அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும் ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம் தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம் மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய் வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில் இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே
அருளுடைய நாயகிஎன் அம்மைஅடி யார்மேல் அன்புடையாள் அமுதனையாள் அற்புதப்பெண் ணரசி தெருளுடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப மருளுடைய மாயையெலாந் தேயமணி மன்றின் மாநடஞ்செய் துரையேநின் மன்னருளின் திறத்தை இருளுடைய மனச்சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன்என் றறிஞரெலாம் எண்ணிமதித் திடவே