சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும் தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன் உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன் அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும் பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம் பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி