ஆட்டு கின்றதற் காகஅம் பலத்துள் ஆடு கின்றசே வடிமலர் நினையாய் வாட்டு கின்றனை வல்வினை மனனே வாழ்ந்து நீசுக மாய்இரு கண்டாய் கூட்டு கின்றநம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர்க் கோயில்சூழ்ந் தின்பம் ஈட்டு கின்றதற் கேகின்றேன் உனக்கும் இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே
ஆட்டு கின்றநீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம்நான் ஆடுகின் றதனைக் காட்டு கின்றவான் கடலிடை எழுந்த காள முண்டஅக் கருணையை உலகில் நாட்டு கின்றனை ஆயில்இக் கொடிய நாய்க்கும் உன்னருள் நல்கிட வேண்டும் தீட்டு கின்றநல் புகழ்ஒற்றி அரசே திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே