அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங் கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத் துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான் இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித் தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே