எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக் களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத் தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே
எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால் வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன் மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய் ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம் உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே