கலக்கம் அற்றுநான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள்எந்நாள் இலக்கம் உற்றறிந் திடஅருள் புரிகுவாய் எந்தைஇவ் விரவின்கண் துலக்க முற்றசிற் றம்பலத் தாடுமெய்ச் சோதியே சுகவாழ்வே அலக்கண் அற்றிடத் திருவருள் புரியும்என் அப்பனே அடியேற்கே கட்டளைக் கலிப்பா
கலக்கம் நீங்கினேன் களிப்புறு கின்றேன் கனக அம்பலம் கனிந்தசெங் கனியே துலக்கம் உற்றசிற் றம்பலத் தமுதே தூய சோதியே சுகப்பெரு வாழ்வே விலக்கல் இல்லதோர் தனிமுதல் அரசே வேத ஆகமம் விளம்புமெய்ப் பொருளே அலக்கண் அற்றமெய் அன்பர்தம் உளத்தே அமர்ந்த தோர்சச்சி தானந்த சிவமே