பாடல் எண் :3800
அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன்
அச்சம்எலாம் துன்பம்எலாம் அறுத்துவிரைந் துவந்தே
இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின்
தாளிணைகள் அறிகஇது தயவுடையோய் எவர்க்கும்
துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே
சுத்தசிவா னந்தஅருட் சோதிநடத் தரசே
பாடல் எண் :4079
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே