என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற என்தாயே என்குருவே எளியேன் இங்கே தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ மின்னரசே பெண்ணமுதே என்று மாதர் வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே
என்னரசே நின்னடிக்கீழ் என்னிடரை நீக்கெனநான் சொன்னதலால் தாயுடனும் சொன்னேனோ - இன்னுமிந்தத் துன்பச் சுமையைச் சுமக்கமுடி யாதென்னால் அன்பர்க் கருள்வோய் அருள்