என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன் றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின் றேங்கிய இராவில்ஒருநாள் மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக் கின்றகுருவே நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே நான்கண்டு கொண்டமகிழ்வே வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம் வல்லநட ராசபதியே