எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல்ஆழ்ந் திளைக்கின் றேன்இனி என்செய்வன் அடியேன் தஞ்சம் என்றும திணைமலர் அடிக்கே சரண்பு குந்தனன் தயவுசெய் யீரேல் வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனுமீன் வாரிக் கொண்டெனை வாய்மடுத் திடுங்காண் மஞ்ச ளாவிய பொழில்ஒற்றி உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண் டையநின் இன்னருள் விரும்பி வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின்னலால் அறிகிலேன் ஒன்றும் தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே