அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி ஆடும்அதன் ஆட்டத்திலே உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட் குபகரித் தருளும்ஒளியே குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக் குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும் குலாவும்ஒரு தண்மதியமே துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே