பாடல் எண் :2592
கற்பவைஎ லாங்கற்றுள் உணர்பவைஎ லாமனக் கரிசற உணர்ந்து கேட்டுக்
காண்பவைஎ லாங்கண்டு செய்பவைஎ லாஞ்செய்து கருநெறி அகன்ற பெரியோர்
பொற்பவைஎ லாஞ்சென்று புகல்பவைஎ லாங்கொண்டு புரிபவை எலாம்பு ரிந்துன்
புகழவைஎ லாம்புகழ்ந் துறுமவைஎ லாம்உறும் போதவை எலாம்அ ருளுவாய்
நிற்பவைஎ லாம்நிற்ப அசைபவைஎ லாம்அசைய நிறைபவை எலாஞ்செய் நிலையே
நினைபவைஎ லாம்நெகிழ நெறிஅவைஎ லாம்ஓங்கும் நித்தியா னந்த வடிவே
அற்புடைய அடியர்புகழ் தில்லையம் பதிமருவும் அண்ணலார் மகிழும் மணியே
அகிலாண்ட மும்சரா சரமும்ஈன் றருள்பரசி வானந்த வல்லி உமையே