ஐயநின் சீர்பேசு செல்வர்வாய் நல்லதெள் அழுதுண் டுவந்ததிருவாய் அப்பநின் திருவடி வணங்கினோர் தலைமுடி அணிந்தோங்கி வாழுந்தலை மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள் மிக்கஒளி மேவுகண்கள் வேலநின் புகழ்கேட்ட வித்தகர் திருச்செவி விழாச்சுபம் கேட்கும்செவி துய்யநின் பதம்எண்ணும் மேலோர்கன் நெஞ்சம்மெய்ச் சுகருப மானநெஞ்சம் தோன்றல்உன் திருமுன் குவித்தபெரி யோர்கைகன் சுவர்ன்னமிடு கின்றகைகள் சையம்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே