பாடல் எண் :592
உண்மை அறியேன் எனினும்எனை உடையாய் உனையே ஒவ்வொருகால்
எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத
வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை
வண்மை உடையாய் என்செய்கேன் மற்றோர் துணைஇங் கறியேனே
பாடல் எண் :1041
உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே
உப்பி லிக்குவந் துண்ணுகின் றவர்போல்
வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி
வெளுக்கின் றாய்உனை வெறுப்பதில் என்னே
தண்மை மேவிய சடையுடைப் பெருமான்
சார்ந்த ஒற்றியந் தலத்தினுக் கின்றே
எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பி னேன்பழி இல்லைஎன் மீதே
பாடல் எண் :1308
உண்மை நின்அருட் சுகம்பிற எல்லாம்
உண்மை அன்றென உணர்த்தியும் எனது
பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண் டுலகப்
பித்தி லேஇன்னும் தொத்துகின் றதுகாண்
வண்மை ஒன்றிலேன் எண்மையின் அந்தோ
வருந்து கின்றனன் வாழ்வடை வேனோ
ஒண்மை அம்பலத் தொளிசெயும் சுடரே
ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே