பாடல் எண் :3681
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக்
கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக் காட்சியே கனகமலையே
தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச்
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற தோறும்அந்தோ
வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என்
மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில் வரும்இன்பம் என்புகலுவேன்
தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே
துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட் சோதிநட ராசகுருவே