்றெடுத்துக் கொண்டுன்
ஏவல்புரி பெண்களொடே இவ்விடம்விட் டேகிக்
கானடைந்து கருத்தடங்கிப் பிழைத்திடுநீ இலையேல்
கணத்தில்உனை மாய்ப்பேன்உன் கணத்தினொடுங் கண்டாய்
ஏன்எனைநீ அறியாயோ சிற்சபையில் நடஞ்செய்
இறைவன்அருட் பெருஞ்ஜோதிக் கினியபிள்ளை நானே.
9
4843 மாயைஎனும் படுதிருட்டுச் சிறுக்கிஇது கேள்உன்
மாயைஎலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக் கொண்டுன்
சாயைஎனும் பெண்இனத்தார் தலைமேலும் உனது
தலைமேலும் சுமந்துகொண்டோ ர் சந்துவழி பார்த்தே
பேய்எனக்காட் டிடைஓடிப் பிழைத்திடுநீ இலையேல்
பேசுமுன்னே மாய்த்திடுவேன் பின்னும்முன்னும் பாரேன்
ஆய்எனைநீ அறியாயோ எல்லாஞ்செய் வல்லார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை நானே.
10
4844 மாமாயை எனும்பெரிய வஞ்சகநீ இதுகேள்
வரைந்தஉன்தன் பரிசனப்பெண் வகைதொகைகள் உடனே
போமாறுன் செயல்அனைத்தும் பூரணமாக் கொண்டு
போனவழி தெரியாதே போய்பிழைநீ இலையேல்
சாமாறுன் தனைஇன்றே சாய்த்திடுவேன் இதுதான்
சத்தியம்என் றெண்ணுதிஎன் தன்னைஅறி யாயோ
ஆமாறு சிற்சபையில் அருள்நடனம் புரிவார்
அருள்அமுதுண் டருள்நிலைமேல் அமர்ந்தபிள்ளை காணே.
11
4845 கன்மம்எனும் பெருஞ்சிலுகுக் கடுங்கலகப் பயலே
கங்குகரை காணாத கடல்போலே வினைகள்
நன்மையொடு தீமைஎனப் பலவிகற்பங் காட்டி
நடத்தினைநின் நடத்தைஎலாம் சிறிதும்நட வாது
என்முன்இருந் தனைஎனில்நீ அழிந்திடுவாய் அதனால்
இக்கணத்தே நின்இனத்தோ டேகுகநீ இலையேல்
இன்மையுற மாய்த்திடுவேன் என்னையறி யாயோ
எல்லாஞ்செய் வல்லவனுக் கினியபிள்ளை நானே.
12
4846 எத்துணையும் காட்டாத ஆணவம்என் றிடும்ஓர்
இருட்டறைக்கோர் அதிகாரக் குருட்டுமுடப் பயலே
இத்தனைநாள் பிடித்ததுனைக் கண்டுதுரத் திடவே
இன்னும்அரைக் கணந்தரியேன் இக்கணத்தே நினது
பொத்தியசுற் றத்துடனே போய்விடுதி இலையேல்
பூரணமெய் அருள்ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே
சத்தியஞ்சொன் னேன்எனைநீ அறியாயோ ஞான
சபைத்தலைவன் தருதலைமைத் தனிப்பிள்ளை நானே.
13
4847 பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி
ஒருஞானத் திருவமுதுண் டோ ங்குகின்றேன் இனிநின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்
அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ
அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க
தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ
சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.
14
4848 பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள்
பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே
வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண்
வீசும்அருட் பெருஞ்ஜோதி விளங்குகின்ற தறிநீ
ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா
திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே
மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்
வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே.
15
4849 தூக்கம்எனும் கடைப்பயலே சோம்பேறி இதுகேள்
துணிந்துனது சுற்றமொடு சொல்லும்அரைக் கணத்தே
தாக்கு(367)பெருங் காட்டகத்தே ஏகுகநீ இருந்தால்
தப்பாதுன் தலைபோகும் சத்தியம்ஈ தறிவாய்
ஏக்கமெலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கமெலாம் பெற்றேன்
இன்பமுறு கின்றேன்நீ என்னைஅடை யாதே
போக்கில்விரைந் தோடுகநீ பொற்சபைசிற் சபைவாழ்
பூரணர்க்கிங் கன்பான பொருளன்என அறிந்தே.
16
(367) 'தாக்கு' என்றே எல்லாப் படிகளிலும் முதல் அச்சிலும் காண்கிறது. மூலத்தில்
இது 'தணிந்த' என்பதுபோலும் தெளிவற்றுத் தோன்றுகின்றது. - ஆ. பா.
ஆ. பா. மூலத்தில் என்று சொல்வது அடிகள் கையெழுத்து மூலத்தையே. முதற்பதிப்பு;
பொ. சு., பி. இரா; ச. மு. க. பதிப்புகளில் தாக்கு என்ற பாடமே காணப்படுகிறது.
சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படியில் 'தணிந்த' என்றே உள்ளது. மிகத்
தெளிவாகவும் காணப்படுகிறது.
4850 பயம்எனும்ஓர் கொடும்பாவிப் பயலேநீ இதுகேள்
பற்றறஎன் தனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
தயவின்உரைத் தேன்இன்னும் இருத்திஎனில் உனது
தன்றலைக்குத் தீம்புவரும் தலைமட்டோ நினது
செயலுறும்உள் உடம்பழியும் சுற்றமெலாம் இறக்கும்
தீர்ந்ததினி இல்லைஎன்றே திருவார்த்தை பிறக்கும்
அயலிடைநேர்ந் தோடுகநீ என்னைஅறி யாயோ
அம்பலத்தென் அப்பன்அருள் நம்புபிள்ளை நானே.
17
4851 கோபமெனும் புலைப்பயலே காமவலைப் பயலே
கொடுமோகக் கடைப்பயலே குறும்புமதப் பயலே
தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே
தயவுடன்இங் கிசைக்கின்றேன் தாழ்ந்திருக்கா தீர்காண்
தீபம்எலாம் கடந்திருள்சேர் நிலஞ்சாரப் போவீர்
சிறிதுபொழு திருந்தாலும் திண்ணம்இங்கே அழிவீர்
சாபமுறா முன்னம்அறிந் தோடுமினோ என்னைத்
தான்அறியீர் தனித்தலைவன் தலைப்பிள்ளை நானே.
18
4852 பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர்
படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே
வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம்
வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர்
நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர்
நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே
கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும்
கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே.
19
4853 மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே
வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே
பரணம்உறு பேர்இருட்டுப் பெருநிலமும் தாண்டிப்
பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ
இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்
என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை
அரண்உறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்
அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.
20
திருச்சிற்றம்பலம்
Back


103. பேறடைவு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4854. மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
வரையுள தாதலால் மகனே
எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
தெழில்உறு மங்கலம் புனைந்தே
குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
கோலத்தால் காட்டுக எனவே
வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
1
4855 எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
இரண்டரைக் கடிகையில் உனக்கே
அம்புவி வானம் அறியமெய் அருளாம்
அனங்கனை(368) தனைமணம் புரிவித்
தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
உண்மைஈ தாதலால் உலகில்
வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
மெய்ப்பொது நடத்திறை யவரே.
2
(368). அங்கனை - முதற்பதிப்பு., பொ. சு; பி. இரா., ச. மு. க.
4856 அன்புடை மகனே மெய்யருள் திருவை
அண்டர்கள் வியப்புற நினக்கே
இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
இரண்டரைக் கடிகையில் விரைந்தே
துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
தூய்மைசேர் நன்மணக் கோலம்
பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
பொதுநடம் புரிகின்றார் தாமே.
3
4857 ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
இரண்டரைக் கடிகையில் நினக்கே
ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
உண்மைஈ தாதலால் இனிவீண்
போதுபோக் காமல் மங்கலக் கோலம்
புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
தெருட்டிய சிற்சபை யவரே.
4
4858 விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
மெய்யருள் திருவினை நினக்கே
வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
எல்லையுள் எழில்மணக் கோலம்
நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
5
4859 களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
கடிகைஓர் இரண்டரை அதனில்
ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
உனக்குநன் மணம்புரி விப்பாம்
அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
அணிபெறப் புனைகநீ விரைந்தே
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
6
4860 கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
களிப்பொடு மணம்புரி விப்பாம்
விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
விரைந்துநன் மங்கலக் கோலம்
நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
நவிலும்அவ் வுலகவர் பிறரும்
இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
இயலுறு சிற்சபை யவரே.
7
4861 ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
அருள்ஒளித் திருவைநின் தனக்கே
மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
விரைந்திரண் டரைக்கடி கையிலே
கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
களிப்பொடு மங்கலக் கோலம்
வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
என்றனர் மன்றிறை யவரே.
8
4862 தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
தூயநீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
பண்பொடு புனைந்துகொள் கடிகை
ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
எழில்உற மணம்புரி விப்பாம்
ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
இயன்மணி மன்றிறை யவரே.
9
4863 மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
மணம்புரி விக்கின்றாம் இதுவே
வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
மங்கலக் கோலமே விளங்க
இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
தந்தையார் சிற்சபை யவரே.
19
திருச்சிற்றம்பலம்
Back


104. அடைக்கலம் புகுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4864. எண்ணா நின்றேன் எண்ணமெலாம் எய்த அருள்செய் கின்றதனித்
தண்ணார் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெருவாழ்வே
கண்ணார் ஒளியே ஒளிஎல்லாம் கலந்த வெளியே கருதுறும்என்
அண்ணா ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
1
4865. திரைசேர் மறைப்பைத் தீர்த்தெனக்கே தெரியா வெல்லாந் தெரிவித்துப்
பரைசேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழந்தந்தே
கரைசேர் இன்பக் காட்சிஎலாம் காட்டிக் கொடுத்தே எனையாண்ட
அரைசே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
2
4866. தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர்
ஊனே புகுந்த ஒளியேமெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம்
வானே என்னைத் தானாக்கு வானே கோனே எல்லாம்வல்
லானே ஐயா அம்மாஎன் அப்பா யான்உன் அடைக்கலமே.
3
4867. கடையேன் உள்ளக் கவலைஎலாம் கழற்றிக் கருணை அமுதளித்தென்
புடையே அகத்தும் புறத்தும்அகப் புறத்தும் விளங்கும் புண்ணியனே
தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே
அடையேன் உலகைஉனை அடைந்தேன் அடியேன்உன்றன் அடைக்கலமே.
4
4868. இகத்தும் பரத்தும் பெறும்பலன்கள் எல்லாம் பெறுவித் திம்மையிலே
முகத்தும் உளத்தும் களிதுளும்ப மூவா இன்ப நிலைஅமர்த்திச்
சகத்துள் ளவர்கள் மிகத்துதிப்பத் தக்கோன் எனவைத் தென்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
5
4869. நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று
வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்
பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை
ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.
6
4870. பாடுஞ் சிறியேன் பாட்டனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக்
கோடு மனப்பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்றொழித்து
நீடும் உலகில் அழியாத நிலைமேல் எனைவைத் தென்னுளத்தே
ஆடும் கருணைப் பெருவாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.
7
4871. கட்டுக் கடங்கா மனப்பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்தென்
மட்டுக் கடங்கா ஆங்கார மதமா அடங்க அடக்குவித்தே
எட்டுக் கிசைந்த இரண்டும்எனக் கிசைவித் தெல்லா இன்னமுதும்
அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
9
4872. புல்லுங் களபப் புணர்முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும்என்
தொல்லும் உலகப் பேராசை உவரி கடத்தி எனதுமனக்
கல்லுங் கனியக் கரைவித்துக் கருணை அமுதங் களித்தளித்தே
அல்லும் பகலும் எனதுளத்தே அமர்ந்தோய் யான்உன் அடைக்கலமே.
9
4873. பிச்சங் கவரி நிழற்றியசைத் திடமால் யானைப் பிடரியின்மேல்
நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுதேத்த
எச்சம் புரிவோர் போற்றஎனை ஏற்றா நிலைமேல் ஏற்றுவித்தென்
அச்சந் தவிர்த்தே ஆண்டுகொண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
10
4874. இருளைக் கெடுத்தென் எண்ணமெலாம் இனிது முடிய நிரம்புவித்து
மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகைபுரிந்து
தெருளைத் தெளிவித் தெல்லாஞ்செய் சித்தி நிலையைச் சேர்வித்தே
அருளைக்கொடுத்தென் தனைஆண்டோ ய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
11
திருச்சிற்றம்பலம்
Back


105. இறைவரவு இயம்பல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4875. அப்பன்வரு தருணம்இதே ஐயம்இலை கண்டாய்
அஞ்சாதே அஞ்சாதே அகிலமிசை உள்ளார்க்
கெய்ப்பறவே சத்தியம்என் றுரைத்திடுநின் உரைக்கோர்
எள்ளளவும் பழுதுவரா தென்னிறைவன் ஆணை
இப்புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும்
எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்திமகிழ்ந் திடவே
செப்பம்உறு திருவருட்பே ரொளிவடிவாய்க் களித்தே
செத்தாரை எழுப்புதல்நாம் திண்ணம்உணர் மனனே.
1
4876 இறைவன்வரு தருணம்இதே இரண்டிலைஅஞ் சலை நீ
எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப
நிறைமொழிகொண் டறைகஇது பழுதுவரா திறையும்
நீவேறு நினைத்தயரேல் நெஞ்சேநான் புகன்ற
முறைமொழிஎன் னுடையவன்தான் மொழிந்தமொழி எனக்கோர்
மொழிஇலைஎன் உடலாவி முதல்அனைத்தும் தானே
பொறையுறக்கொண் டருட்ஜோதி தன்வடிவும் உயிரும்
பொருளும்அளித் தெனைத்தானாப் புணர்த்தியது காணே.
2
4877 என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர்
எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே
தன்னருள்தெள் அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான்
சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல்
மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே
வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள்உன் வசத்தால்
உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே
உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.
3
4878 எல்லாஞ்செய் வல்லதனிப் பெருந்தலைமைச் சித்தன்
எனமறைஆ கமம்புகலும் என்இறைவன் மகிழ்ந்தே
நல்லார்கள் வியக்கஎனக் கிசைத்தபடி இங்கே
நான்உனக்கு மொழிகின்றேன் நன்றறிவாய் மனனே
பல்லாரும் களிப்படையப் பகல்இரவும் தோற்றாப்
பண்பின்அருட் பெருஞ்ஜோதி நண்பினொடு நமக்கே
எல்லாநன் மைகளும்உற வருதருணம் இதுவே
இவ்வுலகம் உணர்ந்திடநீ இசைத்திடுக விரைந்தே.
4
4879 கருநாள்கள் அத்தனையும் கழிந்தனநீ சிறிதும்
கலக்கமுறேல் இதுதொடங்கிக் கருணைநடப் பெருமான்
தருநாள்இவ் வுலகமெலாம் களிப்படைய நமது
சார்பின்அருட் பெருஞ்ஜோதி தழைத்துமிக விளங்கும்
திருநாள்கள் ஆம்இதற்கோர் ஐயம்இலை இதுதான்
திண்ணம்இதை உலகறியத் தெரித்திடுக மனனே
வருநாளில் உரைத்திடலாம் எனநினைத்து மயங்கேல்
வருநாளில் இன்பமயம் ஆகிநிறை வாயே.
5
4880 உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரையீ
துணர்ந்திடுக மனனேநீ உலகமெலாம் அறிய
வள்ளல்வரு தருணம்இது தருணம்இதே என்று
வகுத்துரைத்துத் தெரித்திடுக மயக்கம்அணுத் துணையும்
கொள்ளலைஎன் குருநாதன் அருட்ஜோதிப் பெருமான்
குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய்
நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல்
நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே.
6
4881 மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து
வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம்
மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே
விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே
நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல்
நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல்
தூயதிரு அருட்ஜோதித் திருநடங்காண் கின்ற
தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே.
7
4882 மாற்றுரைக்க முடியாத திருமேனிப் பெருமான்
வருதருணம் இதுகண்டாய் மனனேநீ மயங்கேல்
நேற்றுரைத்தேன் இலைஉனக்கிங் கிவ்வாறென் இறைவன்
நிகழ்த்துகஇன் றென்றபடி நிகழ்த்துகின்றேன் இதுதான்
கூற்றுதைத்த திருவடிமேல் ஆணைஇது கடவுள்
குறிப்பெனக்கொண் டுலகமெலாம் குதுகலிக்க விரைந்தே
சாற்றிடுதி வருநாளில் உரைத்தும்எனத் தாழ்க்கேல்
தனித்தலைவன் அருள்நடஞ்செய் சாறொழியா இனியே.
8
4883 ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன்
இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன்
ஓதுகநீ என்றபடி ஓதுகின்றேன் மனனே
உள்ளபடி சத்தியம்ஈ துணர்ந்திடுக நமது
தீதுமுழு தும்தவிர்த்தே சித்திஎலாம் அளிக்கத்
திருவருளாம் பெருஞ்ஜோதி அப்பன்வரு தருணம்
ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய்
எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே.
9
4884 தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான
சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக்
கனித்தஉளத் தொடும்உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர்
கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன் றறிக
இனித்தஅருட் பெருஞ்சோதி ஆணைஎல்லாம் உடைய
இறைவன்வரு தருணம்இது சத்தியமாம் இதனைப்
பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே
பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே.
10
திருச்சிற்றம்பலம்
Back


106. திருப்பள்ளி எழுச்சி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

4885. பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்னொளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும்ஆ னான்என ஆகம வேத
முறைகளெ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் சோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
1
4886 துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
2
4887 நிலந்தெளிந் ததுகண மழுங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
3
4888 கல்லாய மனங்களும் கரையப்பொன் னொளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் சோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
4
4889 புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
பொருப்பின்மேல் பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை தொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் சோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
5
4890 ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
6
4891 சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ளாரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் சோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
7
4892 மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
8
4893 மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
9
4894 அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
10
திருச்சிற்றம்பலம்
Back


107. திரு உந்தியார்

கலித்தாழிசை

4895. இரவு விடிந்தது இணையடி வாய்த்த
பரவி மகிழ்ந்தேன்என்று உந்தீபற
பாலமுது உண்டேன்என்று உந்தீபற.
1
4896 பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த
தொழுது மகிழ்ந்தேன்என்று உந்தீபற
தூயவன் ஆனேன்என்று உந்தீபற.
2
4897 தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்
ஏக்கம் தவிர்ந்தேன்என்று உந்தீபற
இன்னமுது உண்டேன்என்று உந்தீபற.
3
4898 துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது
இன்பம் கிடைத்ததென்று உந்தீபற
எண்ணம் பலித்ததென்று உந்தீபற.
4
4899 ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.
5
4900 திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று
பரைஒளி ஓங்கிற்றென்று உந்தீபற
பலித்தது பூசையென்று உந்தீபற.
6
4901 உள்ளிருள் நீங்கிற்றென் உள்ளொளி ஓங்கிற்றுத்
தெள்ளமுது உண்டேன்என்று உந்தீபற
தித்திக்க உண்டேன்என்று உந்தீபற.
7
4902 எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற.
8
4903 தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேன்என்று உந்தீபற
சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.
9
4904 முத்தியைப் பெற்றேன்அம் முத்தியினால் ஞான
சித்தியை உற்றேன்என்று உந்தீபற
சித்தனும் ஆனேன்என்று உந்தீபற.
10

திருச்சிற்றம்பலம்
Back


108. அருள் அற்புதம்

சிந்து

பல்லவி

4905. அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே. 1

கண்ணிகள்

4906. சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
கற்பத நெஞ்சக் கரிசு துறந்தது
கற்றபொய்ந் நூல்கள் கணத்தே மறந்தது
அற்புதம் 1
4907 செத்தார் எழுகின்ற திருநாள் அடுத்தது
சிவநெறி ஒன்றேஎங் கும்தலை எடுத்தது
இத்தா ரணிமுதல் வானும் உடுத்தது
இறவா வரந்தான் எனக்குக் கொடுத்தது
அற்புதம் 2
4908 ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது
அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது
ஈனந்த மாயை இருள்வினை சோர்ந்தது
என்னருட் சோதிஎன் உள்ளத்தில் ஆர்ந்தது
அற்புதம் 3
4909 சத்திய ஞான சபைஎன்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்
நித்திய ஞான நிறையமு துண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்
அற்புதம்4
4910 வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர்
அற்புதம்5
4911 புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்
மறங்கூறி னோம்என்செய் வோம்என்று கூயினர்
வாழிய என்றுசொல் வாயினர் ஆயினர்
அற்புதம்6
4912 வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது
அற்புதம்7
4913 சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது
8
அற்புதம் அற்புத மே - அருள்
அற்புதம் அற்புத மே.

திருச்சிற்றம்பலம்
Back


109. ஆணிப்பொன்னம்பலக் காட்சி

சிந்து

பல்லவி

4914. ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி. 1

கண்ணிகள்
4915. ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி - அம்மா
வீதிஉண் டாச்சுத டி.
ஆணி 1
4916 வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு
மேடை இருந்தத டி - அம்மா
மேடை இருந்தத டி.
ஆணி 2
4917 மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி - அம்மா
கூடம் இருந்தத டி.
ஆணி 3
4918 கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி - அம்மா
மாடம் இருந்தத டி.
ஆணி 4
4919 ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்னென்று சொல்வன டி - அம்மா
என்னென்று சொல்வன டி.
ஆணி 5
4920 ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி - அம்மா
சீர்நீலம் ஆச்சுத டி.
ஆணி 6
4921 பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி - அம்மா
பவளம தாச்சுத டி.
ஆணி 7
4922 மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா
மாணிக்கம் ஆச்சுத டி.
ஆணி 8
4923 பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி - அம்மா
பேர்மணி ஆச்சுத டி.
ஆணி 9
4924 வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி - அம்மா
வெண்மணி ஆச்சுத டி.
ஆணி 10
4925 புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி - அம்மா
பொன்மணி ஆச்சுத டி.
ஆணி 11
4926 பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி - அம்மா
படிகம தாச்சுத டி.
ஆணி 12
4927 ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் றம்பம டி - அம்மா
இசைந்தபொற் றம்பம டி.
ஆணி 13
4928 பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட
புதுமைஎன் சொல்வன டி - அம்மா
புதுமைஎன் சொல்வன டி.
ஆணி 14
4929 ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
என்னள வல்லவ டி - அம்மா
என்னள வல்லவ டி.
ஆணி 15
> 4930 ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
ஆகவந் தார்கள டி - அம்மா
ஆகவந் தார்கள டி.
ஆணி 16
4931 வந்து மயக்க மயங்காமல் நான்அருள்
வல்லபம் பெற்றன டி - அம்மா
வல்லபம் பெற்றன டி.
ஆணி 17
4932 வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி - அம்மா
மணிமுடி கண்டேன டி.
ஆணி 18
4933 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி - அம்மா
மற்றது கண்டேன டி.
ஆணி 19
4934 கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்தத டி - அம்மா
கோயில் இருந்தத டி.
ஆணி 20
4935 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றன டி - அம்மா
கூசாது சென்றன டி.
ஆணி 21
4936 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள்
கோடிபல் கோடிய டி - அம்மா
கோடிபல் கோடிய டி.
ஆணி 22
4937 ஆங்கவர் வண்ணம்வெள் வண்ணம்செவ் வண்ணமுன்
ஐவண்ணம் ஆகும டி - அம்மா
ஐவண்ணம் ஆகும டி.
ஆணி 23
4938 அங்கவ ரெல்லாம்இங் கார்இவர் என்னவும்
அப்பாலே சென்றன டி - அம்மா
அப்பாலே சென்றன டி.
ஆணி 24
4939 அப்பாலே சென்றேன்அங் கோர்திரு வாயிலில்
ஐவர் இருந்தார டி - அம்மா
ஐவர் இருந்தார டி.
ஆணி 25
4940 மற்றவர் நின்று வழிகாட்ட மேலோர்
மணிவாயில் உற்றேன டி - அம்மா
மணிவாயில் உற்றேன டி.
ஆணி 26
4941 எண்ணும்அவ் வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தார டி - அம்மா
இருவர் இருந்தார டி.
ஆணி 27
4942 அங்கவர் காட்ட அணுக்கத் திருவாயில்
அன்பொடு கண்டேன டி - அம்மா
அன்பொடு கண்டேன டி.
ஆணி 28
4943 அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன்
அம்மை இருந்தாள டி - அம்மா
அம்மை இருந்தாள டி.
ஆணி 29
4944 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி - அம்மா
அமுதமும் உண்டேன டி.
ஆணி 30
4945 தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி - அம்மா
சந்நிதி கண்டேன டி.
ஆணி 31
4946 சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி - அம்மா
சாமி அறிவார டி.
32
ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி - அம்மா
அற்புதக் காட்சிய டி.
திருச்சிற்றம்பலம்
Back

110. அருட்காட்சி

சிந்து

பல்லவி

4947. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுத டி - அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி.(369)
1
(369). மயில் - விந்து. குயில் - நாதம்.
4948 துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேன டி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி.
2
4949 சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.
3
4950 பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன டி - அக்கச்சி
ஐயரைக் கண்டேன டி.
4
திருச்சிற்றம்பலம்
Back

111. பந்தாடல்

சிந்து

பல்லவி

4951. ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து. 1
கண்ணிகள்

4952. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 1
4953 இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 2
4954 இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 3
4955 சதுமறை(370) ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 4
(370). சதுர்மறை - பொ. சு., ச. மு. க. பதிப்புகள்
4956 தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 5
4957 வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 6
4958 சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 7
4959 துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 8
4960 ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
ஆடேடி 9
4961 துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
10
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.
கலிவிருத்தம்
4962 பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்த�