சந்ததமும் அழியாமல் ஒருபடித் தாயிலகு சாமிசிவ காமியிடமார் சம்புவா மென்னுமறை ஆகமத் துணிவான சத்யமொழி தன்னைநம்பி எந்தையே என்றறிஞர் யாவரும் நின்புகழை ஏத்திவினை தனைமாற்றியே இன்பமய மாயினிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன்அந்தோ சிந்தையா னதுகலக் கங்கொண்டு வாடலென் செப்புவாய் வேதனாதி தேவர்முனி வர்கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல்புரிய அந்தணர்கள் பலகோடி முகமனா டப்பிறங் கருண்முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞானிஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே